Why I have some of depression on my life, guide me?
மனதில் விரக்தி , வேதனை , எதிலும் பற்றற்ற தன்மை, உண்பதில் ஆர்வமின்மை, நல்ல ஆடைகள் அணிவதில் விருப்பமின்மை , எந்த உறவினரிடமும் நடிப்புக்காக கூட பேச பிடிக்கவில்லை.. இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது ஐயா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனதில் விரக்தி , வேதனை , எதிலும் பற்றற்ற தன்மை, உண்பதில் ஆர்வமின்மை, நல்ல ஆடைகள் அணிவதில் விருப்பமின்மை , எந்த உறவினரிடமும் நடிப்புக்காக கூட பேச பிடிக்கவில்லை.. இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது ஐயா?
பதில்:
வேதாத்திரிய யோகத்தில் பயணிக்கும் நீங்கள் இப்படியெல்லாம் சொல்லலாமா? ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் பழமையான யோகமுறையில் பயணிப்பதாக உங்களை நினைத்துக் கொண்டு வருகிறீர்களா? என்றும் தெரியவில்லையே?! எனினும் இதற்கான காரணங்களை விளக்கமாக பார்க்கலாம்.
யோகம் என்பது நல்வாழ்க்கைக்கான வழியாகும். அதை அறநெறி என்று சொல்லி வைத்தார்கள். யோகம் எல்லோராலும் கற்று தெளிவு பெறுவது கடினம் என்ற அக்கால சூழலில் அதை, நல் வாழ்க்கை விளக்கமாகச் சொல்லி, வழக்கப்படுத்தினார்கள். அதை நம் குடும்பத்திலே கூட பழக்கமாகி இருப்பதை காணமுடியும். வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பது முதல், வயதான ஒருவரை, நட்போடு வருபவரை நோக்கி கைகூப்பி வணங்குதல் வரை, அதிலிருக்கிற பொதுவான தன்மை ‘பிறரை மதித்தல் ஆகும்’. எல்லாமே இறையின் அங்கம் என்ற உண்மைப்பொருளின் விளக்கத்தில் ஒருவருக்கு உதவுவதும், வணங்குவதும்கூட இறைக்கே என்பதான நிலை, ஞானிகளால், மகான்களால், யோகிகளால், சித்தர்களால் வழங்கப்பட்டது.
முக்கியமாக, உலகில் வாழ்கின்ற நாம் எந்த வகையிலும், வாழும் உலகையும், நம்மோடு வாழும் குடும்பத்தாரையும், சக மனிதர்களையும், உலகத்தாரையும் விலக்கிவிட்டு வாழ முடியாது. அவர்களோடு விரோதம் கொள்ளவும் வழியில்லை. எப்படியாயினும் ஏதேனும் வழியில், யாரோ ஒருவரின் அன்பும், கருணையும், உதவியும், பகிர்வும் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவரின் முகம்கூட அறியாத நிலையிலும் நமக்கு கிடைக்கிறது. உங்களையும், உங்களுக்கான பொருட்கள் ஆகியனவற்றை ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கிவிடும்.
முக்கியமாக மனதில் விரக்தி, வேதனை, குழப்பம், எதிலும் பற்றதன்மை என்றால் மனம் அந்த அளவிற்கு பாதிப்பாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இது கர்ம வினைப்பதிவுகளின் தாக்கமாக இருக்கலாம். இந்த வாழ்க்கைச் சூழலும், அதில் நமக்கு கிடைத்த விளைவுகளும் காரணமாகலாம். நீங்கள் செய்ததின் வழியாக கிடைத்திருக்கலாம், உங்களுக்கான வாழ்க்கை அமைப்பும் அப்படியாக இருக்கலாம். அதில் நீங்கள் தவத்தால், தியானத்தால் தெளிவு பெறவேண்டியது அவசியம்.
உண்பதில் ஆர்வமின்மை என்பது, உடலுக்கான பிரச்சனையை காட்டுகிறது. உணவின்றி உடலுக்கு ஆற்றல் ஏது? ஒருநாளைக்கு நிச்சயமாக இருவேளை உணவு தேவை. அதில் நீங்கள் கவனமின்றி இருந்தால் உடல், மனம், உயிர் மூன்றுமே பாதிக்கப்படும். நல்ல ஆடைகள் என்ற நிலை தேவையின்றி எளிமை போதுமானது. நமக்காகத்தான் உடையே தவிர மற்றவர்களின் கவனத்தை கவர்வதற்காக இல்லையே?! மனதிற்கு பிடிக்காத, விருப்பமில்லாத, உறவினர்களை தாராளமாக தவிர்க்கலாம். அது உங்கள் உயர்வுக்கு நல்லதும் கூட. ஆனால் யாருமே எனக்கு தேவையில்லை என்ற நிலை, உங்கள் வாழ்க்கையை கெடுத்துவிடும். எனவே சொந்தம், நட்பு இவைகளில் கவனம் அவசியம்.
முடிவாக. நீங்கள் வேதாத்திரியத்தின் வழியில், துரியதவம் இயற்றி, அகத்தாய்வு எனும் தற்சோதனையை ஒருவாரம் தொடருங்கள். ஒவ்வொரு விளக்கத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி பதிவு செய்து, மறுவாரம் ஆராய்ச்சி செய்து, களையவேண்டியவற்றை அப்பொழுதே அகற்றுங்கள். மனம் தெளிவு பெறும். வாழ்க்கை நிறைவாகும்.
வாழ்க வளமுடன்
-