கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?
பதில்:
நீங்கள் கேட்பது சரியான கேள்விதான். நீங்கள் பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்கலாமே. நீங்கள் இப்பொழுது அம்மாவின் கருவறையில் இருக்கிறீர்கள். குழந்தைப்பேறு மருத்துவமனையிலும் சேர்த்து தகுந்த நேரத்திற்கு மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அதே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஐந்து தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரே சமயத்தில் உதவ மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதிகாலை 3. 40 க்கு, உங்களோடு சேர்ந்து ஆறு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். இத்தனை குழந்தை பிறப்பை, அங்கேயே ஆறு சோதிடர்களை வைத்து ஜாதகமும் எழுதிவிடலாமா? சரி. குழந்தைபிறப்பின் நேரத்தை மருத்துவர்கள் சொன்னபடி குறித்து ஜாதகம் கணித்தாயிற்று.
இப்பொழுது ஏறக்குறைய எல்லா ஜாதகமும் ஒரே மாதிரி இருக்கும் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என்றாலும், ஜாதகம் அதன் நுணுக்கத்தில், கணிதத்தில் நுண்ணிய மாறுதலாகவே அமைதிருப்பதையும் நாம் அறியமுடியும். இந்த ஆறு குழந்தைகளுக்கும் ஒரே பெயர் வைக்கப்போவதில்லை. தனிப்பட்ட விருப்பமான பெயர்தான் வைப்பார்கள். கணித்த ஜாதகம் ஒன்றாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுவதில்லை, கொட்டாவி விடுவதில்லை, தானாக சிரிப்பதில்லை. ஒரு குழந்தை காலையில் தூங்கும், இரவில் அழும், சில குழந்தை இரவில் தூங்கும், வெளிச்சம் வந்தால் அழுதுகொண்டே இருக்கும். ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும், ஒரு குழந்தை அதை அறவே மறுக்கும். ஒரு குழந்தை தாயின் அணைப்பை விரும்பும், மறு குழந்தை தூக்கினாலே அழும். இப்படி பலவித மாறுபாடுகள் அங்கேயே வெளிப்படுவிடுகின்றன அல்லவா?
ஜாதகமும், அதன் கிரநிலைகளும் ஒன்றாக இருக்கட்டும். அந்தந்த கிரக நிலைகளின் அலைவீச்சு ஒன்றாகவே இருந்தாலும், அதை பெறுவது, ஏற்பது, விலக்குவது என்று ஒவ்வொரு குழந்தைக்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உண்மை. மேலும் அந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு, இந்தக்குழந்தை இப்படித்தான் வளரும் என்று சொல்லவும் முடியாது. அப்படி எந்த ஜோதிடரும் சொல்லவும் மாட்டார். ஒரே ஒரு சாட்டிலைட் தொலைகாட்சி டிஷ், உங்களின் ஒரே ஒரு 49 இன்ஞ் ஸ்மார்ட் டிவி வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பது போலவே, இந்த குழந்தைகள் மாறிக்கொண்டுதான் வளரும் என்பது உண்மை. ஒரே மரத்தின் விதைகளை நீங்கள் விதைத்தாலும், வளர்ந்து அதுதரும் அதன் கனிகள் ஒரே சுவையாக இருப்பதில்லை.
அப்படியானால் ஜாதகம்? அது ஒரு குறிப்பு, கையேடு. அதைக்கொண்டு அந்தக் குழந்தைகளின் அடிப்படை அறிந்து மாற்றத்தை விரும்பி செயல்பட்டு வாழ்வில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். பார்வைக்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆராய்ந்து பலன் தரும் பொழுது அது மாறுதலை தந்துகொண்டே இருக்கும். ஒவ்வொடு தனித்தனியான குழந்தைக்கும் பதினாறு வகையான மாற்றங்கள் உண்டு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்று மாறினாலும் ஒரே மாதிரி இருக்கபோவதில்லை. அதனால் ஒரே நேரத்தில் பிறந்த எல்லோருக்கும் ஜாதகம் கணித்தாலும், நகர்ந்துகொண்டே இருக்கக்கூடிய இந்த வானியல் நிகழ்வு, நுண்ணிய மாற்றதை கொண்டிருக்கும். அது அந்த ஜாதகத்திலும் இடம்பெறும் என்பதுதான் உண்மை.
குழந்தையின் அடிப்படை குணாதசியம், கர்மா, செயல்பாடு, மனநிலை, பரம்பரை, வழக்கம், பழக்கம், இப்படியாக எண்ணற்ற விசயங்கள், குழந்தைக்கு குழந்தை மாறுபாடுபெறும் அல்லவா? அதுபோல அந்த ஜாதகமும் தன்னுள்ளே ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும். அதை நல்ல தேர்ந்த, அனுபவம் உள்ள ஜோதிடர் நிச்சயமாக கண்டடைவார்.
வாழ்க வளமுடன்
-