கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளின் இரவில், தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது ஏன்?
பதில்:
ஓவ்வொருக்கும் இருக்கின்ற மனதின் தன்மையே அதுதானே? இயற்கையின் அற்புதம் இது. மேலு மனிதனும் மனமும் பிரித்துப்பார்த்திட முடியாது அல்லவா? உங்களை விடவும் மனம் எப்போதும் விழிப்பில்தான் இருக்கும். நீங்கள் மறந்தாலும் மனம் மறக்காது. அதுபோலவே நீங்கள் விரும்பும் பொழுதெல்லாம் அது எடுத்தும் காட்டாது. அதற்கென்று இயற்கை நியதி இருக்கிறது. அதன்படிதான் மனமானது செய்படுகிறது. இரவு தூக்கத்தில் மனம் இல்லை என்று யாராவது உங்களுக்கு சொன்னார்களா? தூக்கத்தில் மனம் தன்னுடைய செய்ல்பாடுகளை குறைத்துக் கொள்கிறது என்பதுதான் உண்மை. இன்னொருவகையில், அது நடுமனமாகவும், ஆழ்மனமாகவும் கூட செயல்படுவதற்கான வாய்ப்புகள் அங்கே இருக்கிறது. உங்களுக்கு எழும் கனவுகளும், காட்சிகளும் அந்தவகைதான். இதை நடுமன, ஆழ்மன நிலைகளை மனசாட்சி என்றும் சொல்லுகிறோம்.
எப்போதும் நம்மோடு யாரும் துணை இருக்கமாட்டார்கள். அப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான். ஆனால் நம்மோடு நம் மனம் எப்போதும் இருக்கும். நாம் செய்வதையும், பிறர் செய்வதையும் கவனிக்கும், அதை பதிந்து வைக்கும். அவ்வப்பொழுது எடுத்துக் காட்டும். சரி தவறு என்பதெல்லாம் அதற்கில்லை. அதை சரி தவறு என்று தீர்மானிப்பதும், இனம் பிரிப்பதும் நாம்தான். நீங்கள் தனியாக கட்டளை இட்டு ‘இதையெல்லாம் பதிந்து கொள்ளாதே, கண்டும் காணாமல் விட்டுவிடு’ என்று சொல்லமுடியாது. தாஜா செய்யவும் முடியாது, மிஞ்சினாலும், கொஞ்சினாலும் உங்கள் மனம் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளாது. இயற்கையின் பெருநிதி அல்லவா?!
ஆனால் மனதின் துணை கொண்டு நீங்கள் வாழ்வது போலவே, அதனோடு இணைந்து ஆராய்ச்சி செய்து, உங்கள் வாழ்க்கையை சீர் செய்திட முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் உலகில் வழங்கப்படும் எந்த மன பயிற்சி கற்றாலும், மனதை மாற்றிடவோ, தள்ளிவைத்து பழகவோ, சும்மா இருக்கவிடவோ முடியவே முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படியென்றால் வேறு வழியே இல்லையா? என்று கேட்டால், யோகம் என்பது தான் சிறந்த வழி. ஆனால் இங்கேதான் யாருக்குமே யோகத்தில் ஆர்வமில்லையே? நேரடியாக ஞானம் வேண்டும் என்கிறார்கள், ஆனால் யோகம் தேவையில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். சரி அது அவர்கள் பாடு.
இரவில் தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது இயல்பு. நீங்கள் என்ன செய்யலாம் என்றால், மறக்க நினைப்பதற்கு பதிலாக, என்னென்ன நடந்தது? அதில் என்ன தவறு நான் செய்தேன்? மற்றவர்கள் பங்கு என்ன? அதை நான் தடுத்தேனா? ஆராயாமல் ஏற்றுக்கொண்டேனா? தவறுக்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என்ற பல கேள்விகளோடு நீங்கள் ஆராய்ந்து பழகலாம். அது காலையில் ஏதேனும் ஒரு தீர்மானத்திற்கு, தெளிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. இது முழுமையான தீர்வு அல்ல, எனினும் கொஞ்சமாவது உங்களுக்கு பயன் தருவதற்கு வாய்ப்பு உள்ளது.
வாழ்க வளமுடன்
-