கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனிதனின் வாழ்க்கை மட்டுமே புதிராக இருப்பதற்கு காரணம் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாதான் என்று வேதாந்திகள் சொல்லுவதன் அர்த்தம் என்ன?
பதில்:
உலகில் வாழும் ஜீவன்களின் பரிணாமத்தில், ஆறாவது அறிவின் உயர்வில் வந்தவனே மனிதனாகிய நாமும் நம்முடைய சக உதிரர்களும். உதிரம் என்றால் இரத்தம், சக உதிரம் என்றால் எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான இரத்தம் என்ற உயர் கருத்தாக அமைகிறது. ஆறாவது அறிவில் பரிணமித்தாலும்கூட அதில் உண்மை விளக்கத்தை பெறததால், மனிதனுடைய வாழ்க்கை புதிராக இருக்கிறது. மேலும் அவனுடைய களங்கமுற்ற ஆத்மாவே காரணம் என்ற வேதாந்த கருத்து உண்மைதான்.
இந்த களங்கம் என்பதை குறை அறிவு, விளக்கமற்ற நிலை, மறதி, விலகி நிற்றல் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதை நிவர்த்தி செய்தால், வாழ்கின்ற வாழ்வின் உண்மை புரிந்துவிடும். மனிதனுக்கு மனிதனே செய்யும் தீங்கு எழாது. தனிமனிதனும் அமைதி அடைவான், உலகமும் அமைதிபெறும். ஓர் உலகம் என்ற ‘உலக சமாதானமும்’ கிடைத்துவிடும்.
உண்மையாகவே ‘இந்த மனித சமுதாயம், வாழ வழி தெரியாமல் திகைத்து சிக்கல் ஏற்றது’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். உங்களுக்கே தெரியும் உண்மை அதுதான். ஆனால் நாம் மறந்துவிட்டு, எதோ வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்று வாழ்நாட்களை கடத்தி வருகிறோம் அல்லவா? எல்லோருக்கும் பிறப்பு என்று உண்டு, அதுவும் சமகால நாட்களான ஒன்பதுமாதம், குறை பிரவசம் தனியானது. எல்லோருக்கும் பசிவந்தால் அதை உணவால் சரிசெய்தல். வலி, நோய் தொந்தரவு இவற்றை மருந்தால் குணமாக்குதல். உழைப்பு, சோர்வு, தூக்கம், விழிப்பு என்பதுவும் பொது. சுவாசிக்கும் காற்று, வெப்பம், மழை நீர் ஆகியனவும் இயற்கை வழங்கிய பொதுவானது. உடல், அதனோடுகூடிய உயிர், அதில் எல்லாம் உணர்வாக பெற்று அறிந்து உணர்ந்து வாழ மனம் ஆகியனமும் பொதுவானது. வாழ்க்கையும் பொதுவானது, அதில் மரணமும் பொதுவானது. ஆனால் இந்த பொதுத்தன்மை எல்லா மனிதர்களிடமும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது. ஏழைக்கும், நடுத்தரவாதிக்கும், செல்வந்தருக்கும் வேறுபாடாக அல்லவா இருக்கிறது? அதனால்தானே சிக்கலும் கூட எழுகிறது?
நாடகத்தில் வேஷம் கலைத்தால், சராசரி மனிதனாகிவிடுவது போல, இதிலிருந்து மனிதன் எப்போது மாறி, உண்மையை உணர்வது? அதற்காகத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘தனிமனித விடுதலைதான்’ இந்த உண்மையை உணரத்தரும் என்கிறார். மேலும் மனிதன் யோகத்தில் இணைந்துதான் உண்மையை பெறமுடியும் என்றும் சொல்லுகிறார்.
வேதாந்த கருத்துக்கள் உண்மையானதுதான். அது உண்மைக்கு மிக நெருக்கமாக ஒரு மனிதனை உயர்த்தவல்லது. யோகம் அந்த உண்மையை மனிதனுக்கு, அறிந்ததை, புரிந்ததை உணரவைப்பதாகும்.
வாழ்க வளமுடன்
-