If Kayakalpa yoga helps to lifetime120 years, why we live long?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் செய்தால் 120 ஆண்டுகள் மனிதன் வாழமுடியும் என்பது உண்மையா?! எதற்காக 120 ஆண்டுகள் வாழனும்?
பதில்:
ஆம், உண்மைதான். ஆனால் இதற்கு சில விதிகள் உள்ளன. அதன்படி கற்றுத்தேர்ந்து, பயன்படுத்தி, வாழ்ந்து வந்தால் நிச்சயமாக, மனிதனுக்கு இயற்கை அளித்த 120 ஆண்டுகள் வாழமுடியும் என்பது உறுதி. அவை என்னென்ன?
காயகல்பம் என்பது சித்தர்களின் அற்புதக் கலை. இந்தக்கலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆராய்ச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டு, மனவளக்கலை வழியாக கற்றுத் தரப்படுகிறது. இப்பயிற்சியை ஒருவர், பருவம் வந்த நிலையில், அதாவது 14 வயது நிறைவில் இருந்தே கற்றுக் கொள்ளவேண்டும். நாள் தவறாது பயிற்சியை செய்துவரவும் வேண்டும். மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவ்வைந்தில் அளாவு முறையோடும் வாழ்ந்துவர பழகவேண்டும்.
ஒரு மனிதனின் ஆயுள் பூமியின் சுழற்சியாலும், அதன் மையத்தில் உண்டாகும் ஆற்றலாலும் தான் நிர்ணயிக்கப்படுவதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். உயிருக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு, தொடர்பு தினமும் விலகிக் கொண்டே இருக்கிறது என்றும் சொல்லுவார். முன்னதாக, ஆசான் திருவள்ளுவர், ஒரு நாள் என்பது உயிரை அறுக்கும் வாள் என்று பொருள்பட ஆயுள் குறைவது குறித்து தன் குறளில் சொல்லுகிறார்.
சித்தர்களின் காயகல்பபயிற்சியை தொடர்ந்து செய்வதால், ஓவ்வொருநாளும், நம் உடலில் இருந்து வெளியேறக்கூடிய உயிர்த்துகள்கள் நிறுத்தி, பாதுகாக்கப்படுகின்றன. காயகல்ப பயிற்சியில், வித்துவின் நீர்த்தன்மையை கெட்டிப்படுத்தி வருவதால், அந்த வித்துவே, உயிர்த்துகள்களை காக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வித்து மற்றும் உயிர்த்துகள்களின் கூட்டு, மனிதனின் ஆயுளை, இயற்கையின் சராசரியான 120 ஆண்டுகள் காக்கும் தன்மையை பெற்றுக்கொள்கிறது. இது வெறும் நம்பிக்கையல்ல. தினமும் பயிற்சி செய்துவருபவர்கள் உணர்ந்த உண்மையாகும்.
சரி, ஏன் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என்று கேட்கிறீர்கள். வேடிக்கையான கேள்வி, எதை எப்படி அனுபவித்து வாழ்ந்து மடிந்தால் போதும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் இந்த கேள்வியில், எது வாழ்க்கை உண்மை? பிறவிக்கடமை? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் இயற்கைக்கும் என்ன தொடர்பு? மனம் என்பது என்ன? உயிர் என்பது என்ன? இறை என்பது என்ன? ஏன் பிறந்தேன்? ஏன் இறக்கிறேன்? பிறக்கும் முன் என் நிலை என்ன? இறந்த பிறகு என் நிலை என்ன? என்ற கேள்விக்கெல்லாம் உங்களுக்கு நேரமும், அவகாசமும், உண்மை அறியும் ஆர்வமும் இல்லை என்பதை சொல்லிவிடுகிறீர்கள். இந்த உண்மைகளை அறிந்துகொள்ளவும், அந்த உண்மைகளை பிறருக்கு பகிர்ந்து, அவர்களையும் உயர்த்தவும் வாழ்நாள் உதவிடுமே?! எனினும், இந்த உலகில் எப்படி வாழ்வது, எதை தேடுவது, அனுபவிப்பது என்பது உங்கள் விருப்பமே! இதில் மாற்றுக்கருத்தில்லை!
வாழ்க வளமுடன்