I am grieving the death of a pet I loved What to do?
பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?
பதில்:
ஒருவகையில் வார்த்தைகளால் ஆறுதல் செய்யமுடியாத இழப்பீடுதான். என்றாலும் உங்கள் உங்கள் கேள்விலேயே ‘பாசம்’ என்றொரு வார்த்தையிலேயே பதில் இருக்கிறது. ஆமாம். உறவு, நட்பு என்பதைக் கடந்து பாசம் என்று வரும்பொழுது, அதிகமான பிணைப்பு உருவாகிவிடுகிறது. இதை கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லமுடியும். அதில் ஒரு எதிர்பார்ப்பும் வந்துவிடும். ஆனால் செல்லப்பிராணிகள் அதன் அளவில்தான் இருக்குமே தவிர மனிதனுக்குண்டான, எதிர்பார்ப்பு இருப்பதில்லை.
இன்றைய உலகில், செல்லப்பிராணிகள் அன்பாக இருக்கின்றன என்ற கருத்து நிலவுவது, அன்றைய நாட்களிலும் இருந்து வந்ததுதான். மனிதனோடு பழக்ககூடிய பிராணிகள் தன்னளவில், தன்னுடைய அடிப்படை குணத்தை கொஞ்சமாவது குறைத்துக்கொள்கின்றன எனலாம். வேறெந்த காட்டு விலங்கினங்களையும் நாம் பழக்கிட முடியாது, செல்லப்பிராணியாக வளர்க்கவும் முடியாது.
உங்களுக்கான தீர்வாக, அதிலிருந்து கடந்து வருவதுதான் நல்லது. இறப்பு என்பது எல்லா ஜீவன்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கையில் அதற்கு நாம் தயார்செய்து கொள்வதுதான் சிறந்தது. உங்களால் முடிந்தளவு, வாழ்த்துக்களால் அதை சரிசெய்யுங்கள். இறந்த துன்பத்தையும், இழப்பையும் அடிக்கடி நினைப்பதைவிடவும், அந்த செல்லப்பிராணியோடு, நீங்கள் மகிழ்வாக இருந்த தருணங்களை நினைத்துப்பாருங்கள். அதையே மனதிற்குள் ஓடவிடுங்கள். அப்படி நீங்கள் பழகிவிட்டால், துக்கம் உங்களிடமிருந்து தானாகவே விலகிவிடும்.
உங்களுக்குத்தெரியுமா? பெரும்பாலான செல்லப்பிராணிகள், மனிதர்களுக்கு எதிரான உயிர்ச்சுழலைக் கொண்டுள்ளன. அதனால் நம்முடைய யோக பயணத்தில், அவைகளின் நெருக்கும் ஒருதடையை ஏற்படுத்தும். முடிந்தளவு அவைகளிடம் இருந்து விலகி இருத்தல் நல்லதுதான். இயற்கையாக நடந்த ஒரு நிகழ்வை நீங்கள் கடந்து நின்று, இனி உங்களை மாற்றிக்கொண்டு, யோகத்தின் வழியில் பயணியுங்கள். மனதில் அமைதி நிலவிட மாற்றம் கிடைக்கும் என்பது உறுதி.
வாழ்க வளமுடன்
-