கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?
பதில்:
தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.
இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.
இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.
நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.
வாழ்க வளமுடன்
-