Please guide me for make the best Pooja Room at my home with yoga concepts!
வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
பதில்:
வீட்டில் பூஜை அறை அமைக்கவேண்டும் என்று விரும்புவது மிக நல்லதே! வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பக்தியிலும், யோகத்திலும் விருப்பம் கொண்டு, உயர்வதற்கும் உதவும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்களோடு அறநெறியில் வாழ்ந்து, தன் பிறப்பின் நோக்கமும் உண்மையும் அறிந்திட உதவும் அல்லவா? உங்கள் விருப்பம் நிறைவேற இறையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு இதெல்லாம் சொல்லுகிறாரே? என்று எதிர்கேள்வி கேட்க நிறைய அன்பர்கள் நினைப்பார்கள். தங்கள் அறிவால், என்னை மட்டம் தட்டிட துடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள், வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாறை நன்கு படித்திருந்தால் உண்மை விளங்கும். பக்தி இல்லாமல் யோகம் இல்லை. மேலும் பக்தி கனிந்தால் அதுவே யோகம் ஆகும்.
உங்கள் வீட்டில் பூஜை அமைப்பதற்கு இதுவரை உங்களுக்கு கிடைத்த எல்லா அறிவுரைகளையும் விட்டுவிட வேண்டாம். ஆனால் இங்கே தரப்படும் ஆலோசனைகளையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள். முடிவு உங்கள் வசமே தவிர கட்டாயமில்லை. வீட்டில் பூஜை அறை என்பதை, இருவர் உள்ளே நின்றால் போதும் என்ற ரீதியில் அமைக்காமல், நான்கு முதல் பத்து நபர்கள் நன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் இடிக்காமல் வந்து போகும்படி அமைத்துக்கொள்க. அதிக வெளிச்சமும் வேண்டாம். இருட்டாகவும் இருக்கவேண்டாம். காற்று நன்கு உட்சென்று வரும்படி அமைத்தல் நன்று. பெரும்பாலும் இப்போதைய வீட்டு பூஜை அறையில், ஜன்னல்கள் இல்லவே இல்லை. ஆனால் விளக்குகளும், அதன் ஒளிவெள்ளமும் கண்ணைப் பறிக்கிறது. காற்று வந்துபோக ஜன்னல் அவசியம். அதுபோல் எளிமையான விளக்குகள் போதும். வண்ண ஒளி தரும் அலங்கார விளக்குகள் அவசியமில்லை.
சிலை வைத்து வழிபடுவது தவறில்லை. ஒரு அடி, 12 இன்ச் அளவிற்குள்ளான விக்ரகங்களை வைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அதற்கு மேல் என்றால், அதற்கான ஆகம விதிகளை கடைபிடிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்திகிறார்கள். எனவே, இறை படங்களும், ஓவியங்களும் வைத்துக் கொள்ளலாம். தீப விளக்குகள், அதில் விளக்கெண்ணை, நெய் இட்டு தீபம் எரிதல் நன்று. நல்லெண்ணை, கடலையெண்ணை வேண்டியதில்லை. எந்த சிலை, எந்த உருவம் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. சில வீடுகளில் பரம்பரையாகவும் சிலைகள், படங்கள் இருப்பதுண்டு. உங்கள் முன்னோர்களும் அதை வழிபட்டு வந்தார்கள் என்பதால், நிச்சயமாக அதில் சிறப்புண்டு.
மந்திரங்கள் சொல்லலாம், மாலை, மலர்கள் அலங்காரம் செய்யலாம். சாம்பிராணி, ஊதுபத்தி, வாசனைதிரவியங்கள் பயன்படுத்தலாம். ருத்ராட்சம், படிக மாலைகளும் பயன்படுத்தலாம். எனினும் அவைகள் சுத்தமாக இருந்திட வேண்டும். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்தலும், ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது பூஜை செய்தல் நன்று. மணி ஒலிப்பதும், தீபாராதனை காட்டுவதும் சிறப்பு.
பூஜை அறையை, அதுவேண்டும், இதுவேண்டும் என்று வேண்டுதல் அறையாக மாற்றாமல், இறைக்கு நன்றி செலுத்தும் விதமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வழியிலே, பூஜை அறையில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும், இல்லத்திலும் தெய்வீகம் கமழும்.
ஒவ்வொரு பூஜையிலும், உங்கள் குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். அவர்களை அதில் ஆர்வம் கொள்ள பழக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த இறை உண்மையை மட்டும் சொல்லுங்கள். கதைகள் வேண்டியதில்லை. பக்தியின் உண்மை விளக்கம் யோகத்தில் தெரியும் என்பதையும் சொல்லுங்கள். அதே பூஜை அறையில், ஞானிகள், மகான்கள் சிலைகளும், படங்களும் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை.
பூஜை வழிபாடு முடித்து, அங்கேயே ஏதேனும் ஒரு தவம் செய்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளலாம். எப்போதும் அமைதியாக, நிறைவாக இருக்குபடி, பூஜை அறையை வைத்துக்கொள்க. அதிக ஒலி, ஒளி தேவையில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களையும், பூஜையில் கலந்துகொள்ளச்செய்யுங்கள். எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிறைவான பூஜை அறை உண்டு என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் பூஜை அறை குறித்த உயர்ந்த எண்ணங்களை எப்போதும் மனதிற்குள் வைத்திருங்கள். கண்களை மூடி எப்போது நினைத்தாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீகத்தை உணர்த்துவதாக இருக்கட்டும். அது உங்களுக்கு என்றும் உதவும். இதனோடு யோகத்திலும் நான் உயர்வேன், பக்தியின் முழுமையை யோகத்தில் அறிந்துகொள்வேன் என்பதில் திடமாக இருங்கள்.
வாழ்க வளமுடன்
-