கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?
பதில்:
இந்த கேள்வியில், உங்கள் ஆதங்கம் தெரிகிறது. நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும், உங்களுக்கு உண்மை தெரியுமா? இந்த கோவில், ஆலய வழிபாடுகளின் உண்மையை அறியவதற்குத்தான், வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றார்கள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், கோவிலும், ஆலயமும், அவர்களின் அந்த் வழிபாடும்தான் இந்த அளவுக்கு உயர்த்தியது அல்லவா? உங்களை உயர்த்திய ஏணியை உடனே எட்டி உதைத்து தள்ளிவிடுவீர்களா? அது நியாயம் ஆகுமா? அந்த ஏணியையும், அதன் படிகளையும் நினைத்துப்பார்ப்பது தவறாகுமா?
வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றவர்கள், உடனடியாக அந்த வழக்கத்தையும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டுமா? ஏன்? மற்றவர்களின் பார்வைக்காக ‘சும்மா’ வந்து போவதாகவும் இருக்கலாம் அல்லவா? அது மற்றவர்களுக்கு உண்மையான ஊக்கம் தருவதாக அமையலாமே? அங்கே வருபவர்களிடம் அந்த உண்மையை சொல்லுவதற்காகவும் இருக்கலாம்தானே?
வேதாத்திரியமோ, குரு மகான் வேதாத்திரி மகரிஷியோ, பிரம்மஞானம் கற்ற பிறகு, மற்ற எல்லா வழக்க பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும் என்று, எப்போதாவது சொல்லப்படுகிறதா? சொல்லி இருக்கிறாரா? உண்மையாகவே, அவர் ‘யோகத்தில் உண்மை அறிந்தவர்கள் கோவிலுக்கு போகலாமா என்ற ஒர் கேள்வி எழுகிறது, என்னைக்கேட்டால், அவர்கள் கோவிலுக்கு போவதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் போகலாம் என்றுதான் சொல்லுவேன்’ என்றும் பதில் அளித்திருக்கிறார். ஏன்? கோவில் வழிபாட்டின் உண்மை அறிந்த பிறகு, அந்த பழைய வழிபாடு அவரிடம் இல்லை, மேலும் அங்கே வரும் மற்றவர்களுக்கு அவர், உண்மை விளக்கமும், ஊக்கமும் தரமுடியுமே!
ஞானிகளும், மகான்களும் கூட கோவில் கும்பாபிஷேகம் நாளிலும், யாகம் வளர்க்கும் நாளிலும் அங்கே தங்கி இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதன் காரணம் என்ன? தாங்கள் உணர்ந்த உண்மையை அங்கே வெளிப்படுத்துகிறார்கள். அங்கே இருக்கும் ஆற்றலில் தன்பங்கையும் அளிக்கிறார்கள். ஆனால் இது மறைமுகமாகவே நிகழும், எவரும் அறியமாட்டார்.
உண்மையில் கோவில், ஆலய வழிபாட்டின் உள்ளார்ந்த கருத்தை அறியாமல்தான் இந்த கேள்வியே பிறந்திருக்கிறது என்று தோன்றவும் இடமுள்ளது, கோவில் ஆலயத்தில், கடவுளை கருத்தாக பார்ப்பவர்தான் பக்தர். பிரம்மஞானம் உணர்ந்தவர் பார்க்கும் பார்வை வேறு என்பது நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, இனிவரும் காலங்களில், நீங்கள் மற்றவர்கள்மேல் அக்கறை கொண்டு, வருந்துவதை, கவலைப்படுவதை, பதட்டப்படுவதை, திருத்தவேண்டும் என்பதை விட்டுவிடுங்கள். அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் உங்களுக்காக, உங்கள் வழியில் ஆராய்ந்து உயருங்கள், மற்றவர்களை குறித்த எண்ணமெல்லாம் உங்களுக்கு, உங்கள் முன்னேற்றத்தில் தடை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும், பிரம்மஞானம் என்ற உண்மையில் எல்லாமே இறை என்ற முழுமை உணர்வு வந்துவிடுவதால் அங்கே விழிப்பு நிலையும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் கேள்விக்கு பதில் மட்டுமல்ல, கேள்வியின் குறைகளை வெளிப்படுத்தி உங்களுக்கான விளக்கம் தருவதுமே இந்தப்பதிவாகும்.
வாழ்க வளமுடன்
-