April 2024 | CJ

April 2024

What is the purpose of building a temple of consciousness?


அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா! ஆங்காங்கே ஊர்களில் அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்: 

        உருவ வழிபாட்டிற்கான கோயில்கள் ஆயிரமாயிரம் கட்டியிருக்கிறோம். நாம் அதிலெல்லாம் பயன் கண்டு வருகிறோம். ஆனால் அறிவுத்திருக்கோயில் உலகத் தொடர்பாக வந்த ஆன்மீகப் பயணத்திலேயே ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. பல கோயில்கள் விக்ரக ஆராதனைக்காக   கட்டப்பட்டிருந்தாலும் “கோயில்” என்பதன் அர்த்தத்தை அளிக்கக் கூடிய வகையில் அறிவுத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. 

இதனால் பக்தி மார்க்கத்திலுள்ள விக்ரக ஆராதனைகளெல்லாம் பயனற்றது என்று கொள்ள வேண்டாம், அப்படிச் சொல்லவும் முடியாது. ஏனென்றால் மனிதன் எந்த உருவத்தை வணங்கினாலும் சரி, தன் அறிவைக் கொண்டு வடிவெடுத்துத்தான் வணங்குகின்றான்.

இல்லங்களிலே ஒரு புரோகிதர் மூலமாக ஏதேனும் ஒரு சடங்கு செய்தாலும்  ஒரு விநாயகர் உருவையோ அல்லது வேறு உருவையோ வைத்து முதலில் “ஆவாகயாமி” என்று சொல்வார்கள். எனது அறிவை அதில் வைக்கின்றேன் என்பது அதன் பொருள். முடிவில் “யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யாமி” என்று கூறுவார்கள். எங்கே இருந்து கொண்டு வந்தேனோ அறிவை அந்த இடத்திலேயே கொண்டு போய்ச் சேர்த்து விட்டேன் என்பது பொருள். இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த முறையில் இறைவணக்கத்தை நடத்தினாலும் நம் அறிவைத்தான் விரித்து அவ்வுருவாக்கி, அக்குணமாக்கி வணங்குகிறோம் என்பது விளங்குகிறதல்லவா?

“கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் நீ

கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே”

என்று ஒரு கவியில் கொடுத்துள்ளேன்.

நீங்கள் அறிவுத்திருக்கோயிலுக்கு வந்து எளியமுறை உடற்பயிற்சி கற்று உடல்நலம் பெற்றும்; எளியமுறைக் குண்டலினி தவம் பயின்று மனவளம் பெற்றும்; சித்தர்களின் கலையான காயகல்பம் பயின்று கருமையத் தூய்மையும் பெறலாம். மேலும் மௌனம், அகத்தாய்வில் கலந்து குணநலப்பேறு பெற்றும் சிறப்பாக வாழ்வதோடு வீடுபேறும் அடையலாம்.

வாழ்க வளமுடன்!!

What is the truth and meaning of Culture?


கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன், ஐயா, கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கத்தை நாங்கள் அறியலாமா?


பதில்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்குகிறார், 

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை"  "ஆச்சாரம்"  என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word).  இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால், இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே,  கைத்திறனாலேயே உருமாற்றி,  அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள்,  அது தான் கலை. 

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு  தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால்,  அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்".  துன்பம் எழாமல் காக்கக்கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு,  இது எல்லாம் பார்த்தோமானால்,  அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள்.   அதனால்,  கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்;  நல்ல அழகான சொல்லாக இருக்கிறது,  நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள்.  "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி,  அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.    

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


Why most of persons stayed long with their personality?


மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


பதில்:

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இதைச் சொல்லுகின்ற உங்களுக்கும்கூட ‘நான் இப்படித்தான்’ என்ற நிலைபாடு இருக்கும் என்பதும் உண்மையே. அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், நீங்களே யாரிடமாவது, உங்களைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டால், அவர்கள் சொல்லிவிடுவார்கள். நாம் யார்? நம் நடவடிக்கைகள் என்ன? என்று விபரமாக சொல்லுவார்கள்.

ஒவ்வொடு பொருளுக்கும் தரம், குணம், செயல்பாடு என்று இருப்பதுபோலவே, எல்லா ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் உண்டு. அதை குணாதசியம் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் Quality, Personality என்று குறிப்பிடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிக தெளிவாக ‘குணநலப்பேறு’ என்று சொல்லுகிறார். இதிலேயே குணம், நலம், அதனால் அடையும் பேறு என்ற மூன்று வார்த்தைகளும், பொருள்களும் நிறைந்திருக்கக் காணலாம்.

இயக்கமற்ற பொருட்கள், ஓரரறிவு தாவரங்கள் ஆகிய தன்னுடைய கருவழியாகவே தன்னுடைய ‘குணநலப்பேறு’ பெற்றுக்கொள்கிறது. ஒரு களிமண், ஒரு பாறை, உப்புக்கல், மிளகாய், மாம்பழம் என்று உதாரணம் எடுத்துகொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரறிவு முதல், ஆறறிவு மனிதனாக நம்மையும் சேர்த்து, கருவழியான ‘குணநலப்பேறு’ மட்டுமல்லாமல், வாழ்கின்ற சூழல், கூட்டு, சமூகம், தேவை, எதிர்பார்ப்பு, அனுபவம் என்று பலவழிகளில் புதிதாகவும் ‘குணநலப்பேறு’ அமைந்துவிடுகிறது.

முதலில் ஏற்படும் தேவை என்ற உணர்வுதான் எல்லா ‘குணநலப்பேறு’நிலைக்கும் அடிப்படை ஆகிறது. அதன்படிதான் மனிதர்கள் தங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய மனிதர்கள், தனக்கு பாதிப்பு, இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். ஒருசிலர் என்ன நிகழ்ந்தாலும் ‘நான் இப்படித்தான்’ என்ற நிலையை (உயிரே போனாலும் கூட) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி, இத்தகைய, இயற்கைதான் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலை மாறவேண்டும், ‘குணநலப்பேறு’ அடையவேண்டும் என்றுதான், அகத்தாய்வும், தற்சோதனையும் அமைத்திருக்கிறார். முழுமையாக தங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல, இயற்கையாக ஒன்றிணைந்து இருப்பது என்ற தகுதியையும் அது தரும். மேலும் கருவழியான பதிவுகளை அகற்றிடவும் துணை செய்யும். யோகத்தின் வழியாக மட்டுமே இந்த Personality மாறுமே தவிர, வேறெந்த development பயிற்சியாலும் மாறிடாது என்பதை அறிந்துகொள்க.

வாழ்க வளமுடன்

-


Is it right for us to live by greeting others?


எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


பதில்:

இதே போன்றதொரு கேள்வி வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அது ‘தவறு செய்பவர்கள் இந்த உலகில் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். நாம் ஏன் திருத்தமாக வாழவேண்டும்?’ என்ற கேள்வி. அதற்கு மகரிஷின் பதில் ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி கொஞ்சநாள் தவறு செய்தே வாழ்ந்து பாருங்களேன்’ என்று தருகிறார்.

நம்முடைய பார்வைக்கு, தவறு செய்பவர்கள் ‘நன்றாக’ இருப்பதுபோலவும், செழிப்பாக, இன்பமாக, நிறைவாக வாழ்வது போலவும் தெரியும், ஆனால், அவர்கள் மனதிலும், உடலிலும், வீட்டிலும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் எதுவுமே நமக்கு தெரியாது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்கி எழுவார்களா? என்பது கூட கேள்விதான். அதை அவர்கள் வெளிக்காட்டவும் தயங்குவார்கள் / மறைப்பார்கள். ஆனால் ஏதேனும் வகையில் நாம் அறிய முடியும்தானே?

நாம் நம்முடைய பார்வையை, முன்னோக்கி பார்த்தால் இப்படி வாழ்ந்த முடிந்தவர்கள் பேரும் புகழோடுமா தன்னுடைய காலத்தை முடித்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறந்து பல காலம் ஆனாலும் கூட, அவர்கள்மேல் விழுந்த பழிச்சொல் அகலாமல் இருப்பதை நாம் காணமுடியும். நல்லதிற்கு உதாரணம் என்பது போலவே, தீய நடவடிக்கைகளுக்கும், தவறுகளுக்கும் உதாரணமாக அவர்கள் ‘காலத்தால்’ நின்றிருப்பதை அறியலாம்.

அறிவில், அனுபவத்தில், வாழும் சூழலில் வளர்ச்சி அடையாத சிலர், மற்றவர்கள் வருத்தி, துன்புறுத்தி, பிடுங்கி, வாழ்வதை நாம் காணமுடியும். நாமேகூட அப்படியான சிலரிடம் மாட்டிக்கொண்டு முழித்திருப்போம் என்பதும் உண்மையே. அத்தகைய நிகழ்வுக்குப் பின் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதையும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதையும் சிந்திக்க வேண்டும். அறம் அல்லாத எந்த ஒரு செயலை செய்தாலும், அது இயற்கை எனும் தெய்வீக பேராற்றலால், அவரவர் மனதிற்குள்ளாகவும், கருமையத்திலும் ‘கர்மவினைப்பதிவாக’ பதிவு செய்வதை மறவாதீர்கள். வட்டியும் முதலுமாக என்ற ரீதியில் அதை தீர்க்காமல் விடவே விடாது. அதுதான் இயற்கையின் செயல்விளைவு நீதி.

சாதாரணமாகவே, மனம் ஒப்பாத ஒன்றை செய்துவிட்டு காலம்பூராவும் வருந்துவது மனிதனின் இயல்பு. யோகத்தின் வழியாக மனதை அறிந்த நாம், அப்படியான தவறை நாமே விரும்பி செய்திட முடியுமா? அது நியாயமும் ஆகுமா? இருக்கும் வினைப்பதிவுகளை தீர்க்க மட்டுமேதான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை மறுபடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். தவறு செய்யும் அவர்கள், தவறுமட்டுமே செய்யும் அவர்களுக்கு அதுகுறித்த கவலை இல்லை. அது அவர்கள் பாடு. நாம் நம்மை திருத்திக் கொள்வோம்.

வாழ்க வளமுடன்

-

Please explain Dvaita, Advaita, Vishishtadvaita philosophies?


துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

சுவாமிஜி, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் உணவுப் பெட்டியில் (Tiffin Box) உணவை எடுத்து செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (Essence) தானே?


அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் (Process) இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்தச் செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், “த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் “அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம், “ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று “மாறுபடுகிறது” என்பதை த்வைதம், “எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.


வாழ்க வளமுடன்.

Please explain about the Death and the Eternal after the death?


மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

அன்பரின் கேள்வி: 

சுவாமிஜி! மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உலகில் உயிர் வாழும், மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கும், மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போதுதான் அது வாழ்வு. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையே மரணம் எனப்படும். மரணம் இல்லையென்று கூறமுடியாது.

        உயிரின் இயக்கத்தால்தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையென்றால் உடலிலுள்ள அணுக்கள் தொடர் இயக்கம் சிதைந்து விடும்.

        கூட்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து உயிர்த்துகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தன்னுடைய இயக்கத்தை நடத்திக் கொள்ளத் தொடங்கிவிடும்.

        உதாரணமாக இதற்கு ஒரு கம்பெனியைச் சொல்லலாம். நீதிமன்றத்தின் உத்தரவால் ஒரு கம்பெனியானது உலாவீனம் (Liquidate) செய்யப்படுகிறது. என்று வைத்துக் கொள்வோம்.

        அக்கம்பெனியானது அதன் பெயரில் இறந்துவிட்டது என்றாலும், அதிலுள்ள நிர்வாகிகள், பங்குதாரர்கள், வேலையில் இருந்தவர்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள்.

        கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள். ஆனால் தனித்தியங்குகின்றார்கள்.

            அதேபோல் உடலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து இயங்குகின்றன. அவ்வளவே. அத்தகு தனித்தனியான இயக்கங்களுக்கு மரணம் என்பதில்லை.

        அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.

        இந்த உண்மையை, மனவளக்கலை எனும் எளிய குண்டலினி யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுண்மை விளக்கம் பெற்று, மரணமில்லா பெருவாழ்வு என்ற தத்துவ உண்மையையும் அறியலாம்.

வாழ்க வளமுடன்!

-



Guide me with truth of Pancha Bootha Navagraha Thavam!


பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.

பதில்:

யோகத்தில் இணைந்து தீட்சை பெறாவிட்டாலும் கூட, தனிநபராகவே இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து நன்மையை பெறலாம் என்பது, இத்தவத்தின் சிறப்பாகும். இந்த பிரபஞ்சமும் உலகமும் உண்டாவதற்கு காரணமான பஞ்ச பூத தோற்றங்களை வணங்குவதும், அதன் அருளைப் பெறுவதும், நாம் வாழும் இந்த பூமி உட்பட, சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும், நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றையும் வணங்கி அருளைப்பெறுவதும்தான் இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகும்.

பரிகாரம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருந்தாலும், அந்த பரிகாரம் செய்வதால் எதும் மாறிவிடுவதில்லை. அது அகன்றுவிடுவதும் இல்லை. தீர்மானிக்கப்பட்ட ஒன்று, நிச்சயிக்கப்பட்ட ஒன்று நிகழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வில்லில் ஏற்றப்பட்ட அம்பு, பின்னோக்கி இழுக்கப்பட்டால், அது பாய்ந்துதானே தீரும்?! அதை நாம் நிறுத்திட முடியுமா? எனவே பரிகாரம் செய்தாலும்கூட, அது நிகழந்தே தீரும் என்பது உறுதி. எனினும் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய திடம் கிடைத்துவிடும்.

ஒரு கோவிலுக்குச் சென்று, பூஜை, பரிகாரம், வழிபாடு, நவகிரகங்களை சுற்றிவருதல் ஆகியன எப்படி உங்களுக்கு திருப்தியும், பலனும் அளிக்குமோ, அதைவிடவும் நிறைவான முழுமையான திருப்தியை, பலனை,  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ செய்வதால் பெறலாம். ஆனால், ஏதோ ஒருநாள் செய்துவிட்டால் போதும் என்று நினைத்துவிட முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து செய்துவர வேண்டும். பொதுவாக வாரத்தில் மூன்று நாள் காலையிலோ, மாலையிலோ செய்துவரலாம்.

அவசர கோலத்தில் இல்லாமல், பொறுமையாக, அதற்குரிய நேரம் கொடுத்து, தவம் இயற்றிவருதல் சிறப்பு. நீங்களே வார்த்தைகளாக சொல்லியும் தவம் இயற்றலாம். காணொளி, ஒலி வழியாகவும் கேட்டு தவம் இயற்றலாம். எப்படியாயினும், தவத்தில் நல்ல ஓர்மை நிலை இருக்கவேண்டும். மனம் அதில் ஒன்றி இருப்பது அவசியம்.

இந்த  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ வழியாக, விண், காற்று, வெப்பம், நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களோடு மனதை இணைத்து அதன் நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். அதுபோலவே, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் மீது மனதை ஒன்றிணைத்து, நன்மையையும், காப்பையும் பெறுகிறோம்.  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ நம் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் சிறப்பை தரக்கூடியதவம். நிச்சயமாகவே நம் ஜாதகத்தில் காணப்படுகின்ற ‘கோளாறுகளுக்கு’ தீர்வாகவே அமையும் என்பது உறுதி.  யோகத்தில் தீட்சை பெற்று, இத்தவம் இயற்றும்பொழுது, கூடுதலான ஒரு விளக்கமும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதும் உண்மை.

வாழ்க வளமுடன்
-

If we live in USA, Canada, Malaysia, Singapore, Australia, Dubai, Bahrain any different on yoga benefits?


அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 

Thanks to @arminschieb


பதில்:

அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? ஆனால் இந்த கேள்வி எழுவது இயல்பு. ஒரு புதிய கண்டம், நாடு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, வழக்கம் பழக்கம், உணவு, கால நேரம் இப்படியாக எல்லாமே மாறி இருக்கும் அந்த நிலையில், ஏதோ ஒரு புதிய உலகுக்கே வந்துவிட்டதாகவே தோன்றும். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ‘வேர், மூலம்’ ஒன்றுதான். இந்த உலகமும் ஓன்றுதான். கடல் கடந்து என்று சொல்லுகிறோம். உண்மையிலேயே அவை வெவ்வேறு கடலா? ஒரே கடல்தான், நம்முடைய சௌகரியத்திற்காக வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறோம். எந்த நாட்டின் கடற்கரையில் நின்று, நீங்கள் கையால் நீர் அள்ளினாலும், உங்கள் கால்களை நனைத்தாலும் அது ஒரே நீர் நிலையான கடல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றும், மற்ற எல்லா உலக நாடுகளின் மக்களும் சுவாசிக்கும் காற்றும் ஒன்றுதானே? வேறு தனியாக அந்தந்த நாடுகளில் காற்று தனிப்பட்டு இருக்கிறதா?

எனவே மனிதர்களும், மனிதர்களின் வாழ்க்கைக்கானதும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. உண்ணும் உணவு மாறி இருக்கலாம். ஆனால் செரிமானம், சக்தி, உழைப்பு, ஆற்றல் ஒன்றுதானே? இங்கே விளைவித்தால் அது அங்கே ஏற்றுமதி ஆகிறது. அங்கே விளைவித்தால் அது இங்கே இறக்குமதி ஆகிறது. யாரோ ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு, உலக மக்களின் எல்லாருடைய பயன்பாடுக்கும் கிடைக்கிறது. ஏதோ ஒரு நாட்டின் அரசியல் குழப்பம், மொத்த உலக நாடுகளையும் குழப்புகிறது. இப்படியாக எல்லாமே ஏதோ ஒன்றில் நாம் இணைந்துதான் இருக்கிறோம்.

மனிதன் தன்னுடைய ஆறாம் அறிவால், எண்ணத்தால், சிந்தனையால், எல்லா மனிதர்களோடும் இணைந்தேதான் இருக்கிறான். ஆனால் நாம் அதை அறிவதும் இல்லை, உணர்வதும் இல்லை. ஏதோ நாம் மட்டும் தனித்து இருப்பதுபோலவும், எதைவேண்டுமானலும் செய்துவிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் உங்கள் கூடவே ‘மனசாட்சி’ என்ற ஒன்று, உங்கள் அத்தனை இயக்கங்களையும், மேம்பட்ட CCTV Camera போலவே ஒளி, ஒலி காட்சிகளோடு பதிந்து கொள்கிறது, நீங்கள் அறியாமலேயே. உண்மைதானே?

மனித இனம் ஒன்றுதான், மனமும், உயிரும் ஒன்றுதான். உடலால் பலப்பலவாக பிரிந்து எல்லைகட்டி இருக்கிறோம். அவ்வளவுதானே? இதில் உங்களுக்கு கிடைக்கும் எந்த யோக பயன்களும் மாறிடாது. இறையாற்றலும் மாறிடாது. வீணான கற்பனையும், உதாசீனமும் தேவையில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட யோக வழிமுறைகளையும், பக்தி வழிமுறைகளையும் எந்த மாற்றமும் செய்துகொள்ளாமல், அதன்படியே தொடருங்கள். இறையாற்றலும், அருட்பேராற்றலும் நீங்கள் எங்கிருந்தாலும், அன்பும் கருணையுமாக உங்களைச் சூழ்ந்தே இருக்கிறது என்பதை மறவாதீர்கள். உங்களை எல்லைகட்டிக் கொள்ளாமல், ஒரே உலகம் என்ற கருத்தில் மலருங்கள். ஆர்வத்தோடும், முயற்சியோடும், தொடருங்கள். ‘நான் யார்?’ என்ற உண்மையை நோக்கியும் நகரலாம். இறையுண்மையையும் அறிந்து உயரலாம். பிறப்பின் நோக்கமும், கடமையும் கண்டு வாழ்வின் முழுமையை அடையலாம். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

        ஒரே ஒரு சிறப்பம்சத்தையும் சொல்லவேண்டும். அது என்னவென்றால், உங்களை யோகத்திற்கும், பக்திக்கும் இழுத்துக்கொண்டு திசை திருப்பும், போலியான நபர்கள் உங்களருகில் இருக்கமாட்டார்கள். உங்கள் யோக குரு / ஆசிரியர் சொன்னவற்றை கடைபிடித்து வந்தால் போதுமானது. ஆனால் உலகம் சுருங்கி கையில் வந்துவிட்ட இந்தக்காலத்தில் நீங்கள் ‘இதில்’ கவனமாக இருத்தல் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்
-

Please guide me for make the best Pooja Room at my home with yoga concepts!


வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


பதில்:

வீட்டில் பூஜை அறை அமைக்கவேண்டும் என்று விரும்புவது மிக நல்லதே! வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பக்தியிலும், யோகத்திலும் விருப்பம் கொண்டு, உயர்வதற்கும் உதவும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்களோடு அறநெறியில் வாழ்ந்து, தன் பிறப்பின் நோக்கமும் உண்மையும் அறிந்திட உதவும் அல்லவா? உங்கள் விருப்பம் நிறைவேற இறையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு இதெல்லாம் சொல்லுகிறாரே? என்று எதிர்கேள்வி கேட்க நிறைய அன்பர்கள் நினைப்பார்கள். தங்கள் அறிவால், என்னை மட்டம் தட்டிட துடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள், வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாறை நன்கு படித்திருந்தால் உண்மை விளங்கும். பக்தி இல்லாமல் யோகம் இல்லை. மேலும் பக்தி கனிந்தால் அதுவே யோகம் ஆகும்.

உங்கள் வீட்டில் பூஜை அமைப்பதற்கு இதுவரை உங்களுக்கு கிடைத்த எல்லா அறிவுரைகளையும் விட்டுவிட வேண்டாம். ஆனால் இங்கே தரப்படும் ஆலோசனைகளையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள். முடிவு உங்கள் வசமே தவிர கட்டாயமில்லை. வீட்டில் பூஜை அறை என்பதை, இருவர் உள்ளே நின்றால் போதும் என்ற ரீதியில் அமைக்காமல், நான்கு முதல் பத்து நபர்கள் நன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் இடிக்காமல் வந்து போகும்படி அமைத்துக்கொள்க. அதிக வெளிச்சமும் வேண்டாம். இருட்டாகவும் இருக்கவேண்டாம். காற்று நன்கு உட்சென்று வரும்படி அமைத்தல் நன்று. பெரும்பாலும் இப்போதைய வீட்டு பூஜை அறையில், ஜன்னல்கள் இல்லவே இல்லை. ஆனால் விளக்குகளும், அதன் ஒளிவெள்ளமும் கண்ணைப் பறிக்கிறது. காற்று வந்துபோக ஜன்னல் அவசியம். அதுபோல் எளிமையான விளக்குகள் போதும். வண்ண ஒளி தரும் அலங்கார விளக்குகள் அவசியமில்லை.

சிலை வைத்து வழிபடுவது தவறில்லை. ஒரு அடி, 12 இன்ச் அளவிற்குள்ளான விக்ரகங்களை வைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அதற்கு மேல் என்றால், அதற்கான ஆகம விதிகளை கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்திகிறார்கள். எனவே, இறை படங்களும், ஓவியங்களும் வைத்துக் கொள்ளலாம். தீப விளக்குகள், அதில் விளக்கெண்ணை, நெய் இட்டு தீபம் எரிதல் நன்று. நல்லெண்ணை, கடலையெண்ணை வேண்டியதில்லை. எந்த சிலை, எந்த உருவம் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. சில வீடுகளில் பரம்பரையாகவும் சிலைகள், படங்கள் இருப்பதுண்டு. உங்கள் முன்னோர்களும் அதை வழிபட்டு வந்தார்கள் என்பதால், நிச்சயமாக அதில் சிறப்புண்டு.

மந்திரங்கள் சொல்லலாம், மாலை, மலர்கள் அலங்காரம் செய்யலாம். சாம்பிராணி, ஊதுபத்தி, வாசனைதிரவியங்கள் பயன்படுத்தலாம். ருத்ராட்சம், படிக மாலைகளும் பயன்படுத்தலாம். எனினும் அவைகள் சுத்தமாக இருந்திட வேண்டும். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்தலும், ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது பூஜை செய்தல் நன்று. மணி ஒலிப்பதும், தீபாராதனை காட்டுவதும் சிறப்பு.

    பூஜை அறையை, அதுவேண்டும், இதுவேண்டும் என்று வேண்டுதல் அறையாக மாற்றாமல், இறைக்கு நன்றி செலுத்தும் விதமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வழியிலே, பூஜை அறையில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும், இல்லத்திலும் தெய்வீகம் கமழும்.

ஒவ்வொரு பூஜையிலும், உங்கள் குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். அவர்களை அதில் ஆர்வம் கொள்ள பழக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த இறை உண்மையை மட்டும் சொல்லுங்கள். கதைகள் வேண்டியதில்லை. பக்தியின் உண்மை விளக்கம் யோகத்தில் தெரியும் என்பதையும் சொல்லுங்கள். அதே பூஜை அறையில், ஞானிகள், மகான்கள் சிலைகளும், படங்களும் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை.

பூஜை வழிபாடு முடித்து, அங்கேயே ஏதேனும் ஒரு தவம் செய்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளலாம். எப்போதும் அமைதியாக, நிறைவாக இருக்குபடி, பூஜை அறையை வைத்துக்கொள்க. அதிக ஒலி, ஒளி தேவையில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களையும், பூஜையில் கலந்துகொள்ளச்செய்யுங்கள். எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிறைவான பூஜை அறை உண்டு என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் பூஜை அறை குறித்த உயர்ந்த எண்ணங்களை எப்போதும் மனதிற்குள் வைத்திருங்கள். கண்களை மூடி எப்போது நினைத்தாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீகத்தை உணர்த்துவதாக இருக்கட்டும். அது உங்களுக்கு என்றும் உதவும். இதனோடு யோகத்திலும் நான் உயர்வேன், பக்தியின் முழுமையை யோகத்தில் அறிந்துகொள்வேன் என்பதில் திடமாக இருங்கள்.

வாழ்க வளமுடன்

-

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Please explain the good, bad, and benefits on the almighty's believes and unbelieves?


இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


பதில்:

நல்ல கேள்விதான் எனினும், இங்கே பொதுவெளியில் சுருக்கமாகவேதான் சொல்ல முடியும். கடவுளை வணங்குவோர் குறித்து பேசினாலும், கடவுள் இல்லை என்று சொல்வோரை குறித்து பேசினாலும் இங்கே தேவையற்ற பிரச்சனைகள்தான் எழுகின்றன என்று வருந்துவோர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் இந்த உலகில், உண்மைகளை எடுத்துப் பேசுவோர்களுக்கும், விளக்கமளித்து பேசுவோருக்கும் எதிரிகள் உருவாகிவிடுவார்கள். எனவே மிகசுருக்கமாக சிலவற்றை இங்கே சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய கருத்தல்ல, நான் பலவழிகளில் அறிந்து கொண்ட வகையில், மற்றவர்கள் தந்த குறிப்பு மட்டுமே.

என்னைப் பொறுத்தவரையில் நான், கடவுளை வணங்குவோரையும், கடவுள் இல்லவே இல்லை என்போரையும் குறித்து தனிப்பட்ட எந்தக்கருத்தும் சொல்லுவதில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு அது அனுபவமாகவில்லை எனவே கடவுள் இல்லவே இல்லை என்கிறீர்கள். அவ்வளவுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுக்குள்ளாக ‘ஒரு நம்பிக்கை’ உண்டு. அந்த நம்பிக்கை பெரும்பாலும், மற்றவர்களால்தான் உருவாகிறது. அது தொடர்வதும், அற்றுப் போவதும், அவர்களுக்கே அது அனுபவமாகும் பொழுதுதான். வளரும் சிறுவயதில் பெற்றோர் ஏற்படுத்தும் பக்தி நம்பிக்கை, தொடர்ந்தால் அக்குழந்தையும் ‘கடவுளை’ நம்பும். பெற்றவர்களுக்கே பக்தியும், கடவுள் நம்பிக்கையும் இல்லையென்றால் அக்குழந்தைக்கும் ‘கடவுள்’ இல்லைதான், அதுகுறித்த நம்பிக்கையும் இல்லைதான். பக்திமார்க்கத்தில் வளர்ந்த சிறுவர் சிறுமியர் கூட பிறகு வளர்ந்த நிலையில், சூழ்நிலையினாலும், மற்ற கருத்துளினாலும், தன்னறிவினாலும், பகுத்தறிவு சிந்தனைகளினாலும் தன் சுய அறிவால், சில காலங்களுக்குப்பிறகு  ‘இரண்டாவது நிலைப்பாட்டுக்கு, இல்லாத நிலைப்பாட்டுக்கு’ வந்துவிடுவதுண்டு.

உலகில் பிறந்த மனிதன் ஆறாவது அறிவின் துணைக்கொண்டுதான் மற்ற எல்லா உயிரினங்களை விடவும், சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்கிறான், அந்த சிந்தனையே மனிதனை, விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து, பிரித்து உயர்த்துகிறது. எல்லாவகையான உணர்வையும் விலங்குகள் போலவே பெற்று மகிழ்கிறான் என்பதும் உண்மை. கூடவே, அந்த உணர்வுகளையே பெறுவது நானேதான் என்றும் உணர்கிறான். இதனினும் மேலாக, அந்த நான் என்பது யார்? என்று சிந்தனையும் இயல்பாக எழுவது உண்மைதான். ஆனால் இந்த ‘நான் யார்?’ அவ்வளவு எளிதில் சராசரி மனிதனுக்கு வருவதே இல்லை. என்றாலும் அந்த கேள்வியோடு, யோகசாதனை வழியாக, இதை அறிந்த முன்னோர்கள்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் தங்களோடு வாழ்கின்ற மக்களின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு, புரிந்து கொள்ளும்படியாக எளிமைநிலை கருதி, ‘இப்படியான உண்மை, உட்பொருளாக, மெய்ப்பொருளாக இருக்கிறது. அதை அறிந்தும், உணர்ந்தும் உங்கள் வாழ்வை சிறப்பித்துக்கொள்க’ என்ற கருத்தில், அதை ஆன்மீகத்தத்துவமாக, கருத்துருவாக ‘இறை’ என்ற உண்மை விளக்கத்தை தந்தார்கள். அதுவே கட+உள்=கடவுள் என்பதாக ஆகிற்று. ஆகவே, கடவுள் என்ற கருத்துரு வணக்கத்தில், பொதுவாகவே, நம்பிக்கை என்ற நிலைக்கு அடுத்ததாக, பரிபூரண நம்பிக்கை (FAITH) என்ற நிலைக்கு உயர்ந்தால்தான், பக்தியில் இருப்பவர் கூட, ஓரளவில் உயர்ந்து இறை உண்மையை அறியமுடியும்.

மேற்சொன்ன இந்த கருத்துக்கு எதிரான போக்குத்தான், கடவுள் இல்லை என்ற நிலைபாடு ஆகும். மனிதனும் ஓர் பிறப்பே என்ற நிலையோடு, ஆறாவது அறிவின் துணையோடு, உலக இன்பங்களை துய்த்து வாழ்ந்து வரலாம். கடவுள் என்ற கருத்துருவுக்கு இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படியாக ஏமாற்றிக் கொள்ளவும் தேவையில்லை என்பதான போக்கு ஆகும். இங்கேயும் ஒரு , பரிபூரண நம்பிக்கை (FAITH) உள்ளதுதான். அது, மனிதனுக்கென்று இருக்கிற ஆறாவது அறிவில் இயற்கை தவிர ‘வேறு எதற்கும்’ இடமில்லை என்பதாகும். அந்த இயற்கையையும் ‘ஏதொன்றும் தனியாக, சிறப்பாக’ கூறவும் அவசியமில்லை என்பதுமாகும்.

இரண்டிலும், நன்மை, தீமை, பயன்கள் எல்லாமே, உணர்ந்து அறியக்கூடியதாக இருப்பதால் அதை நீங்கள், உங்களுக்கு எந்த , பரிபூரண நம்பிக்கை (FAITH) வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கை, உங்கள் தேர்வு என்பதன் வழியாக உணர்ந்து அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

What is the truth of Tamil new year and will it help for meditation?


தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.

பதில்:
யோகசாதனையில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு நாளும் கிழமையும் திசையும் ஒரு கணக்குமல்ல, தடையுமல்ல. ஆனால் புதிதாக யோகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ள நபர்களுக்கும், சித்திரைத்திங்கள் எனும் தமிழ் புத்தாண்டு நாள் சிறப்பாக இருக்கும் எனலாம்.

ஒரு வகையில் சூரியன், தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு, தன்னொளியில் பிரகாசிக்கத் தொடங்கும் நாளாக, தமிழ் சித்திரை மாதம் ஒன்றாம் நாளை எடுத்துக்கொள்ளலாம். வானியல் அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் இது சரிதான். மேலும் சூரியனின் உச்சவீட்டாக இருக்கக்கூடிய மேஷ ராசிக்கட்டத்திற்கும் வருகிறது. இந்த மேஷ வீட்டில்தான் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆகிய நட்சத்திரங்களும் அதன் பாதங்களும் இருக்கின்றன. இதன்படி நாம் கவனிக்கும் பொழுது, அசுவினி என்ற நட்சத்திரத்தின் பாதையில், சூரியன் வரும் நாளே ‘சித்திரை மாதம்’ ஆகும். சூரியன் உச்சம் பெறுவது தனிப்பட்ட பாகையில் ஆகும்.

எனினும் சூரியனை, ஆத்மகாரகன், ஆத்மாவுக்கு உரியவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அதேபோல சந்திரனை மனோகாரகன், மனதிற்கு உரியவன் என்று சொல்லப்படுகிறது. சூரியன் எப்படி புத்துணர்வோடு, சித்திரை மாதத்தில் நுழைகிறதோ, அதே போன்றதொரு ஆத்ம புத்துணர்வு, நம் ஆன்மாவுக்கும் கிடைக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில்தான், தமிழ்புத்தாண்டு நாள், யோகத்திற்கும், தவத்திற்கும் உதவலாம். 

மேலும் இது கோடைக்காலம். நீங்களே பார்க்கலாம். பெரும்பாலான மரங்கள் கடந்த மாதங்களில், தன்னுடைய எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு, பூரிப்பாக இளம்பச்சை இலைகளை தன்னுடைய கிளைகளில் படரச்செய்வதை காணலாம். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிதான பச்சைபசேல் என்ற மரங்களை இந்த கோடைகாலத்தில்தான் காணமுடியும். மாமரம் தன் பூக்களோடு மாங்கனிகளை தரும் காலமும் இதுதான். புளியமரம் தன் புளியங்கனிகளை தருவதும் இக்காலமே.

புதிதாக யோகத்தில் இணைவோடுக்கு இது சிறந்தகாலம் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, ஏற்கனவே யோகத்தில் பயணிப்போருக்கு, தங்களின் தவ ஆராய்ச்சிக்கு இக்காலம் உதவும் என்பது நிச்சயமே. நீங்கள் தன்னையறிதலில் உயர்வு பெற இறைநிலையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்
-

Can the horoscope of children born at the same time be the same?


குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான கேள்விதான். நீங்கள் பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்கலாமே. நீங்கள் இப்பொழுது அம்மாவின் கருவறையில் இருக்கிறீர்கள். குழந்தைப்பேறு மருத்துவமனையிலும் சேர்த்து தகுந்த நேரத்திற்கு மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அதே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஐந்து தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரே சமயத்தில் உதவ மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதிகாலை 3. 40 க்கு, உங்களோடு சேர்ந்து ஆறு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். இத்தனை குழந்தை பிறப்பை, அங்கேயே ஆறு சோதிடர்களை வைத்து ஜாதகமும் எழுதிவிடலாமா? சரி. குழந்தைபிறப்பின் நேரத்தை மருத்துவர்கள் சொன்னபடி குறித்து ஜாதகம் கணித்தாயிற்று.

இப்பொழுது ஏறக்குறைய எல்லா ஜாதகமும் ஒரே மாதிரி இருக்கும் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  என்றாலும், ஜாதகம் அதன் நுணுக்கத்தில், கணிதத்தில் நுண்ணிய மாறுதலாகவே அமைதிருப்பதையும் நாம் அறியமுடியும். இந்த ஆறு குழந்தைகளுக்கும் ஒரே பெயர் வைக்கப்போவதில்லை. தனிப்பட்ட விருப்பமான பெயர்தான் வைப்பார்கள். கணித்த ஜாதகம் ஒன்றாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுவதில்லை, கொட்டாவி விடுவதில்லை, தானாக சிரிப்பதில்லை. ஒரு குழந்தை காலையில் தூங்கும், இரவில் அழும், சில குழந்தை இரவில் தூங்கும், வெளிச்சம் வந்தால் அழுதுகொண்டே இருக்கும். ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும், ஒரு குழந்தை அதை அறவே மறுக்கும். ஒரு குழந்தை தாயின் அணைப்பை விரும்பும், மறு குழந்தை தூக்கினாலே அழும். இப்படி பலவித மாறுபாடுகள் அங்கேயே வெளிப்படுவிடுகின்றன அல்லவா?

ஜாதகமும், அதன் கிரநிலைகளும் ஒன்றாக இருக்கட்டும். அந்தந்த கிரக நிலைகளின் அலைவீச்சு ஒன்றாகவே இருந்தாலும், அதை பெறுவது, ஏற்பது, விலக்குவது என்று ஒவ்வொரு குழந்தைக்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உண்மை. மேலும் அந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு, இந்தக்குழந்தை இப்படித்தான் வளரும் என்று சொல்லவும் முடியாது. அப்படி எந்த ஜோதிடரும் சொல்லவும் மாட்டார். ஒரே ஒரு சாட்டிலைட் தொலைகாட்சி டிஷ், உங்களின் ஒரே ஒரு 49 இன்ஞ் ஸ்மார்ட் டிவி வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பது போலவே, இந்த குழந்தைகள் மாறிக்கொண்டுதான் வளரும் என்பது உண்மை. ஒரே மரத்தின் விதைகளை நீங்கள் விதைத்தாலும், வளர்ந்து அதுதரும் அதன் கனிகள் ஒரே சுவையாக இருப்பதில்லை.

அப்படியானால் ஜாதகம்? அது ஒரு குறிப்பு, கையேடு. அதைக்கொண்டு அந்தக் குழந்தைகளின் அடிப்படை அறிந்து மாற்றத்தை விரும்பி செயல்பட்டு வாழ்வில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். பார்வைக்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆராய்ந்து பலன் தரும் பொழுது அது மாறுதலை தந்துகொண்டே இருக்கும். ஒவ்வொடு தனித்தனியான குழந்தைக்கும் பதினாறு வகையான மாற்றங்கள் உண்டு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்று மாறினாலும் ஒரே மாதிரி இருக்கபோவதில்லை. அதனால் ஒரே நேரத்தில் பிறந்த எல்லோருக்கும் ஜாதகம் கணித்தாலும், நகர்ந்துகொண்டே இருக்கக்கூடிய இந்த வானியல் நிகழ்வு, நுண்ணிய மாற்றதை கொண்டிருக்கும். அது அந்த ஜாதகத்திலும் இடம்பெறும் என்பதுதான் உண்மை.

        குழந்தையின் அடிப்படை குணாதசியம், கர்மா, செயல்பாடு, மனநிலை, பரம்பரை, வழக்கம், பழக்கம், இப்படியாக எண்ணற்ற விசயங்கள், குழந்தைக்கு குழந்தை மாறுபாடுபெறும் அல்லவா? அதுபோல அந்த ஜாதகமும் தன்னுள்ளே ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும். அதை நல்ல தேர்ந்த, அனுபவம் உள்ள ஜோதிடர் நிச்சயமாக கண்டடைவார்.

வாழ்க வளமுடன்
-

Will karma come to the person who helps the wrong man? What is the reason for this?


தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா,  தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


பதில்: 

இந்த சந்தேகம் எனக்கும், யோகத்தில் இல்லாத காலங்களில் இருந்துவந்தது. வேதாத்திரிய யோகத்திற்கு வந்த பிறகு, செயல்விளைவு தத்துவமும், இயற்கையின் விதி என்பதையும் நன்கு புரிந்து கொண்டபிறகு  அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. உண்மை கண்ட நிலையில், என்னுடைய செயல்களை நான் திருத்தி அமைத்துக் கொண்டாலும், என்னைச்சார்ந்த மற்றவர்களை அறியும் பொழுதும், சில அன்பர்களின் வாழ்க்கை கதைகளை கேட்கும் பொழுதும் ‘நான் அறிந்த உண்மையையும் மீறி’ வருத்தம் எழுவது உண்டு.

துன்பப்படும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லையே, ஏன் இப்படி நிகழ்கிறது? என்று மனம் வருத்தமடையும். ஆனால் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, இயற்கையின் ஒழுங்கமைப்பு ஒருபோது மாறாத தன்மை கொண்டது. தெய்வீக நீதிமன்றத்தின் செயல்பாடு அது என்றும் சொல்லுகிறார். யாருக்காகவும், எதற்காகவும், எக்காலத்திலும் மாற்றம் பெறாதது. இன்னும் சொல்லப்போனால் ‘தன்னையே தான் தண்டித்து, திருத்திக்கொள்ளும்’ தன்மை உடையதுதான் இறையாற்றல். அத்தகைய உயர்ந்த தன்மை கொண்டது. நம்மை சும்மா விட்டுவிடுமா?

வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், தவறு செய்தவரும், அந்த தவறுக்கு துணை நின்றவரும், வாய்ப்பு இருந்தும் தட்டிகேட்காமல் இருந்தவரும், கூடவே இருந்து அந்த தவறை திருத்தி அமைக்காதவரும், மகிழ்வாக, நிறைவாக, எப்போதும் போலவோ, அதைவிட சிறப்பாகவோ வாழ்வது போல இருக்கலாம். ஆனால் அதனால் எழுந்த கர்மா எனும் வினைப்பதிவு ‘சும்மா’விட்டுவிட்டது. இதென்னெ பயமுறுத்தல் என்கிறீர்களா? நீங்கள் செய்துதான் பாருங்களேன். அப்போது விளைவை அனுபவிக்கும் பொழுதாவது நம்புவீர்கள்தானே?!

மனிதனுக்கு மனிதன் செய்யும் பிணக்குத்தான் இன்றைய உலகின் அவலம். உதவியும் செய்யாமல், உபத்திரவும் செய்யாமல் இருந்தால் கூட போதுமானது. ஆனால், எப்படியாவது தான் வளர, முன்னேற, நன்மதிப்பு பெற என்று திட்டமிட்டு, அடுத்தவரை உடலாலும், மனதாலும் துன்பப்படுத்திக் கொண்டே வந்தால், தங்களுக்கான பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவேளை எந்த துன்பமும், வருத்தமும் இல்லாமல் இறந்துவிட்டால் கூட, அவர்களின் வாரீசுகளுக்கு அந்த சுமை வந்து சேர்ந்துவிடுமே?! இதற்கான சில உதாரணங்களை, உங்கள் வாழ்க்கையிலேயே பிறரை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் கேட்டது போல, தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? என்றால், ஆம் துரத்தும். ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? ஆமாம். காரணம் என்ன? பார்க்கலாமா? உனக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் அதை தட்டிக்கேட்காமல் இருந்தாய்? நீ அதை மாற்றியிருக்கலாம், திருத்தியிருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம், உதவி செய்திருக்கலாம் தானே? அதை ஏன் நீ செய்யவில்லை. நீ அந்த தவறுகளுக்கு கூட்டுதானே? என்று இந்த இயற்கை கேட்டு அதை பதிவு செய்துகொண்டு, தக்க காலத்தில் திருப்பி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறாயா? என்று பாடம் நடத்துகிறது. ஆனால் மனிதன் ‘இந்த இயற்கையையே மிஞ்சி விட்டதாக வெற்றி பெருமிதம்’ கொண்டு வாழ்கிறான். அந்த பெருமிதம் இன்னும் வடிந்தபாடில்லை!

வாழ்க வளமுடன்

-

Why someone or well known is perceived wrong and offense on me? How I get solution?


நன்றாக பழகியவர்களே, நம்மை சமயம்பார்த்து காலைவாறி விடுவதும், உதவிய நம்மை தூற்றுவதும் ஏன்? நிறைய அனுபவம் கிடைத்தும் ஏன் என்னால் மாற முடியவில்லை?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, நன்றாக பழகியவர்களே, நம்மை சமயம்பார்த்து காலைவாறி விடுவதும், உதவிய நம்மை தூற்றுவதும் ஏன்? நிறை அனுபவம் கிடைத்தும் ஏன் என்னால் மாற முடியவில்லை?!

பதில்:

மனிதர்களின் பொதுவான மனோபாவம், குணாதியம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் Personality என்பார்கள். அது ஒவ்வொருவருக்கும், 16 காரணங்களால் மாறுபடும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்றின் கூடுதல் குறைவு சதவீதமும், மனிதர்களை மாற்றிக்கொண்டே இருக்கும். ஒருவர் பிறப்பிலேயே நல்லவராக இருப்பதற்கும், பிறப்பிலேயே தன் இயல்பை மாறாக காட்டுவதும் இதனால்தான். சிலருக்கு மத்திம காலத்தில் வளரும் பொழுது, தன் அனுபவங்களால் மாறவும் செய்யும். இன்னும் சிலர், தன் வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிலையிலும், அந்த அனுபவம் பெறும் பொழுதும் நல்லவராக வாழ முயற்சிப்பார். இன்னும் ஒருசிலர், நான் யாருக்காகவும் மாறவேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் தொடர்ந்து பிரச்சனைக்கு உரியவராக இருப்பார்.

ஒரு மனிதர், இன்னொரு மனிதரோடு தொடர்பு கொள்ளும் பொழுது, சக மனிதர் என்ற பார்வை வெகு சிலருக்குத்தான் இருக்கும். இப்பொழுது மணி என்ன? என்று கேட்டால் கூட (இப்பொழுது யாருமே கேட்பதில்லை என்றாலும் கூட) நாம் கேட்டது காதில் விழவே இல்லை என்ற ரீதியில் இருப்பார்கள். அதாவது அவர்கள், மனிதர்களின் தரம் பார்த்துத்தான் பதிலே சொல்லுவார்கள் என்பதாக அவர்கள் மனநிலை இருக்கிறது. 

சிங்கங்கள் சிங்கங்ளோடு பேதம் காணுவதில்லை. ஆடுகள் ஆடுகளோடு பேதம் காணுவதில்லை. ஆனால் மனிதர்களில் சிங்கமும் உண்டு, ஆடுகளும் உண்டு. இன்னும் பலப்பல மிருங்கங்களும் உண்டு. யாரும் பொருத்தமில்லாததாக நினைக்க வேண்டாம். அத்தகைய குணாதசியம் என்பதை சொல்லவந்தேனே தவிர வேறெதும் இல்லை. இது ஏன்? காரணம் அவர்களுக்காக இருக்கின்ற பதிவுகள், மனிதனின் தரத்திற்கும், ஆறாவது அறிவின் முழுமைக்கும் இல்லை என்பதுதான். தங்களை திருத்திக்கொள்ள அவர்கள் வாய்ப்பை ஏற்பதே இல்லை. கொடுத்தாலும் அதை விலக்கியும் விடுவார்கள். உலகில் நாம் காணும் ஒவ்வொரு சமூக பிரச்சனைக்களுக்கும் இதுவே காரணம். ஆறாம் அறிவு நிலைக்கான விளக்கம் இன்னமும் மக்களிடம் விழிப்புநிலை பெறவில்லை. மனம் அத்தகைய கீழான இயக்க நிலைகளிலேயே இருக்கிறது. அது மாற்றம் பெறவேண்டும்.

ஒருவரோடு நீங்கள் பழகும்பொழுது, கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உங்களைப்பற்றிய எல்லா தகவல்களையும் தந்துவிடக்கூடாது. உங்கள் மீது அக்கறை காட்டும் எந்த நபரையும் சந்தேகம் கொள்ளுங்கள். ஆனால் அவர்களை உதாசீனம் செய்திடக் கூடாது. அதனால் உங்களுக்கு நன்மை என்றால், சிலவற்றை கொடுக்கலாம், பெறலாம். ஆனால் உங்களை முழுதாக அவர்களிடம் சொல்லிவிடக்கூடாது. ஒரு எச்சரிக்கை எப்போதும் வேண்டும். நீங்களும் அவரை பயன்படுத்தக்கூடாது, அவரும் உங்களை பயன்படுத்த விடக்கூடாது. ஓவ்வொடு மனிதருடைய செயல், அசைவு, நிலை, பேச்சு இவற்றில் கவனம் வேண்டும். அது உண்மையாக எதை சொல்லுகிறது என்ற விளக்கம் பெற வேண்டும். இப்படி இன்னும் நிறைய அறிவுரைகள் உண்டுதான் எனினும், இது போதுமானது. உங்களை காலைவாறிய, தூற்றிய மனிதர்களிடம் இருந்து உடனே விலகுங்கள். அவர்களை பழி வாங்கிட ஒருபோதும் நினைக்காதீர்கள். அவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டவேண்டிய அவசியமும் உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்கள் இயல்பில் எப்போதும் இருக்கலாம்.

மிக எளிமையாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்ன, இரண்டொழுக்க பண்பாடை மறவாதீர்கள். ‘நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கோ மனதிற்கோ துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னாலான உதவிகள் செய்வேன்’ என்று அடிக்கடி சொல்லிவாருங்கள். அதை உங்களோடு பழகுவோரிடமும் படித்துப்பார்க்கச் சொல்லுங்கள். மாறுதல் உண்டாகலாம்.

வாழ்க வளமுடன்
-

How can altered my interests in fun and entertainment to the yoga?


பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதுபோல யோகத்தில் ஆர்வம் இல்லை. ஆர்வமின்றி இருப்பது ஏன்? மேலும், பலகாலமாக அதை விட்டு விலகவும் முடியவில்லை. எப்படி அதை மாற்றிக் கொள்ளமுடியும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதுபோல யோகத்தில் ஆர்வமின்றி இருப்பது ஏன்? பலகாலமாக அதை விட்டு விலகவும் முடியவில்லை. எப்படி அதை மாற்றிக் கொள்ளமுடியும்?

பதில்:

உங்களைப் போலவே எல்லோருமே அதை கடந்துவந்தவர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்க. இதில் உங்களுக்கு வருத்தம் தேவையில்லை. ஆனால், பொழுதுபோக்கிலே மட்டுமே நின்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இதற்கு காரணம் நம்முடைய பெற்றோர், வீடு, உறவினர், நண்பர்கள், சமூகம், உலகம் இப்படி எல்லாமுமே காரணமாக இருக்கலாம். பிறப்பின் உண்மையும், வாழ்வின் நோக்கமும் அறியாத எல்லா மனிதர்களுமே காரணம். அவர்களுக்கு தெரியாது என்பதல்ல, தெரிந்தாலும் அதில் ஆரவமற்று விலகி, வழக்கமான உலக நடப்புக்களில் இயங்குவதுதான். அதைப்பார்க்கும் நமக்கும்கூட அதேபோலான நடவடிக்கையும் ஆர்வமும் தானே வரும்? சரிதானே?!

ஒரு பொழுதுபோக்கு என்றால், நமக்கு ஆர்வம் எழுகிறது. நம் வேலைகள் எது இருந்தாலும் தள்ளிவைத்துவிடுகிறோம் அல்லவா? பசி இருந்தால் கூட பரவாயில்லை என்று பொழுதுபோக்கை கவனிப்போம். இதற்கு அடிப்படை காரணம், நமக்குள் இருக்கும் நிகழ்காலத்தின் மேல் இருக்கும் பயம், அதனோடு வருங்காலத்தை நினைத்தும் பயம் என்பதுதான். ஆனால், யாராவது இதை ஏற்றுக்கொண்டும் ஆமாம் என்று சொல்லிவிடுவார்களா? இல்லவே இல்லை. இப்படி ஒரு கண்ணோட்டமே இருக்காது.

பொழுதுபோக்கில் என்ன இருக்கிறது? அதில் எதேனும் அறிவு வளர்ச்சிக்கு இடமிருக்கிறதா? வாழ்க்கைக்கும், வாழ்வைக்கடந்த உண்மைக்கும் வழி இருக்கிறதா? அதுவும் இல்லவே இல்லை. உங்களுக்கு தெரிந்ததை, உங்கள் மனதில் படிந்ததை, உங்களுக்கு விருப்பமானதை, யாரோ ஒருவர், சில குழுவினர்கள், உங்களுடைய மனதிலிருந்து அதை தோண்டி எடுக்கிறார்கள். உங்கள் உணர்வோடு தொடர்புடையதால் உங்களுக்கும் ‘ஆஹா’ என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று இருக்கும் இந்த பிரச்சனை, தொந்தரவு, சிக்கல் இப்படி எல்லாவற்றிலிருந்தும் ‘விடுதலை’ கிடைத்துவிட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயே உங்களை அப்படி ஏமாற்றிக் கொள்கிறீர்கள். பொழுதுபோக்கினால், இருக்கின்ற உங்கள் பிரச்சனை துளியும் மாறிவிடுவதில்லை, அகன்று விடுவதில்லை, குறைந்தும் விடுவதில்லை. உண்மையாக சொல்லப்போனால், முன்பைவிட அது ஓர் நாளில் அதிகமாகிறது.

உண்மையிலேயே யோகத்திற்கு வர, பொழுதுபோக்கிற்கு எதிரான மனநிலை தேவை. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? என்று கேள்வி கேட்டு அதில் பயணிப்பதின் முடிவாக யோகத்திற்குள் நுழையலாம். ஆனால் நாம் அதற்கு எதிர் திசையில் அல்லவா போய்க்கொண்டு இருக்கிறோம்?! யோகத்தில் எப்படி ஆர்வம் வரும்? யோகமே தேவையில்லை என்றுதானே போய்க்கொண்டு இருக்கிறார்கள்?! யோகத்தில் நுழைவதற்கும், வருவதற்கும் ஆர்வம் தேவையில்லை. இருக்கும் சூழ்நிலைகளில் மட்டுமல்ல, இனி வரக்கூடிய எந்த விதமான சூழ்நிலைகளிலும் நீங்கள் பாதிக்கப்படாமல், உயர்ந்த நோக்கம் கண்டு முன்னேறி, வாழ்வின் உண்மையும், பிறப்பின் நோக்கமும், மனிதனாக பிறந்ததின் உன்னதமும் அறியலாம்.

இப்போது இருக்கும் இந்த பொழுதுபோக்கான நிலையில் இருந்து விட்டுவிட விருப்பமில்லை என்றாலும், விலகிட முடியவில்லை என்றாலும் கவலையில்லை. நீங்களே ஒர்நாளில், அடுத்து என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு, காலம் உங்களை நகர்த்தி வைக்கும். அதுவரை காத்திருக்கலாம், பொழுதுபோக்கில் மூழ்கி இருக்கலாம். தவறில்லை. ஓடும் குதிரைக்கு சாட்டையடி தேவையில்லை. ஓடாத குதிரைக்கு தேவை என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதன் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படலாம். 

வாழ்க வளமுடன்
-

What is your notes about the Solar Eclipse, at America Sky, bottom of our earth?


நாம் இருக்கின்ற வானத்தில்மேல் கிரகணம் நிகழ்ந்தாலே கிண்டல் செய்வார்களே, அமெரிக்காவில் நடக்கும் கிரகணம் கண்டுகொள்ளப்படாது அல்லவா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, நாம் இருக்கின்ற வானத்தில்மேல் கிரகணம் நிகழ்ந்தாலே கிண்டல் செய்வார்களே, அமெரிக்காவில் நடக்கும் கிரகணம் கண்டுகொள்ளப்படாது அல்லவா?


பதில்:

அது எப்போதுமே பகுத்து அறியாத அறிவால் நடப்பதுதானே? அதைப்பற்றி நம் ஏன் கவலைப்பட வேண்டும்?. கிரகணம் எங்கு நிகழ்ந்தாலும் அது, நாம் வாழ்கின்ற பூமியில், சந்திரனால் தானே நிகழ்கிறது? வேறெரு கிரகத்திலும், அதன் துணைகோளாலும் இல்லையே? நாம் வாழும் பூமியில் எத்தகைய நிகழ்வு என்றாலும், அது அந்த பூமியில் இருக்கும் ஜடப்பொருள் முதற்கொண்டு, மனிதன் வரையிலான எல்லா ஜீவன்களுக்குமே சென்று சேரும் என்பது உறுதி. இதில் ஏதேனும் மாற்றுக்கருத்துண்டா?

கிரகணம் என்பது பொதுவானதுதான். சந்திரன் சூரியனை மறைத்தால் என்பதைவிட, சந்திரனின் நிழல் பூமியில் விழுந்தால் என்பதுதான் சரியானது, அது சூரிய கிரகணம். பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுந்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் நிகழும்.  மேலும் சூரியகிரகணம் பகலிலும், சந்திர கிரகணம் இரவிலும் நிகழும்.  இதன்வழியாக ஒரு காட்சி உங்களுக்குள் உருவாகி இருக்கும். மாதாமாதம் வரும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இது நிகழ்வதில்லை. கிரகண வரைகோடு என்ற நிலையில், இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ராகு, கேது நிழல் கிரகத்தின் பாதையில், சூரியன், பூமி, சந்திரன் வந்து நின்றால்தான் கிரகணம். இல்லையேல் சாதாரண அமாவாசையும், பௌர்ணமியும் தான்.

Image source @spacetourismguide

மக்களின் அறியாமையில், பகலில் ஓர்சில நிமிடங்கள் சூரியன் மறைந்து, உலகம் இருட்டானதும், முழுநிலவு வராமல், வானம் இருண்டதும் கண்டு பயந்து, பற்பல கதைகளை கட்டினார்கள். ராகு கேது கிரகபாதைகளை பாம்பாக சொன்னார்கள். நீளமாக கருப்பாக இருப்பதெல்லாம் நம் மக்களுக்கு பாம்புதானே?! இந்த கதைகள் எல்லாமக்களிடமும் உண்டு. வானியல் வளர, இது சராசரி வானியல் அற்புதமாக மாறிவிட்டது. ஒன்றும் அதியசமில்லாததாகவும் இன்று நின்றுவிட்டது.

ஆனால், அன்றைய நாளில், பூமியில் உள்ள அசையும், அசையா எப்பொருளுக்கும், எல்லா ஜீவன்களுக்கும் உடலிலும், மனதிலும், உயிரிலும் எழும் மாறுதல்களை யார் அறிவார்? இதைத்தான் யாரும் பகுத்துப்பார்ப்பதில்லை. என்றாலும் யோகத்தில் இருக்கிற உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நாம் பார்க்கும் வானில் நிகழ்ந்தாலும், நமக்கு நேர்கீழே உள்ள அமெரிக்காவில் நிகழ்ந்தாலும், பாதிப்பு உண்டுதான். அதனால், மனமும் உடலும் உயிரும் பாதிக்காத செயலோ, நினைவுகளோ இல்லாமல் அமைதியாக இருக்கலாம். துரிய தவம், துரியாதீத தவம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து வாழ்த்தலாம். வயதில் பெரியோர்களை வாழ்த்தலாம், அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்து, அவர்களின் வாழ்த்தை பெறலாம். நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்து ஆராயலாம். உணவில் அளவைக்கொண்டு, சக்தி இழப்பை தடுக்கலாம். கடின, கவனமான வேலைகளை தவிர்த்து, விபத்தும் குறையும் ஏற்படாதவாறு காத்துக் கொள்ளலாம். அடுத்தவர்களை மனம், உடல் நோகாத தவறு செய்யாமல் தடுத்துக்கொண்டு உயர்வை பெறலாம்.

இதையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? கிரகணத்தின் மாறான அலை இயக்கத்தில் சிக்கிக்கொள்ளாமல், நன்மை அடையவிரும்புவோர் செய்யலாம். மற்றபடி கட்டாயம் ஏதுமில்லையே. பொதுவாகவே மனிதன் தன்னை உயர்வாக நினைத்து எல்லாவற்றையும் கைவிடுகிறான். அதுபோலவே தன்னையே தாழ்வாக அற்பமாக நினைத்து எதையுமே பயன்படுத்திக்கொள்ளாமல் தவறிவிடுகிறான். அதற்கு பகுத்து அறியும் அறிவு எனும் போர்வையையும் போர்த்திக் கொள்கிறான். நடக்கட்டும், காலம் அதன் வழியில் நகர்ந்துகொண்டேதான் இருக்கும்.

வாழ்க வளமுடன்


Astrologers advice to clear the Pithru Dosham, is yoga and meditation will help to this?


ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதுதான் எல்லாவற்றிற்கும் தடையாகிறது என்றும் சொல்லுகிறார்கள். அந்த பித்ரு தோஷம் என்பதை யோகத்தின் வழியாக, தியானத்தின் வழியாக தீர்க்கமுடியுமா? 



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதுதான் எல்லாவற்றிற்கும் தடையாகிறது என்றும் சொல்லுகிறார்கள். அந்த பித்ரு தோஷம் என்பதை யோகத்தின் வழியாக, தியானத்தின் வழியாக தீர்க்கமுடியுமா? 

பதில்:
ஒரு குழந்தை இந்த உலகில் எங்கு ஜனித்த போதிலும் அக்குழந்தைக்கு ஜாதகம் எழுதமுடியும், எந்த ஜீவன் உலகில் பிறந்தாலும், அக்குழந்தையின் அடிப்படை காரணியாக, புளூ பிரிண்ட் என்பதாக ஜாதகம் அமைந்திருக்கும் என்பதே உண்மை. அன்றைய நாளின், கிரக நிலைகள் அதில் இருந்தாலும் கூட, சூரியனும் சந்திரனும் ஒரு ஜீவனின் உயிர், மனம் இவற்றை அமைக்கிறது. அமைந்ததை சொல்லுகிறது என்றும் குறிப்பிடலாம். அந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் ராகு, கேது என்ற நிழல் கிரகங்கள் தான், நீங்கள் இந்த கேள்வியில் குறிப்பிட்ட பித்ரு தோஷம் என்பதை சொல்லுகிறது.

இப்படியெல்லாம் கதையளக்க வேண்டுமா? என்று கேட்பவர்கள் இந்த பாராவையும், அடுத்த பாரா வரையில் மட்டும் படித்துவிட்டு பிறகு வழக்கமான ஏதேனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்க்க படிக்க சென்றுவிடலாம். பிரபஞ்சம் அளவில் இருக்கின்ற பெரும் கோள்கள், நட்சத்திரங்களாக நாம், அதாவது நம்முடைய முன்னோர்கள் எடுத்துக்கொண்டார்கள். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனைச் சேர்த்து ஒன்பது கிரகங்களை முதன்மையாக அமைத்தார்கள். எனவே பிரபஞ்சம் உண்மை, நட்சத்திரங்கள் உண்மை, கோள்களும் உண்மை என்ற நிலையில், அதன்வழியாக வரும் அலைகளும், அவற்றின் கூடுதல் குறைவும் தவறாகிவிடுமா? அவற்றை ஜாதகத்தில் குறிப்பதும் தவறாகிவிடுமா? 

எங்கே தவறு நிகழ்கிறது என்றால், ஜாதகத்தை ஒரு ‘அடிப்படை காரணியாக, புளூ பிரிண்ட்’ என்று நினைக்காமல், மொத்தமும் அதுதான் என்று முடங்கும் அறியாமையில் தான் தவறு நிகழ்கிறது. பாதையில் இருக்கும் பாறையை, தாண்டிப்போகலாம், ஏறிப்போகலாம், உடைத்தெறிந்தும் போகலாமே? பாதை தடை இருக்கிறது எனும் சோம்பேறித்தனம் கொள்ளலாமா? இதில் ஜோதிடர்களை குறை சொல்லும் நபர்களும் உண்டு. உனக்கு திறமை உண்டுதானே? நீ அதை கற்றுக்கொள்ளலாமே?!

பித்ரு தோஷம் என்பது நம்முடைய முன்னோர்களை குறிக்கிறது. அவர்களின் தொடர்ச்சியாவேதான் நாம் பிறந்தோம் என்பது உண்மைதானே? அவர்களுக்கான மிச்சம், நம்மோடும் தொடரக்கூடும் அல்லவா? இதை வேதாந்தம் சொல்லும் கர்மா என்றும், யோகம் சொல்லும் வினைப்பதிவுகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையை கர்மயோகமாக மாற்றிக்கொண்டால், இந்த பித்ரு தோஷம் தானாகவே அகன்றுவிடுவதை அறியலாம். ஆனால், இப்போதைய Materialistic உலகில் அதற்கு வழி இல்லைதான். அதனால் யோகம் சிறந்த தீர்வை தருகிறது.

சோதிடர்கள் தரும் ஆலோசனை வழியாக, காசி, இராமேஸ்வரம், கங்கை, காவிரி சென்று பிண்டம் வைத்து வணங்கினாலும் கூட கிடைத்திடாத நல்லமாற்றம், முழுமையான தீர்வு யோகத்தின் வழியாகவும், தியானத்தின் வழியாகவும் கிடைக்கிறது. நிச்சயமாக, பித்ரு தோஷம் நீங்கிய வாழ்வை நாம் பெறமுடியும். அதற்கு பிறகு, அந்த தோஷம் நீங்கியபிறகு ஒரு குழந்தை பிறந்தால், அதன் ஜாதகம் கணிக்கும் பொழுது, அதை ஆராய்ந்தால், பித்ரு தோஷமற்ற ராகு கேது நிலையை நாம் காணவும் முடியும் அது உண்மை. ஆனால் இக்காலத்தில் அதையும் சிலர் பித்ரு தோஷமே என்று கதை கட்டுவார்கள் என்பதும் உண்மை. பிறப்பின் நோக்கத்தை, கடமையை அறியவிடாமல் தடுப்பது தான் தோஷமே தவிர மற்ற எதுவும் தோஷம் அல்ல என்ற உண்மையையும் அறிந்து கொள்ளுங்கள்.

இதைப்படித்து அறிந்துவிட்டு, உங்கள் ஜாதகத்தை அனுப்பவேண்டாம். ஏற்கனவே, கர்மா என்ற வினைப்பதிவு, பித்ரு தோஷம், பாவம் என்ற தலைப்பிலான ஆராய்ச்சியை அன்பர்களின் ஜாதகம் வழியாக அறிந்து, அவர்களுக்கு விளக்கமும், தீர்வு வழிமுறைகளும் சொல்லி முடித்துவிட்டேன். நிறைவும் செய்துவிட்டேன்.

வாழ்க வளமுடன்
-

Why mind recalling at morning all that we like to forget before sleeping?


ஒரு நாளின் இரவில், தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளின் இரவில், தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது ஏன்?

பதில்:

ஓவ்வொருக்கும் இருக்கின்ற மனதின் தன்மையே அதுதானே? இயற்கையின் அற்புதம் இது. மேலு மனிதனும் மனமும் பிரித்துப்பார்த்திட முடியாது அல்லவா? உங்களை விடவும் மனம் எப்போதும் விழிப்பில்தான் இருக்கும். நீங்கள் மறந்தாலும் மனம் மறக்காது. அதுபோலவே நீங்கள் விரும்பும் பொழுதெல்லாம் அது எடுத்தும் காட்டாது. அதற்கென்று இயற்கை நியதி இருக்கிறது. அதன்படிதான் மனமானது செய்படுகிறது. இரவு தூக்கத்தில் மனம் இல்லை என்று யாராவது உங்களுக்கு சொன்னார்களா?  தூக்கத்தில் மனம் தன்னுடைய செய்ல்பாடுகளை குறைத்துக் கொள்கிறது என்பதுதான் உண்மை. இன்னொருவகையில், அது நடுமனமாகவும், ஆழ்மனமாகவும் கூட செயல்படுவதற்கான வாய்ப்புகள் அங்கே இருக்கிறது. உங்களுக்கு எழும் கனவுகளும், காட்சிகளும் அந்தவகைதான். இதை நடுமன, ஆழ்மன நிலைகளை மனசாட்சி என்றும் சொல்லுகிறோம்.

எப்போதும் நம்மோடு யாரும் துணை இருக்கமாட்டார்கள். அப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான். ஆனால் நம்மோடு நம் மனம் எப்போதும் இருக்கும். நாம் செய்வதையும், பிறர் செய்வதையும் கவனிக்கும், அதை பதிந்து வைக்கும். அவ்வப்பொழுது எடுத்துக் காட்டும். சரி தவறு என்பதெல்லாம் அதற்கில்லை. அதை சரி தவறு என்று தீர்மானிப்பதும், இனம் பிரிப்பதும் நாம்தான். நீங்கள் தனியாக கட்டளை இட்டு ‘இதையெல்லாம் பதிந்து கொள்ளாதே, கண்டும் காணாமல் விட்டுவிடு’ என்று சொல்லமுடியாது. தாஜா செய்யவும் முடியாது, மிஞ்சினாலும், கொஞ்சினாலும் உங்கள் மனம் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளாது. இயற்கையின் பெருநிதி அல்லவா?!

ஆனால் மனதின் துணை கொண்டு நீங்கள் வாழ்வது போலவே, அதனோடு இணைந்து ஆராய்ச்சி செய்து, உங்கள் வாழ்க்கையை சீர் செய்திட முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் உலகில் வழங்கப்படும் எந்த மன பயிற்சி கற்றாலும், மனதை மாற்றிடவோ, தள்ளிவைத்து பழகவோ, சும்மா இருக்கவிடவோ முடியவே முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படியென்றால் வேறு வழியே இல்லையா? என்று கேட்டால், யோகம் என்பது தான் சிறந்த வழி. ஆனால் இங்கேதான் யாருக்குமே யோகத்தில் ஆர்வமில்லையே? நேரடியாக ஞானம் வேண்டும் என்கிறார்கள், ஆனால் யோகம் தேவையில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். சரி அது அவர்கள் பாடு.

இரவில்  தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது இயல்பு. நீங்கள் என்ன செய்யலாம் என்றால், மறக்க நினைப்பதற்கு பதிலாக, என்னென்ன நடந்தது? அதில் என்ன தவறு நான் செய்தேன்? மற்றவர்கள் பங்கு என்ன? அதை நான் தடுத்தேனா? ஆராயாமல் ஏற்றுக்கொண்டேனா? தவறுக்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என்ற பல கேள்விகளோடு நீங்கள் ஆராய்ந்து பழகலாம். அது காலையில் ஏதேனும் ஒரு தீர்மானத்திற்கு, தெளிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. இது முழுமையான தீர்வு அல்ல, எனினும் கொஞ்சமாவது உங்களுக்கு பயன் தருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வாழ்க வளமுடன்
-

What is the truth of, Human athma contaminated is cause for life problems said by Vedanties?


மனிதனின் வாழ்க்கை மட்டுமே புதிராக இருப்பதற்கு காரணம் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாதான் என்று வேதாந்திகள் சொல்லுவதன் அர்த்தம் என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனின் வாழ்க்கை மட்டுமே புதிராக இருப்பதற்கு காரணம் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாதான் என்று வேதாந்திகள் சொல்லுவதன் அர்த்தம் என்ன?

பதில்:

உலகில் வாழும் ஜீவன்களின் பரிணாமத்தில், ஆறாவது அறிவின் உயர்வில் வந்தவனே மனிதனாகிய நாமும் நம்முடைய சக உதிரர்களும். உதிரம் என்றால் இரத்தம், சக உதிரம் என்றால் எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான இரத்தம் என்ற உயர் கருத்தாக அமைகிறது. ஆறாவது அறிவில் பரிணமித்தாலும்கூட அதில் உண்மை விளக்கத்தை பெறததால், மனிதனுடைய வாழ்க்கை புதிராக இருக்கிறது. மேலும் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாவே காரணம் என்ற வேதாந்த கருத்து உண்மைதான். 

இந்த களங்கம் என்பதை குறை அறிவு, விளக்கமற்ற நிலை, மறதி, விலகி நிற்றல் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதை நிவர்த்தி செய்தால், வாழ்கின்ற வாழ்வின் உண்மை புரிந்துவிடும். மனிதனுக்கு மனிதனே செய்யும் தீங்கு எழாது. தனிமனிதனும் அமைதி அடைவான், உலகமும் அமைதிபெறும். ஓர் உலகம் என்ற ‘உலக சமாதானமும்’ கிடைத்துவிடும்.

உண்மையாகவே ‘இந்த மனித சமுதாயம், வாழ வழி தெரியாமல் திகைத்து சிக்கல் ஏற்றது’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். உங்களுக்கே தெரியும் உண்மை அதுதான். ஆனால் நாம் மறந்துவிட்டு, எதோ வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்று வாழ்நாட்களை கடத்தி வருகிறோம் அல்லவா? எல்லோருக்கும் பிறப்பு என்று உண்டு, அதுவும் சமகால நாட்களான ஒன்பதுமாதம், குறை பிரவசம் தனியானது. எல்லோருக்கும் பசிவந்தால் அதை உணவால் சரிசெய்தல். வலி, நோய் தொந்தரவு இவற்றை மருந்தால் குணமாக்குதல். உழைப்பு, சோர்வு, தூக்கம், விழிப்பு என்பதுவும் பொது. சுவாசிக்கும் காற்று, வெப்பம், மழை நீர் ஆகியனவும் இயற்கை வழங்கிய பொதுவானது. உடல், அதனோடுகூடிய உயிர், அதில் எல்லாம் உணர்வாக பெற்று அறிந்து உணர்ந்து வாழ மனம் ஆகியனமும் பொதுவானது. வாழ்க்கையும் பொதுவானது, அதில் மரணமும் பொதுவானது. ஆனால் இந்த பொதுத்தன்மை எல்லா மனிதர்களிடமும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. ஏழைக்கும், நடுத்தரவாதிக்கும், செல்வந்தருக்கும் வேறுபாடாக அல்லவா இருக்கிறது? அதனால்தானே சிக்கலும் கூட எழுகிறது?

நாடகத்தில் வேஷம் கலைத்தால், சராசரி மனிதனாகிவிடுவது போல, இதிலிருந்து மனிதன் எப்போது மாறி, உண்மையை உணர்வது? அதற்காகத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘தனிமனித விடுதலைதான்’ இந்த உண்மையை உணரத்தரும் என்கிறார். மேலும் மனிதன் யோகத்தில் இணைந்துதான் உண்மையை பெறமுடியும் என்றும் சொல்லுகிறார். 

வேதாந்த கருத்துக்கள் உண்மையானதுதான். அது உண்மைக்கு மிக நெருக்கமாக ஒரு மனிதனை உயர்த்தவல்லது. யோகம் அந்த உண்மையை மனிதனுக்கு, அறிந்ததை, புரிந்ததை உணரவைப்பதாகும்.
வாழ்க வளமுடன்
-

I am grieving the death of a pet I loved What to do?


பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?


பதில்:

ஒருவகையில் வார்த்தைகளால் ஆறுதல் செய்யமுடியாத இழப்பீடுதான். என்றாலும் உங்கள் உங்கள் கேள்விலேயே ‘பாசம்’ என்றொரு வார்த்தையிலேயே பதில் இருக்கிறது. ஆமாம். உறவு, நட்பு என்பதைக் கடந்து பாசம் என்று வரும்பொழுது, அதிகமான பிணைப்பு உருவாகிவிடுகிறது. இதை கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லமுடியும். அதில் ஒரு எதிர்பார்ப்பும் வந்துவிடும். ஆனால் செல்லப்பிராணிகள் அதன் அளவில்தான் இருக்குமே தவிர மனிதனுக்குண்டான, எதிர்பார்ப்பு இருப்பதில்லை.

இன்றைய உலகில், செல்லப்பிராணிகள் அன்பாக இருக்கின்றன என்ற கருத்து நிலவுவது, அன்றைய நாட்களிலும் இருந்து வந்ததுதான். மனிதனோடு பழக்ககூடிய பிராணிகள் தன்னளவில், தன்னுடைய அடிப்படை குணத்தை கொஞ்சமாவது குறைத்துக்கொள்கின்றன எனலாம். வேறெந்த காட்டு விலங்கினங்களையும் நாம் பழக்கிட முடியாது, செல்லப்பிராணியாக வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கான தீர்வாக, அதிலிருந்து கடந்து வருவதுதான் நல்லது. இறப்பு என்பது எல்லா ஜீவன்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கையில் அதற்கு நாம் தயார்செய்து கொள்வதுதான் சிறந்தது. உங்களால் முடிந்தளவு, வாழ்த்துக்களால் அதை சரிசெய்யுங்கள். இறந்த துன்பத்தையும், இழப்பையும் அடிக்கடி நினைப்பதைவிடவும், அந்த செல்லப்பிராணியோடு, நீங்கள் மகிழ்வாக இருந்த தருணங்களை நினைத்துப்பாருங்கள். அதையே மனதிற்குள் ஓடவிடுங்கள். அப்படி நீங்கள் பழகிவிட்டால், துக்கம் உங்களிடமிருந்து தானாகவே விலகிவிடும்.

உங்களுக்குத்தெரியுமா? பெரும்பாலான செல்லப்பிராணிகள், மனிதர்களுக்கு எதிரான உயிர்ச்சுழலைக் கொண்டுள்ளன. அதனால் நம்முடைய யோக பயணத்தில், அவைகளின் நெருக்கும் ஒருதடையை ஏற்படுத்தும். முடிந்தளவு அவைகளிடம் இருந்து விலகி இருத்தல் நல்லதுதான். இயற்கையாக நடந்த ஒரு நிகழ்வை நீங்கள் கடந்து நின்று, இனி உங்களை மாற்றிக்கொண்டு, யோகத்தின் வழியில் பயணியுங்கள். மனதில் அமைதி நிலவிட மாற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-