Please explain about the Death and the Eternal after the death?
மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
அன்பரின் கேள்வி:
சுவாமிஜி! மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
உலகில் உயிர் வாழும், மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கும், மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போதுதான் அது வாழ்வு. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையே மரணம் எனப்படும். மரணம் இல்லையென்று கூறமுடியாது.
உயிரின் இயக்கத்தால்தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையென்றால் உடலிலுள்ள அணுக்கள் தொடர் இயக்கம் சிதைந்து விடும்.
கூட்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து உயிர்த்துகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தன்னுடைய இயக்கத்தை நடத்திக் கொள்ளத் தொடங்கிவிடும்.
உதாரணமாக இதற்கு ஒரு கம்பெனியைச் சொல்லலாம். நீதிமன்றத்தின் உத்தரவால் ஒரு கம்பெனியானது உலாவீனம் (Liquidate) செய்யப்படுகிறது. என்று வைத்துக் கொள்வோம்.
அக்கம்பெனியானது அதன் பெயரில் இறந்துவிட்டது என்றாலும், அதிலுள்ள நிர்வாகிகள், பங்குதாரர்கள், வேலையில் இருந்தவர்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள்.
கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள். ஆனால் தனித்தியங்குகின்றார்கள்.
அதேபோல் உடலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து இயங்குகின்றன. அவ்வளவே. அத்தகு தனித்தனியான இயக்கங்களுக்கு மரணம் என்பதில்லை.
அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.
இந்த உண்மையை, மனவளக்கலை எனும் எளிய குண்டலினி யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுண்மை விளக்கம் பெற்று, மரணமில்லா பெருவாழ்வு என்ற தத்துவ உண்மையையும் அறியலாம்.
வாழ்க வளமுடன்!
-