கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதுதான் எல்லாவற்றிற்கும் தடையாகிறது என்றும் சொல்லுகிறார்கள். அந்த பித்ரு தோஷம் என்பதை யோகத்தின் வழியாக, தியானத்தின் வழியாக தீர்க்கமுடியுமா?
பதில்:
ஒரு குழந்தை இந்த உலகில் எங்கு ஜனித்த போதிலும் அக்குழந்தைக்கு ஜாதகம் எழுதமுடியும், எந்த ஜீவன் உலகில் பிறந்தாலும், அக்குழந்தையின் அடிப்படை காரணியாக, புளூ பிரிண்ட் என்பதாக ஜாதகம் அமைந்திருக்கும் என்பதே உண்மை. அன்றைய நாளின், கிரக நிலைகள் அதில் இருந்தாலும் கூட, சூரியனும் சந்திரனும் ஒரு ஜீவனின் உயிர், மனம் இவற்றை அமைக்கிறது. அமைந்ததை சொல்லுகிறது என்றும் குறிப்பிடலாம். அந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் ராகு, கேது என்ற நிழல் கிரகங்கள் தான், நீங்கள் இந்த கேள்வியில் குறிப்பிட்ட பித்ரு தோஷம் என்பதை சொல்லுகிறது.
இப்படியெல்லாம் கதையளக்க வேண்டுமா? என்று கேட்பவர்கள் இந்த பாராவையும், அடுத்த பாரா வரையில் மட்டும் படித்துவிட்டு பிறகு வழக்கமான ஏதேனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்க்க படிக்க சென்றுவிடலாம். பிரபஞ்சம் அளவில் இருக்கின்ற பெரும் கோள்கள், நட்சத்திரங்களாக நாம், அதாவது நம்முடைய முன்னோர்கள் எடுத்துக்கொண்டார்கள். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனைச் சேர்த்து ஒன்பது கிரகங்களை முதன்மையாக அமைத்தார்கள். எனவே பிரபஞ்சம் உண்மை, நட்சத்திரங்கள் உண்மை, கோள்களும் உண்மை என்ற நிலையில், அதன்வழியாக வரும் அலைகளும், அவற்றின் கூடுதல் குறைவும் தவறாகிவிடுமா? அவற்றை ஜாதகத்தில் குறிப்பதும் தவறாகிவிடுமா?
எங்கே தவறு நிகழ்கிறது என்றால், ஜாதகத்தை ஒரு ‘அடிப்படை காரணியாக, புளூ பிரிண்ட்’ என்று நினைக்காமல், மொத்தமும் அதுதான் என்று முடங்கும் அறியாமையில் தான் தவறு நிகழ்கிறது. பாதையில் இருக்கும் பாறையை, தாண்டிப்போகலாம், ஏறிப்போகலாம், உடைத்தெறிந்தும் போகலாமே? பாதை தடை இருக்கிறது எனும் சோம்பேறித்தனம் கொள்ளலாமா? இதில் ஜோதிடர்களை குறை சொல்லும் நபர்களும் உண்டு. உனக்கு திறமை உண்டுதானே? நீ அதை கற்றுக்கொள்ளலாமே?!
பித்ரு தோஷம் என்பது நம்முடைய முன்னோர்களை குறிக்கிறது. அவர்களின் தொடர்ச்சியாவேதான் நாம் பிறந்தோம் என்பது உண்மைதானே? அவர்களுக்கான மிச்சம், நம்மோடும் தொடரக்கூடும் அல்லவா? இதை வேதாந்தம் சொல்லும் கர்மா என்றும், யோகம் சொல்லும் வினைப்பதிவுகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையை கர்மயோகமாக மாற்றிக்கொண்டால், இந்த பித்ரு தோஷம் தானாகவே அகன்றுவிடுவதை அறியலாம். ஆனால், இப்போதைய Materialistic உலகில் அதற்கு வழி இல்லைதான். அதனால் யோகம் சிறந்த தீர்வை தருகிறது.
சோதிடர்கள் தரும் ஆலோசனை வழியாக, காசி, இராமேஸ்வரம், கங்கை, காவிரி சென்று பிண்டம் வைத்து வணங்கினாலும் கூட கிடைத்திடாத நல்லமாற்றம், முழுமையான தீர்வு யோகத்தின் வழியாகவும், தியானத்தின் வழியாகவும் கிடைக்கிறது. நிச்சயமாக, பித்ரு தோஷம் நீங்கிய வாழ்வை நாம் பெறமுடியும். அதற்கு பிறகு, அந்த தோஷம் நீங்கியபிறகு ஒரு குழந்தை பிறந்தால், அதன் ஜாதகம் கணிக்கும் பொழுது, அதை ஆராய்ந்தால், பித்ரு தோஷமற்ற ராகு கேது நிலையை நாம் காணவும் முடியும் அது உண்மை. ஆனால் இக்காலத்தில் அதையும் சிலர் பித்ரு தோஷமே என்று கதை கட்டுவார்கள் என்பதும் உண்மை. பிறப்பின் நோக்கத்தை, கடமையை அறியவிடாமல் தடுப்பது தான் தோஷமே தவிர மற்ற எதுவும் தோஷம் அல்ல என்ற உண்மையையும் அறிந்து கொள்ளுங்கள்.
இதைப்படித்து அறிந்துவிட்டு, உங்கள் ஜாதகத்தை அனுப்பவேண்டாம். ஏற்கனவே, கர்மா என்ற வினைப்பதிவு, பித்ரு தோஷம், பாவம் என்ற தலைப்பிலான ஆராய்ச்சியை அன்பர்களின் ஜாதகம் வழியாக அறிந்து, அவர்களுக்கு விளக்கமும், தீர்வு வழிமுறைகளும் சொல்லி முடித்துவிட்டேன். நிறைவும் செய்துவிட்டேன்.
வாழ்க வளமுடன்
-