Is it right for us to live by greeting others? | CJ

Is it right for us to live by greeting others?

Is it right for us to live by greeting others?


எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


பதில்:

இதே போன்றதொரு கேள்வி வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அது ‘தவறு செய்பவர்கள் இந்த உலகில் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். நாம் ஏன் திருத்தமாக வாழவேண்டும்?’ என்ற கேள்வி. அதற்கு மகரிஷின் பதில் ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி கொஞ்சநாள் தவறு செய்தே வாழ்ந்து பாருங்களேன்’ என்று தருகிறார்.

நம்முடைய பார்வைக்கு, தவறு செய்பவர்கள் ‘நன்றாக’ இருப்பதுபோலவும், செழிப்பாக, இன்பமாக, நிறைவாக வாழ்வது போலவும் தெரியும், ஆனால், அவர்கள் மனதிலும், உடலிலும், வீட்டிலும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் எதுவுமே நமக்கு தெரியாது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்கி எழுவார்களா? என்பது கூட கேள்விதான். அதை அவர்கள் வெளிக்காட்டவும் தயங்குவார்கள் / மறைப்பார்கள். ஆனால் ஏதேனும் வகையில் நாம் அறிய முடியும்தானே?

நாம் நம்முடைய பார்வையை, முன்னோக்கி பார்த்தால் இப்படி வாழ்ந்த முடிந்தவர்கள் பேரும் புகழோடுமா தன்னுடைய காலத்தை முடித்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறந்து பல காலம் ஆனாலும் கூட, அவர்கள்மேல் விழுந்த பழிச்சொல் அகலாமல் இருப்பதை நாம் காணமுடியும். நல்லதிற்கு உதாரணம் என்பது போலவே, தீய நடவடிக்கைகளுக்கும், தவறுகளுக்கும் உதாரணமாக அவர்கள் ‘காலத்தால்’ நின்றிருப்பதை அறியலாம்.

அறிவில், அனுபவத்தில், வாழும் சூழலில் வளர்ச்சி அடையாத சிலர், மற்றவர்கள் வருத்தி, துன்புறுத்தி, பிடுங்கி, வாழ்வதை நாம் காணமுடியும். நாமேகூட அப்படியான சிலரிடம் மாட்டிக்கொண்டு முழித்திருப்போம் என்பதும் உண்மையே. அத்தகைய நிகழ்வுக்குப் பின் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதையும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதையும் சிந்திக்க வேண்டும். அறம் அல்லாத எந்த ஒரு செயலை செய்தாலும், அது இயற்கை எனும் தெய்வீக பேராற்றலால், அவரவர் மனதிற்குள்ளாகவும், கருமையத்திலும் ‘கர்மவினைப்பதிவாக’ பதிவு செய்வதை மறவாதீர்கள். வட்டியும் முதலுமாக என்ற ரீதியில் அதை தீர்க்காமல் விடவே விடாது. அதுதான் இயற்கையின் செயல்விளைவு நீதி.

சாதாரணமாகவே, மனம் ஒப்பாத ஒன்றை செய்துவிட்டு காலம்பூராவும் வருந்துவது மனிதனின் இயல்பு. யோகத்தின் வழியாக மனதை அறிந்த நாம், அப்படியான தவறை நாமே விரும்பி செய்திட முடியுமா? அது நியாயமும் ஆகுமா? இருக்கும் வினைப்பதிவுகளை தீர்க்க மட்டுமேதான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை மறுபடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். தவறு செய்யும் அவர்கள், தவறுமட்டுமே செய்யும் அவர்களுக்கு அதுகுறித்த கவலை இல்லை. அது அவர்கள் பாடு. நாம் நம்மை திருத்திக் கொள்வோம்.

வாழ்க வளமுடன்

-