Will karma come to the person who helps the wrong man? What is the reason for this?
தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?
பதில்:
இந்த சந்தேகம் எனக்கும், யோகத்தில் இல்லாத காலங்களில் இருந்துவந்தது. வேதாத்திரிய யோகத்திற்கு வந்த பிறகு, செயல்விளைவு தத்துவமும், இயற்கையின் விதி என்பதையும் நன்கு புரிந்து கொண்டபிறகு அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. உண்மை கண்ட நிலையில், என்னுடைய செயல்களை நான் திருத்தி அமைத்துக் கொண்டாலும், என்னைச்சார்ந்த மற்றவர்களை அறியும் பொழுதும், சில அன்பர்களின் வாழ்க்கை கதைகளை கேட்கும் பொழுதும் ‘நான் அறிந்த உண்மையையும் மீறி’ வருத்தம் எழுவது உண்டு.
துன்பப்படும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லையே, ஏன் இப்படி நிகழ்கிறது? என்று மனம் வருத்தமடையும். ஆனால் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, இயற்கையின் ஒழுங்கமைப்பு ஒருபோது மாறாத தன்மை கொண்டது. தெய்வீக நீதிமன்றத்தின் செயல்பாடு அது என்றும் சொல்லுகிறார். யாருக்காகவும், எதற்காகவும், எக்காலத்திலும் மாற்றம் பெறாதது. இன்னும் சொல்லப்போனால் ‘தன்னையே தான் தண்டித்து, திருத்திக்கொள்ளும்’ தன்மை உடையதுதான் இறையாற்றல். அத்தகைய உயர்ந்த தன்மை கொண்டது. நம்மை சும்மா விட்டுவிடுமா?
வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், தவறு செய்தவரும், அந்த தவறுக்கு துணை நின்றவரும், வாய்ப்பு இருந்தும் தட்டிகேட்காமல் இருந்தவரும், கூடவே இருந்து அந்த தவறை திருத்தி அமைக்காதவரும், மகிழ்வாக, நிறைவாக, எப்போதும் போலவோ, அதைவிட சிறப்பாகவோ வாழ்வது போல இருக்கலாம். ஆனால் அதனால் எழுந்த கர்மா எனும் வினைப்பதிவு ‘சும்மா’விட்டுவிட்டது. இதென்னெ பயமுறுத்தல் என்கிறீர்களா? நீங்கள் செய்துதான் பாருங்களேன். அப்போது விளைவை அனுபவிக்கும் பொழுதாவது நம்புவீர்கள்தானே?!
மனிதனுக்கு மனிதன் செய்யும் பிணக்குத்தான் இன்றைய உலகின் அவலம். உதவியும் செய்யாமல், உபத்திரவும் செய்யாமல் இருந்தால் கூட போதுமானது. ஆனால், எப்படியாவது தான் வளர, முன்னேற, நன்மதிப்பு பெற என்று திட்டமிட்டு, அடுத்தவரை உடலாலும், மனதாலும் துன்பப்படுத்திக் கொண்டே வந்தால், தங்களுக்கான பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவேளை எந்த துன்பமும், வருத்தமும் இல்லாமல் இறந்துவிட்டால் கூட, அவர்களின் வாரீசுகளுக்கு அந்த சுமை வந்து சேர்ந்துவிடுமே?! இதற்கான சில உதாரணங்களை, உங்கள் வாழ்க்கையிலேயே பிறரை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் கேட்டது போல, தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? என்றால், ஆம் துரத்தும். ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? ஆமாம். காரணம் என்ன? பார்க்கலாமா? உனக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் அதை தட்டிக்கேட்காமல் இருந்தாய்? நீ அதை மாற்றியிருக்கலாம், திருத்தியிருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம், உதவி செய்திருக்கலாம் தானே? அதை ஏன் நீ செய்யவில்லை. நீ அந்த தவறுகளுக்கு கூட்டுதானே? என்று இந்த இயற்கை கேட்டு அதை பதிவு செய்துகொண்டு, தக்க காலத்தில் திருப்பி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறாயா? என்று பாடம் நடத்துகிறது. ஆனால் மனிதன் ‘இந்த இயற்கையையே மிஞ்சி விட்டதாக வெற்றி பெருமிதம்’ கொண்டு வாழ்கிறான். அந்த பெருமிதம் இன்னும் வடிந்தபாடில்லை!
வாழ்க வளமுடன்
-