கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நன்றாக பழகியவர்களே, நம்மை சமயம்பார்த்து காலைவாறி விடுவதும், உதவிய நம்மை தூற்றுவதும் ஏன்? நிறை அனுபவம் கிடைத்தும் ஏன் என்னால் மாற முடியவில்லை?!
பதில்:
மனிதர்களின் பொதுவான மனோபாவம், குணாதியம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் Personality என்பார்கள். அது ஒவ்வொருவருக்கும், 16 காரணங்களால் மாறுபடும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்றின் கூடுதல் குறைவு சதவீதமும், மனிதர்களை மாற்றிக்கொண்டே இருக்கும். ஒருவர் பிறப்பிலேயே நல்லவராக இருப்பதற்கும், பிறப்பிலேயே தன் இயல்பை மாறாக காட்டுவதும் இதனால்தான். சிலருக்கு மத்திம காலத்தில் வளரும் பொழுது, தன் அனுபவங்களால் மாறவும் செய்யும். இன்னும் சிலர், தன் வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிலையிலும், அந்த அனுபவம் பெறும் பொழுதும் நல்லவராக வாழ முயற்சிப்பார். இன்னும் ஒருசிலர், நான் யாருக்காகவும் மாறவேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் தொடர்ந்து பிரச்சனைக்கு உரியவராக இருப்பார்.
ஒரு மனிதர், இன்னொரு மனிதரோடு தொடர்பு கொள்ளும் பொழுது, சக மனிதர் என்ற பார்வை வெகு சிலருக்குத்தான் இருக்கும். இப்பொழுது மணி என்ன? என்று கேட்டால் கூட (இப்பொழுது யாருமே கேட்பதில்லை என்றாலும் கூட) நாம் கேட்டது காதில் விழவே இல்லை என்ற ரீதியில் இருப்பார்கள். அதாவது அவர்கள், மனிதர்களின் தரம் பார்த்துத்தான் பதிலே சொல்லுவார்கள் என்பதாக அவர்கள் மனநிலை இருக்கிறது.
சிங்கங்கள் சிங்கங்ளோடு பேதம் காணுவதில்லை. ஆடுகள் ஆடுகளோடு பேதம் காணுவதில்லை. ஆனால் மனிதர்களில் சிங்கமும் உண்டு, ஆடுகளும் உண்டு. இன்னும் பலப்பல மிருங்கங்களும் உண்டு. யாரும் பொருத்தமில்லாததாக நினைக்க வேண்டாம். அத்தகைய குணாதசியம் என்பதை சொல்லவந்தேனே தவிர வேறெதும் இல்லை. இது ஏன்? காரணம் அவர்களுக்காக இருக்கின்ற பதிவுகள், மனிதனின் தரத்திற்கும், ஆறாவது அறிவின் முழுமைக்கும் இல்லை என்பதுதான். தங்களை திருத்திக்கொள்ள அவர்கள் வாய்ப்பை ஏற்பதே இல்லை. கொடுத்தாலும் அதை விலக்கியும் விடுவார்கள். உலகில் நாம் காணும் ஒவ்வொரு சமூக பிரச்சனைக்களுக்கும் இதுவே காரணம். ஆறாம் அறிவு நிலைக்கான விளக்கம் இன்னமும் மக்களிடம் விழிப்புநிலை பெறவில்லை. மனம் அத்தகைய கீழான இயக்க நிலைகளிலேயே இருக்கிறது. அது மாற்றம் பெறவேண்டும்.
ஒருவரோடு நீங்கள் பழகும்பொழுது, கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உங்களைப்பற்றிய எல்லா தகவல்களையும் தந்துவிடக்கூடாது. உங்கள் மீது அக்கறை காட்டும் எந்த நபரையும் சந்தேகம் கொள்ளுங்கள். ஆனால் அவர்களை உதாசீனம் செய்திடக் கூடாது. அதனால் உங்களுக்கு நன்மை என்றால், சிலவற்றை கொடுக்கலாம், பெறலாம். ஆனால் உங்களை முழுதாக அவர்களிடம் சொல்லிவிடக்கூடாது. ஒரு எச்சரிக்கை எப்போதும் வேண்டும். நீங்களும் அவரை பயன்படுத்தக்கூடாது, அவரும் உங்களை பயன்படுத்த விடக்கூடாது. ஓவ்வொடு மனிதருடைய செயல், அசைவு, நிலை, பேச்சு இவற்றில் கவனம் வேண்டும். அது உண்மையாக எதை சொல்லுகிறது என்ற விளக்கம் பெற வேண்டும். இப்படி இன்னும் நிறைய அறிவுரைகள் உண்டுதான் எனினும், இது போதுமானது. உங்களை காலைவாறிய, தூற்றிய மனிதர்களிடம் இருந்து உடனே விலகுங்கள். அவர்களை பழி வாங்கிட ஒருபோதும் நினைக்காதீர்கள். அவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டவேண்டிய அவசியமும் உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்கள் இயல்பில் எப்போதும் இருக்கலாம்.
மிக எளிமையாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்ன, இரண்டொழுக்க பண்பாடை மறவாதீர்கள். ‘நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கோ மனதிற்கோ துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னாலான உதவிகள் செய்வேன்’ என்று அடிக்கடி சொல்லிவாருங்கள். அதை உங்களோடு பழகுவோரிடமும் படித்துப்பார்க்கச் சொல்லுங்கள். மாறுதல் உண்டாகலாம்.
வாழ்க வளமுடன்
-