கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?
பதில்:
நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?
இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.
ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?
வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.
அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்
-