கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா?
|
Thanks to @arminschieb |
பதில்:
அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? ஆனால் இந்த கேள்வி எழுவது இயல்பு. ஒரு புதிய கண்டம், நாடு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, வழக்கம் பழக்கம், உணவு, கால நேரம் இப்படியாக எல்லாமே மாறி இருக்கும் அந்த நிலையில், ஏதோ ஒரு புதிய உலகுக்கே வந்துவிட்டதாகவே தோன்றும். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ‘வேர், மூலம்’ ஒன்றுதான். இந்த உலகமும் ஓன்றுதான். கடல் கடந்து என்று சொல்லுகிறோம். உண்மையிலேயே அவை வெவ்வேறு கடலா? ஒரே கடல்தான், நம்முடைய சௌகரியத்திற்காக வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறோம். எந்த நாட்டின் கடற்கரையில் நின்று, நீங்கள் கையால் நீர் அள்ளினாலும், உங்கள் கால்களை நனைத்தாலும் அது ஒரே நீர் நிலையான கடல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றும், மற்ற எல்லா உலக நாடுகளின் மக்களும் சுவாசிக்கும் காற்றும் ஒன்றுதானே? வேறு தனியாக அந்தந்த நாடுகளில் காற்று தனிப்பட்டு இருக்கிறதா?
எனவே மனிதர்களும், மனிதர்களின் வாழ்க்கைக்கானதும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. உண்ணும் உணவு மாறி இருக்கலாம். ஆனால் செரிமானம், சக்தி, உழைப்பு, ஆற்றல் ஒன்றுதானே? இங்கே விளைவித்தால் அது அங்கே ஏற்றுமதி ஆகிறது. அங்கே விளைவித்தால் அது இங்கே இறக்குமதி ஆகிறது. யாரோ ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு, உலக மக்களின் எல்லாருடைய பயன்பாடுக்கும் கிடைக்கிறது. ஏதோ ஒரு நாட்டின் அரசியல் குழப்பம், மொத்த உலக நாடுகளையும் குழப்புகிறது. இப்படியாக எல்லாமே ஏதோ ஒன்றில் நாம் இணைந்துதான் இருக்கிறோம்.
மனிதன் தன்னுடைய ஆறாம் அறிவால், எண்ணத்தால், சிந்தனையால், எல்லா மனிதர்களோடும் இணைந்தேதான் இருக்கிறான். ஆனால் நாம் அதை அறிவதும் இல்லை, உணர்வதும் இல்லை. ஏதோ நாம் மட்டும் தனித்து இருப்பதுபோலவும், எதைவேண்டுமானலும் செய்துவிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் உங்கள் கூடவே ‘மனசாட்சி’ என்ற ஒன்று, உங்கள் அத்தனை இயக்கங்களையும், மேம்பட்ட CCTV Camera போலவே ஒளி, ஒலி காட்சிகளோடு பதிந்து கொள்கிறது, நீங்கள் அறியாமலேயே. உண்மைதானே?
மனித இனம் ஒன்றுதான், மனமும், உயிரும் ஒன்றுதான். உடலால் பலப்பலவாக பிரிந்து எல்லைகட்டி இருக்கிறோம். அவ்வளவுதானே? இதில் உங்களுக்கு கிடைக்கும் எந்த யோக பயன்களும் மாறிடாது. இறையாற்றலும் மாறிடாது. வீணான கற்பனையும், உதாசீனமும் தேவையில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட யோக வழிமுறைகளையும், பக்தி வழிமுறைகளையும் எந்த மாற்றமும் செய்துகொள்ளாமல், அதன்படியே தொடருங்கள். இறையாற்றலும், அருட்பேராற்றலும் நீங்கள் எங்கிருந்தாலும், அன்பும் கருணையுமாக உங்களைச் சூழ்ந்தே இருக்கிறது என்பதை மறவாதீர்கள். உங்களை எல்லைகட்டிக் கொள்ளாமல், ஒரே உலகம் என்ற கருத்தில் மலருங்கள். ஆர்வத்தோடும், முயற்சியோடும், தொடருங்கள். ‘நான் யார்?’ என்ற உண்மையை நோக்கியும் நகரலாம். இறையுண்மையையும் அறிந்து உயரலாம். பிறப்பின் நோக்கமும், கடமையும் கண்டு வாழ்வின் முழுமையை அடையலாம். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஒரே ஒரு சிறப்பம்சத்தையும் சொல்லவேண்டும். அது என்னவென்றால், உங்களை யோகத்திற்கும், பக்திக்கும் இழுத்துக்கொண்டு திசை திருப்பும், போலியான நபர்கள் உங்களருகில் இருக்கமாட்டார்கள். உங்கள் யோக குரு / ஆசிரியர் சொன்னவற்றை கடைபிடித்து வந்தால் போதுமானது. ஆனால் உலகம் சுருங்கி கையில் வந்துவிட்ட இந்தக்காலத்தில் நீங்கள் ‘இதில்’ கவனமாக இருத்தல் அவசியமாகும்.
வாழ்க வளமுடன்
-