Why often noted yoga only is the best way? Any other way not truly work?
எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?
பதில்:
யோகம்தான் சிறந்தது என்று சொல்லுபவர் உண்டுதான். ஆனால் அது அவர்களின் அனுபவம் சார்ந்த பதில் மட்டுமே. மெய்பொருள் உண்மை உணர்ந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகிய யாருமே யோகம் தான் சிறந்தது என்று சொல்லியதே இல்லை. சொல்லுவதும் இல்லை. ஆனால் ‘யோகம் ஒன்றுதான் முழுமையானது’என்று மட்டுமே சொல்லுவார்கள்.
உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் எந்த நிலையிலும், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு சுலபமானதுதான் அது. எளிமையாக நீங்களாகக்கூட சிலவேளை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அது உணர்வாக நிலைக்காது. தொடராது. காட்சியாகாது. அதுதான் இங்கே உங்களுடைய கேள்வியில் தொக்கி நிற்கிறது. மற்றபடி யோகம்தான் சிறந்தது என்றோ, யோகம் மட்டுமே முழுமையானது என்று கூறுவதற்கில்லை. என்னுடைய இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொள்வோரும் உண்டு. அவர்கள் அவர்களின் அனுபவத்தில் இருந்து கருத்து சொல்கிறார்கள். நான் ஆராய்ச்சியின் வழியில் சொல்லுகிறேன்.
இதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வண்டியில் பூட்டிய மாடுகள், வயற்காட்டில் இருந்து விட்டிற்குச் செல்வதும், வீட்டிலிருந்து வயற்காட்டிற்குச் செல்வதும் தானாக நடக்கும். நீங்கள் அந்த மாடுகளை வழிநடத்த வேண்டியதில்லை. பழக்கபட்ட மாடுகள் தானாகவே வழி கண்டு நடந்து செல்லும். ஆனால் குதிரை அப்படியல்ல. என்னதான் பழக்கினாலும் அது தன் போக்கில்தான் நடந்து செல்லும், நடக்கும் என்பது கூட உண்மையல்ல, ஓடும் என்பதுதான் உண்மை. மேலும் குதிரைக்கு அதன் பக்கவாட்டு பார்வையை மறைக்கவும் வேண்டும் அல்லவா? நீங்கள் அதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஆனாலும் இந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான மாடுகள், குதிரைகள் அருகிவிட்டன. இதில் மாடுகளுக்கும், குதிரைக்கும் இடையிலான ஆற்றல், வெளிப்பாடு, காலம், தூரம் கூட அடங்கி இருக்கின்றன அல்லவா? அந்த குதிரையை, அதன் இயல்பிலேயே பக்குவப்படுத்திவிட்டால் சிறப்புத்தானே? அதைத்தான் யோகம் தருகிறது.
ஒருவர் பக்தியில் ஈடுபாடு கொண்டவரா? அதிலும் பிரிவுகளில் நிற்கிறாரா? கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறாரா? எல்லாம் மறுத்து இயற்கையே என்ற முடிவில் இருக்கிறாரா? விஞ்ஞானம்தான் எல்லாவற்றிற்கும் விடை என்று கருதுகிறாரா? வேதாந்தத்தில் ஆர்வமாக இருக்கிறாரா? சித்தாந்தம் தான் எனக்கு என்று நினைக்கிறாரா? கர்மயோகமே எனக்கு போதும் என்று கருதுகிறாரா? வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒத்தும் உதவியும் வாழ்ந்தால் போதும் என்று விரும்புகிறாரா? மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருந்தாலே சரிதான் என்று நினைக்கிறாரா? இப்படி எந்த வகையினரும் மெய்ப்பொருள் உண்மையை ‘யோகம்’ ஒன்று இல்லாமல் அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உணர்ந்து கொள்ள, தனதாக்கிக் கொள்ள, முழுமையில் நிறைய ‘யோகம்’மட்டுமே துணை. இல்லையேல் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதைதான் உண்மையாகும்.
வாழ்க வளமுடன்
-