Is there any reason for the mentality to expect free and idle giving?
யோகத்தை இலவசமாக, கட்டணமின்றி, சும்மா தருவதையே எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஏதேனும் காரணம் உண்டா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தை இலவசமாக, கட்டணமின்றி, சும்மா தருவதையே எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஏதேனும் காரணம் உண்டா?
பதில்:
நல்ல கேள்வி, நன்றி, வரவேற்கிறேன். யோகத்தை இலவசமாக, கட்டணமின்றி, சும்மா தருவதையே எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஏதேனும் காரணம் உண்டு. இதற்கு, அந்த யோகிகளும், ஞானிகளும், மகான்களுமே காரணமாகியும் விடுகின்றனர் என்பதும் உண்மை. அப்படியானால் அவர்களின் தவறா? என்று உடனடியாக கருதிவிட வேண்டாம். மெய்ப்பொருள் உணர்ந்து, உண்மை விளக்கம் கண்ட யோகிகளும், ஞானிகளும், மகான்களும் எதையும் ‘எதிர்பாராத’தன்மைக்கு வந்துவிடுவார்கள். தாங்கள் அறிந்த ஒன்றை, தன்னைப்போலவே மற்றவர்களும் அறிய வேண்டும் என்று ஆர்வம் மிகுந்தவர்கள். அதனால், விரும்பி கேட்போருக்கும், தேவைப்படுவோர்க்கும் அந்த யோகமும், அதற்கான கல்வியும் ‘இலவசமாக, கட்டணமின்றி, சும்மா’ தந்துவிடுவார்கள்.
இந்த யோகத்திற்கு விலை வைக்கமுடியுமா? வாய்ப்பே இல்லை. ஓவ்வொரு யோகிகளும், ஞானிகளும், மகான்களும், ஆசிரியர்களும் பல ஆண்டுக்காலம் தவமும், ஆராய்ச்சியும் செய்து பெற்றுக்கொண்ட உண்மை அல்லவா? மேலும் என்னதான் அவர்கள் முழுவதுமாக விளக்கம் சொல்லி உண்மையை புரியவைத்தாலும் கூட, கேட்கும் /கற்கும் நபரின் அறிவு அவ்வளவையும் ஏற்கும் அளவிற்கு தகுதிவாய்ந்ததாகவும் இருக்காது. படிப்படியாகவேதான், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரியும். அதற்காகத்தான் கல்வி என்ற முறையாக வளர்ந்தது.
ஒரே நாளில் நீங்கள் பியானோ வாசிக்க கற்றுவிட முடியுமா? கற்றுக் கொண்டு பாடல்தான் இசைக்கமுடியுமா? ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு பியானோ கட்டை ஒலியை இயக்கி கேட்டு இசை விரலுக்கும், காதுக்கும், மூளைக்கும் முடிச்சுபோட்டு, புரிந்துகொண்டு, இப்படி பல நாட்கள் பழகி வந்தால்தானே முழுமை அடையும்?
மேலும், மக்களின் இந்த மனநிலைக்கு, இன்னொரு அசட்டையான காரணமும் உண்டு, அது ‘யோகம் கற்றால் ஒருபலனும் இல்லை, இருக்கும் வாழ்க்கையும், காசும், பணமும் கூட போய்விடும்’ என்பதாகும். இப்படி ஒரு பிரயோஜனும் இல்லாத ஒன்றை ‘யாராவது பணம் கட்டி, காசு கொடுத்து படிப்பார்களா?’ அதானே?!
ஒரு மனிதருக்கு ஒரு பொருளோ, உண்மையோ, கருத்தோ ‘இலவசமாக, கட்டணமின்றி, சும்மா’ கிடைத்தால் நிச்சயமாக அதன் மதிப்பை உணர்ந்துகொள்ளவே மாட்டார். நான் வேடிக்கையாக சொல்லுவேன் ‘ நான் தருவதாக இருந்தால் சும்மா கொடு என்பார்கள், அவர்களிடம் ஏதேனும் கேட்டால், காசு கொடு என்பார்கள்’ என்று. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, காயகல்ப யோகத்தை, தன்னுடைய ஆராய்ச்சியின் பொழுதும், கட்டணமின்றிதான் சொல்லிக்கொடுத்தார். ஆராய்ச்சி முழுமை அடைந்த பிறகும் கட்டணமின்றிதான் மக்களுக்கு கொடுத்தார். அவரே கடுமையான வாழ்க்கை சிக்கலில் இருந்தபொழுதும் அதை தொடர்ந்தார். கற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்தித்து செய்துவருகிறீர்களா? பலன் கிடைத்ததா? என்று மகரிஷி அவர்கள் கேட்டதற்கு, செய்யவில்லை, செய்ய நேரமும் இல்லை’ என்ற பதில் தவிர வேறெந்த பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை. பிறகுதான் மற்றவர்களும், மகரிஷியின் சேவையின் மதிப்புணர்ந்த அன்பர்களும், இதை சுட்டிக்காட்டி, கட்டணம் அமைத்து அதன்படி கல்வியாக மாற்றுங்கள் என்று சொன்னபிறகுதான், அதற்கான மதிப்பும் உயர்ந்தது.
உலக மக்களின் பொதுவான கருத்து, பால் தரும் பசுமாட்டுக்கு உணவிடாமல் நிறைய பால்கறக்க நினைப்பார்கள், கனிதரும் மரத்தை பாதுகாக்காமல் பழமும் பறித்து, மரத்தையும் உடைப்பார்கள். தான் பால் தருகிறோம் என்று பசுவும் நினைக்காது, பழமும், தன்னையும் தருகிறேன் என்று மரமும் நினைக்காது. அப்படித்தான் ஞானியும், மகானும், யோகியும் இருப்பார்கள் என்பது உறுதி. கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
கற்ற யோகப்பயிற்சிகளுக்கும் நான் கட்டணம் செலுத்தியுள்ளேன். அதில் உயர்வு பெற பல ஆண்டுகள் ஆராய்ச்சியும் செய்துள்ளேன். இன்று மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கும் உயர்வு பெற்றுள்ளேன். எனக்கும் எந்தவித கட்டணமின்றி, இலவசமாக, சும்மா கொடுக்க ஆசைதான். ஆனால் ‘அந்த கல்வி அதனுடைய மதிப்பை இழந்துவிடுமே?’ என்பதால் அமைதியாக இருக்கிறேன். ஆனால் நானும் ஏதோ எதிர்பார்த்து இந்தயோகத்தை நான் தரவில்லை. குரு மகான் வேதாத்திரி சொன்னதுபோல ‘ஒவ்வொரு தனி மனிதனின் உயர்வும், இந்த உலக மனித சமுதாயத்திற்கு உரியது. அந்த உயர்வு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சென்று சேரவேண்டும்’ என்பதுதான். காத்திருக்கிறேன். காலம் பதில் சொல்லும்.
வாழ்க வளமுடன்
-