Why most of persons stayed long with their personality? | CJ

Why most of persons stayed long with their personality?

Why most of persons stayed long with their personality?


மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


பதில்:

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இதைச் சொல்லுகின்ற உங்களுக்கும்கூட ‘நான் இப்படித்தான்’ என்ற நிலைபாடு இருக்கும் என்பதும் உண்மையே. அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், நீங்களே யாரிடமாவது, உங்களைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டால், அவர்கள் சொல்லிவிடுவார்கள். நாம் யார்? நம் நடவடிக்கைகள் என்ன? என்று விபரமாக சொல்லுவார்கள்.

ஒவ்வொடு பொருளுக்கும் தரம், குணம், செயல்பாடு என்று இருப்பதுபோலவே, எல்லா ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் உண்டு. அதை குணாதசியம் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் Quality, Personality என்று குறிப்பிடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிக தெளிவாக ‘குணநலப்பேறு’ என்று சொல்லுகிறார். இதிலேயே குணம், நலம், அதனால் அடையும் பேறு என்ற மூன்று வார்த்தைகளும், பொருள்களும் நிறைந்திருக்கக் காணலாம்.

இயக்கமற்ற பொருட்கள், ஓரரறிவு தாவரங்கள் ஆகிய தன்னுடைய கருவழியாகவே தன்னுடைய ‘குணநலப்பேறு’ பெற்றுக்கொள்கிறது. ஒரு களிமண், ஒரு பாறை, உப்புக்கல், மிளகாய், மாம்பழம் என்று உதாரணம் எடுத்துகொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரறிவு முதல், ஆறறிவு மனிதனாக நம்மையும் சேர்த்து, கருவழியான ‘குணநலப்பேறு’ மட்டுமல்லாமல், வாழ்கின்ற சூழல், கூட்டு, சமூகம், தேவை, எதிர்பார்ப்பு, அனுபவம் என்று பலவழிகளில் புதிதாகவும் ‘குணநலப்பேறு’ அமைந்துவிடுகிறது.

முதலில் ஏற்படும் தேவை என்ற உணர்வுதான் எல்லா ‘குணநலப்பேறு’நிலைக்கும் அடிப்படை ஆகிறது. அதன்படிதான் மனிதர்கள் தங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய மனிதர்கள், தனக்கு பாதிப்பு, இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். ஒருசிலர் என்ன நிகழ்ந்தாலும் ‘நான் இப்படித்தான்’ என்ற நிலையை (உயிரே போனாலும் கூட) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி, இத்தகைய, இயற்கைதான் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலை மாறவேண்டும், ‘குணநலப்பேறு’ அடையவேண்டும் என்றுதான், அகத்தாய்வும், தற்சோதனையும் அமைத்திருக்கிறார். முழுமையாக தங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல, இயற்கையாக ஒன்றிணைந்து இருப்பது என்ற தகுதியையும் அது தரும். மேலும் கருவழியான பதிவுகளை அகற்றிடவும் துணை செய்யும். யோகத்தின் வழியாக மட்டுமே இந்த Personality மாறுமே தவிர, வேறெந்த development பயிற்சியாலும் மாறிடாது என்பதை அறிந்துகொள்க.

வாழ்க வளமுடன்

-