Home » without » In our life mind is very problematic, any easy solution for that? can we live without mind?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!
பதில்:
உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. மேலும் நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவர் என்பதும், ஏதோ ஓர் ஆர்வத்தில் உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டதும் தெரிகிறது. விட்டால் வேறே எங்கேயாவது தப்பி ஓடிவிடவும் யோசனையாக இருப்பதும் யூகிக்க முடிகிறது. உங்களுக்கான தெளிவான பதிலாகவே தருகிறேன்.
மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன் என்று அர்த்தமாகிறது. மனதையும், மனிதனையும் பிரிக்கவே முடியாது. பிறக்கும் பொழுது இல்லாத மனம், மூன்று வயதிற்குப் பிறகு துணையாக நின்று, நாம் வாழும் காலம் வரை கூடவேதான் இருக்கும் பிரிவதே இல்லை. பிரிக்கவும் முடியாது.
வேதாத்திரிய யோகத்தில் இருக்கின்ற நீங்கள், உங்கள் மனதைக் கொண்டுதான் தியானமும், தவமும் செய்யமுடியும். அதே மனதைக் கொண்டுதான் புலன்களை கடந்து நிற்க முடியும், மனமே மனதை அறியச்செய்யவும் முடியும். அந்த மனதால்தான் நம்முடைய உயிரையும் அறியமுடியும். அதே மனதால்தான் உயிருக்குள்ளாக நிற்கின்ற அறிவை, மெய்ப்பொருள் நிலையாகவும் உணரமுடியும். அத்தகைய மனதை விட்டு விலகிவிடவும், சும்மா இருக்க வைக்கவும், தள்ளிவைக்கவும், தூரவைக்கவும் விரும்பினால் எப்படி அது நியாயமாகுமா?
உங்கள் வாழ்நாளில் உங்களை குழப்புவதே உங்களின் மனம் தான். ஏன் குழப்புகிறது? நீங்கள் அப்படி அதை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், நான் எங்கேய்யா அதை வளர்த்தெடுத்தேன்? என்று என்னிடமே எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் தாய் தந்தையர், அவர்களின் தாய் தந்தையர், அவர்களின் அவர்களின் தாய் தந்தையர் இப்படி, பரம்பரை பரம்பரையாக செய்திருக்கலாம் அல்லவா? அதெல்லாம் எனக்கு ஏனய்யா வந்தது? என்கிறீர்களா? நீங்கள் தானே வாரீசு? உங்களிடம் தானே அது வந்து தங்கி நிற்கும்? சரிதானே?
அந்தவகையில் தங்கி நிற்பதெல்லாம், கர்மா என்ற வினைப்பதிவாக இருக்கிறது. அது எல்லாமே தீர்க்கவேண்டிய, அகற்றவேண்டிய, கழிக்கவேண்டிய பதிவுகள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். அது இயல்பு. இயற்கையின் வினை விளைவு நீதி அதுவாகும். அதை நீங்கள், இந்த யோகத்தின் வழியாக, அறிந்து, திருத்தி அமைக்கவேண்டும். அதற்காகத்தான் தற்சோதனையும், அகத்தாய்வும் இருக்கிறதே? அதைச் செய்யலாமே?
இப்படி எதுவுமே முயற்சிக்காமல், மனதை புரிந்தும் கொள்ளாமல், வெறுமனே ஒதுக்கி வைக்கிறேன், தள்ளி வைக்கிறேன், சும்மா வைக்கிறேன் என்றால் அது நகர்ந்துவிடுமா? நீங்கள் விலக்க விலக்க இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மேலே சொன்ன பயிற்சிகளை தொடருங்கள், தவத்தையும் தொடருங்கள், மனம் தெளிவு பெறும், நீங்களும் தெளிவு பெறுவீர்கள்.
வாழ்க வளமுடன்
-