How do we live with those who do not believe in God? | CJ

How do we live with those who do not believe in God?

How do we live with those who do not believe in God?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களோடு நாம் வாழ்வது எப்படி? உதாரணமாக என் வாழ்க்கைத் துணைக்கு ‘கடவுள் இல்லை’தான்.


பதில்: 

உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய நிலைதான் இது. உண்மையிலேயே, தெய்வம் உண்டா? இல்லையா? என்ற கேள்வியின் மூலமாக நிரூபணம் கேட்பவர்களுக்கு எந்த பதிலும் நாம் தந்து நிரூபித்துவிட முடியாது. அது நமக்கு தேவையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது அந்த ‘தெய்வீகத்திற்கே’ தேவையில்லாதது.

தெய்வீகத்தை விளக்க வந்த பக்தி, உண்மை இழந்து, வேறுபாதை நோக்கி நகர்ந்து விட்டதால், பெரும்பாலான மக்கள் அதில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது உண்மையே. நம்பிக்கை இழப்பு என்பதால் இருந்த, இருக்கிற உண்மை மறைந்துவிடுமா என்ன?!

எல்லாமே அறிவியல் / விஞ்ஞானம் என்ற கருத்துக்களில் மூழ்கிப் போனவர்களின் கருத்து, தெய்வம் என்பது பொய், கடவுள் என்பது இல்லை என்பதுதான். இருக்கட்டும். அது அவர்களின் கருத்துரிமை. அதை நாம் தடுக்கவோ, மாற்றி அமைக்கவோ முடியாதுதான். இவர்களுக்கு குருமகான் வேதாத்திரி மகரிஷி கொடுத்த பதிலையே நாமும் தரலாம். 

‘நாம் சாப்பிடுகிறோம். பலவித உணவுப் பொருட்களை சமைத்தோ, அப்படியேவோ உண்கிறோம். உணவு வயிற்றில் என்ன ஆகிறது? செரிமானம் ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஏழு தாதுக்களாகவும் மாறுகிறது. இதை யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? உங்களுக்கு யாரேனும் செய்கிறார்களா? இந்த சமூகமோ, அரசாங்கமோ செய்கிறதா?’

‘இல்லை, இது இயற்கை என்று பதில் சொல்வீர்கள். அந்த இயற்கையை, அந்த ஆற்றலை நாம் தெய்வீகம், தெய்வம் என்று சொல்லுகிறோம். அந்த தெய்வீகத்தை வணங்குகிறோம். அதை அறிவதற்கு கடந்து உள்ளே போகவேண்டும் என்பதால் கடவுள் என்று வினைக்குறிப்பாக சொன்னது, கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது.'

‘எல்லாம் விஞ்ஞானம் என்று சொல்லும் நீங்கள், உலகில் தேர்ந்த பல அனுபவம் வாய்ந்த, விஞ்ஞானிகளிடம், இரண்டு இட்லியை கொடுத்து, இதை ரசம், ரத்தமாக்கித் தாருங்கள் என்று சொல்லுங்களேன்’ என்று கேட்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

தன்னை விட பெரிய, மகத்தான, உண்மையான, முழுமையான பேராற்றலையும், பேரறறிவையும், தெய்வம் என்று சொல்லுவதும், மதிப்பதும், வணங்குவதும், நம்பிக்கையோடும் இருப்பதில் என்ன தவறு?! ஆனால் பக்தி வழியில் ஏற்பட்ட குழப்பங்களுக்காக முழுமையாக கைவிட்டு விடுவது, நம்மைக்குறித்து அறியும் ‘நான் யார்?’ என்ற பயணத்தை தடுக்கும். நம் பிறவிக்கடனான கர்ம வினை தீர்த்தலை மட்டுப்படுத்தும்.

எனினும், அவர்வர்கள், அவர்களின் பாதையில் செல்ல விட்டுவிடுங்கள். என்றாவது ஒருநாள், உண்மை உணர்ந்தால் ‘தெய்வீகத்தை’ ஏற்றுக்கொள்வார்கள். காலம் அவர்களுக்கு பதில் தந்துவிடும்.

வாழ்க வளமுடன்.