கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?
பதில்:
உங்கள் உடலைவிட்டு, இன்னொரு உடலுக்குப் போகும், தந்திரத்தில் இன்னும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை இந்த கேள்வி நிரூபிக்கிறது. சித்தாந்தம் என்ற வழியில் சித்து என்ற உயிரை அறிந்து, அதனுடைய மூலமும், இயக்கமும் உணர்ந்தவர்களான சித்தர்கள் இந்த ‘கூடுவிட்டு கூடுபாயும்’ வித்தையை கண்டுபிடித்து, உலகில் தாங்கள் வாழும் காலத்தில், அந்தந்த மக்களின் நன்மை கருதிமட்டுமே இதை செய்துவந்தார்கள். அதையே தங்கள் கவிதைகள் வழியாக சொல்லியும் வைத்தார்கள். ஆனால் செய்முறையை சொல்லவில்லை. அப்படியான செய்முறையை, நேரடியாக அந்த சித்தரின் வசமாக மட்டுமே கற்றுக்கொள்ளவும் முடியும். இந்தக்காலத்தில் யாருமே தங்களை சித்தர் என்று வெளிப்படையாக தங்களை, மக்களிடம் காட்டிக்கொள்வதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. என்றாலும் கூட, வாழும் சித்தர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், சில மனநலம் குன்றி, தெருவில் கவனமின்றி திரிவோரையும் ‘வாழும் சித்தர்கள்’ என்று நவீன மக்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கான, அக்கறையும், மருத்துவ உதவியும் செய்யாமல், செய்தும் தராமல், அவர்களின் தனிமையை, சுதந்திரத்தை கெடுத்து, மேலும் மேலும் அவர்களின் மனதை புண்ணாக்குகிறார்கள். காண்டண்ட் கிடைக்காத காணொளி பதிவர்கள் இதையும் பதிவாக்கி, யூயூபில் பரப்புகிறார்கள். கொடுமைதான்.
இப்பொழுது கேள்விக்கு வரலாம். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியும்தான். ஆனால் அதற்கான அவசியம் என்ன? இதற்கான தக்க பதில் உங்களிடம் இருக்கிறதா? என்னவிதமான நன்மையை கருதி நீங்கள் இதை செயல்படுத்தப் போகிறீர்கள்? இதில் ஏதேனும் ரகசியமான ஆராய்ச்சி இருக்கிறதா? மக்களின் நலம் சார்ந்தோ, உலகின் எதிர்கால நன்மை கருதியோ திட்டத்தை நீங்கள் செயல்படுத்தப் போகிறீர்களா? இதற்கான விடையை முதலில் தயார் செய்யுங்கள். சுயநலம் கருதி இதை நீங்கள் செய்வதாக இருந்தால், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள், உயிரிழப்பு நேர்ந்துவிடும் என்பதும் உறுதி. தற்கொலைக்குச் சமமான காரியத்திற்கு ஒப்பாகிவிடும். ஏனென்றால் ‘இயற்கையின் செயல்விளைவு நீதி’ அத்தகையது.
என்றாலும் உங்களுக்கான புரிதலை நான் தெளிவு செய்கிறேன். நீங்கள் அறிந்த ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை’ அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம் உங்களுக்குத் தெரியுமா? சொல்லுகிறேன்...
நாம் ஓருடலாக வாழ்வதாக இருந்தாலும் கூட, இந்த உடல் மூன்று உடலாக அமைந்திருக்கிறது. 1) பருவுடல் 2) உயிருடல் 3) காரண உடல் ஆகியன ஆகும். பருவுடல் என்பது எலும்பு, தசை, சதை, ரத்தம், உடலுறுப்பு இவைகளால் ஆன மொத்த அமைப்பு. உயிருடல் என்பது பலகோடி உயிர்த்துகள் இணைந்த கண்ணாலும், கருவிகளாலும் காணமுடியாத, நுண்ணிய துகள்களால் ஆனதான் அமைப்பு. இதைத்தான் ‘சூக்குமம்’ என்றும் அழைக்கிறோம். அதையே சூக்கும உடல் என்றும் அழைக்கிறோம். மூன்றாவதாக இருப்பது, இந்த உயிரை, உடலுக்குள் கட்டிக்காக்கும் சக்தியான ‘காரண ஆற்றல் சக்தி’ இதையும் நாம் உணரமட்டுமே முடியும். இந்த மூன்றுக்கும் தனித்தனியான விரைவு இயக்கங்கள் உண்டு. அந்த தனித்தனியான இயக்கங்களை முறைப்படுத்தி ஒன்றுசேர்க்கவும் வேண்டும். இதில் அதிவேகமான விரைவுஇயக்கம் கொண்டது ‘காரண உடல்’ இதற்கு சமமாக ‘உயிருடல்’ பழகவேண்டும். இந்த இரண்டின் விரைவையும், இயக்கத்தையும் உடல் தாங்கிட பழகவேண்டும். இதற்கு நீண்டகால பயிற்சி முக்கியமானது ஆகும். யாரோ சொல்லக்கேட்டு, ஏதோ புத்தகம் வாசித்து, எவரோ காணொளியில் சொன்னதைக் கேட்டு செய்தால் அது ‘தற்கொலைக்கு’ சமமாகலாம்.
குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘சூக்கும பயணம்’ என்பது ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின்’ முன்னோட்டம் என்று சொல்லலாம். ஆனால், வேதாத்திரியத்தில் இந்த சூக்கும பயணம் பயிற்சி 1996 ம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. கைவிடப்பட்டது. ஏனென்றால், அதில் அன்பர்கள் ஏற்படுத்திக்கொண்ட கவனக்குறைவுதான் காரணமாக இருந்தது. எனவே, வேதாத்திரி மகரிஷி அவர்களே ‘இதுவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
என்றாலும், வேதாத்திரியத்தில் வழங்கப்படும் ‘ஜீவகாந்த பெருக்கம்’ உங்களுக்கு சிறந்த மாற்றாக அமைந்திருக்கிறது. அது உங்களுக்கு உதவும்.
வாழ்க வளமுடன்
-