If we worship at home pooja, the grace will be same as like a temple level? | CJ

If we worship at home pooja, the grace will be same as like a temple level?

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-