Please explain the good, bad, and benefits on the almighty's believes and unbelieves?
இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!
பதில்:
நல்ல கேள்விதான் எனினும், இங்கே பொதுவெளியில் சுருக்கமாகவேதான் சொல்ல முடியும். கடவுளை வணங்குவோர் குறித்து பேசினாலும், கடவுள் இல்லை என்று சொல்வோரை குறித்து பேசினாலும் இங்கே தேவையற்ற பிரச்சனைகள்தான் எழுகின்றன என்று வருந்துவோர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் இந்த உலகில், உண்மைகளை எடுத்துப் பேசுவோர்களுக்கும், விளக்கமளித்து பேசுவோருக்கும் எதிரிகள் உருவாகிவிடுவார்கள். எனவே மிகசுருக்கமாக சிலவற்றை இங்கே சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய கருத்தல்ல, நான் பலவழிகளில் அறிந்து கொண்ட வகையில், மற்றவர்கள் தந்த குறிப்பு மட்டுமே.
என்னைப் பொறுத்தவரையில் நான், கடவுளை வணங்குவோரையும், கடவுள் இல்லவே இல்லை என்போரையும் குறித்து தனிப்பட்ட எந்தக்கருத்தும் சொல்லுவதில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு அது அனுபவமாகவில்லை எனவே கடவுள் இல்லவே இல்லை என்கிறீர்கள். அவ்வளவுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.
இந்த இரண்டு நிலைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுக்குள்ளாக ‘ஒரு நம்பிக்கை’ உண்டு. அந்த நம்பிக்கை பெரும்பாலும், மற்றவர்களால்தான் உருவாகிறது. அது தொடர்வதும், அற்றுப் போவதும், அவர்களுக்கே அது அனுபவமாகும் பொழுதுதான். வளரும் சிறுவயதில் பெற்றோர் ஏற்படுத்தும் பக்தி நம்பிக்கை, தொடர்ந்தால் அக்குழந்தையும் ‘கடவுளை’ நம்பும். பெற்றவர்களுக்கே பக்தியும், கடவுள் நம்பிக்கையும் இல்லையென்றால் அக்குழந்தைக்கும் ‘கடவுள்’ இல்லைதான், அதுகுறித்த நம்பிக்கையும் இல்லைதான். பக்திமார்க்கத்தில் வளர்ந்த சிறுவர் சிறுமியர் கூட பிறகு வளர்ந்த நிலையில், சூழ்நிலையினாலும், மற்ற கருத்துளினாலும், தன்னறிவினாலும், பகுத்தறிவு சிந்தனைகளினாலும் தன் சுய அறிவால், சில காலங்களுக்குப்பிறகு ‘இரண்டாவது நிலைப்பாட்டுக்கு, இல்லாத நிலைப்பாட்டுக்கு’ வந்துவிடுவதுண்டு.
உலகில் பிறந்த மனிதன் ஆறாவது அறிவின் துணைக்கொண்டுதான் மற்ற எல்லா உயிரினங்களை விடவும், சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்கிறான், அந்த சிந்தனையே மனிதனை, விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து, பிரித்து உயர்த்துகிறது. எல்லாவகையான உணர்வையும் விலங்குகள் போலவே பெற்று மகிழ்கிறான் என்பதும் உண்மை. கூடவே, அந்த உணர்வுகளையே பெறுவது நானேதான் என்றும் உணர்கிறான். இதனினும் மேலாக, அந்த நான் என்பது யார்? என்று சிந்தனையும் இயல்பாக எழுவது உண்மைதான். ஆனால் இந்த ‘நான் யார்?’ அவ்வளவு எளிதில் சராசரி மனிதனுக்கு வருவதே இல்லை. என்றாலும் அந்த கேள்வியோடு, யோகசாதனை வழியாக, இதை அறிந்த முன்னோர்கள்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் தங்களோடு வாழ்கின்ற மக்களின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு, புரிந்து கொள்ளும்படியாக எளிமைநிலை கருதி, ‘இப்படியான உண்மை, உட்பொருளாக, மெய்ப்பொருளாக இருக்கிறது. அதை அறிந்தும், உணர்ந்தும் உங்கள் வாழ்வை சிறப்பித்துக்கொள்க’ என்ற கருத்தில், அதை ஆன்மீகத்தத்துவமாக, கருத்துருவாக ‘இறை’ என்ற உண்மை விளக்கத்தை தந்தார்கள். அதுவே கட+உள்=கடவுள் என்பதாக ஆகிற்று. ஆகவே, கடவுள் என்ற கருத்துரு வணக்கத்தில், பொதுவாகவே, நம்பிக்கை என்ற நிலைக்கு அடுத்ததாக, பரிபூரண நம்பிக்கை (FAITH) என்ற நிலைக்கு உயர்ந்தால்தான், பக்தியில் இருப்பவர் கூட, ஓரளவில் உயர்ந்து இறை உண்மையை அறியமுடியும்.
மேற்சொன்ன இந்த கருத்துக்கு எதிரான போக்குத்தான், கடவுள் இல்லை என்ற நிலைபாடு ஆகும். மனிதனும் ஓர் பிறப்பே என்ற நிலையோடு, ஆறாவது அறிவின் துணையோடு, உலக இன்பங்களை துய்த்து வாழ்ந்து வரலாம். கடவுள் என்ற கருத்துருவுக்கு இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படியாக ஏமாற்றிக் கொள்ளவும் தேவையில்லை என்பதான போக்கு ஆகும். இங்கேயும் ஒரு , பரிபூரண நம்பிக்கை (FAITH) உள்ளதுதான். அது, மனிதனுக்கென்று இருக்கிற ஆறாவது அறிவில் இயற்கை தவிர ‘வேறு எதற்கும்’ இடமில்லை என்பதாகும். அந்த இயற்கையையும் ‘ஏதொன்றும் தனியாக, சிறப்பாக’ கூறவும் அவசியமில்லை என்பதுமாகும்.
இரண்டிலும், நன்மை, தீமை, பயன்கள் எல்லாமே, உணர்ந்து அறியக்கூடியதாக இருப்பதால் அதை நீங்கள், உங்களுக்கு எந்த , பரிபூரண நம்பிக்கை (FAITH) வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கை, உங்கள் தேர்வு என்பதன் வழியாக உணர்ந்து அறிந்து கொள்க!
வாழ்க வளமுடன்
-