கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகமாக இருப்பதுபோல யோகத்தில் ஆர்வமின்றி இருப்பது ஏன்? பலகாலமாக அதை விட்டு விலகவும் முடியவில்லை. எப்படி அதை மாற்றிக் கொள்ளமுடியும்?
பதில்:
உங்களைப் போலவே எல்லோருமே அதை கடந்துவந்தவர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்க. இதில் உங்களுக்கு வருத்தம் தேவையில்லை. ஆனால், பொழுதுபோக்கிலே மட்டுமே நின்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இதற்கு காரணம் நம்முடைய பெற்றோர், வீடு, உறவினர், நண்பர்கள், சமூகம், உலகம் இப்படி எல்லாமுமே காரணமாக இருக்கலாம். பிறப்பின் உண்மையும், வாழ்வின் நோக்கமும் அறியாத எல்லா மனிதர்களுமே காரணம். அவர்களுக்கு தெரியாது என்பதல்ல, தெரிந்தாலும் அதில் ஆரவமற்று விலகி, வழக்கமான உலக நடப்புக்களில் இயங்குவதுதான். அதைப்பார்க்கும் நமக்கும்கூட அதேபோலான நடவடிக்கையும் ஆர்வமும் தானே வரும்? சரிதானே?!
ஒரு பொழுதுபோக்கு என்றால், நமக்கு ஆர்வம் எழுகிறது. நம் வேலைகள் எது இருந்தாலும் தள்ளிவைத்துவிடுகிறோம் அல்லவா? பசி இருந்தால் கூட பரவாயில்லை என்று பொழுதுபோக்கை கவனிப்போம். இதற்கு அடிப்படை காரணம், நமக்குள் இருக்கும் நிகழ்காலத்தின் மேல் இருக்கும் பயம், அதனோடு வருங்காலத்தை நினைத்தும் பயம் என்பதுதான். ஆனால், யாராவது இதை ஏற்றுக்கொண்டும் ஆமாம் என்று சொல்லிவிடுவார்களா? இல்லவே இல்லை. இப்படி ஒரு கண்ணோட்டமே இருக்காது.
பொழுதுபோக்கில் என்ன இருக்கிறது? அதில் எதேனும் அறிவு வளர்ச்சிக்கு இடமிருக்கிறதா? வாழ்க்கைக்கும், வாழ்வைக்கடந்த உண்மைக்கும் வழி இருக்கிறதா? அதுவும் இல்லவே இல்லை. உங்களுக்கு தெரிந்ததை, உங்கள் மனதில் படிந்ததை, உங்களுக்கு விருப்பமானதை, யாரோ ஒருவர், சில குழுவினர்கள், உங்களுடைய மனதிலிருந்து அதை தோண்டி எடுக்கிறார்கள். உங்கள் உணர்வோடு தொடர்புடையதால் உங்களுக்கும் ‘ஆஹா’ என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று இருக்கும் இந்த பிரச்சனை, தொந்தரவு, சிக்கல் இப்படி எல்லாவற்றிலிருந்தும் ‘விடுதலை’ கிடைத்துவிட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயே உங்களை அப்படி ஏமாற்றிக் கொள்கிறீர்கள். பொழுதுபோக்கினால், இருக்கின்ற உங்கள் பிரச்சனை துளியும் மாறிவிடுவதில்லை, அகன்று விடுவதில்லை, குறைந்தும் விடுவதில்லை. உண்மையாக சொல்லப்போனால், முன்பைவிட அது ஓர் நாளில் அதிகமாகிறது.
உண்மையிலேயே யோகத்திற்கு வர, பொழுதுபோக்கிற்கு எதிரான மனநிலை தேவை. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன? என்று கேள்வி கேட்டு அதில் பயணிப்பதின் முடிவாக யோகத்திற்குள் நுழையலாம். ஆனால் நாம் அதற்கு எதிர் திசையில் அல்லவா போய்க்கொண்டு இருக்கிறோம்?! யோகத்தில் எப்படி ஆர்வம் வரும்? யோகமே தேவையில்லை என்றுதானே போய்க்கொண்டு இருக்கிறார்கள்?! யோகத்தில் நுழைவதற்கும், வருவதற்கும் ஆர்வம் தேவையில்லை. இருக்கும் சூழ்நிலைகளில் மட்டுமல்ல, இனி வரக்கூடிய எந்த விதமான சூழ்நிலைகளிலும் நீங்கள் பாதிக்கப்படாமல், உயர்ந்த நோக்கம் கண்டு முன்னேறி, வாழ்வின் உண்மையும், பிறப்பின் நோக்கமும், மனிதனாக பிறந்ததின் உன்னதமும் அறியலாம்.
இப்போது இருக்கும் இந்த பொழுதுபோக்கான நிலையில் இருந்து விட்டுவிட விருப்பமில்லை என்றாலும், விலகிட முடியவில்லை என்றாலும் கவலையில்லை. நீங்களே ஒர்நாளில், அடுத்து என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு, காலம் உங்களை நகர்த்தி வைக்கும். அதுவரை காத்திருக்கலாம், பொழுதுபோக்கில் மூழ்கி இருக்கலாம். தவறில்லை. ஓடும் குதிரைக்கு சாட்டையடி தேவையில்லை. ஓடாத குதிரைக்கு தேவை என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதன் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படலாம்.
வாழ்க வளமுடன்
-