கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது ஏன்? விளக்குவீர்களா?
பதில்:
ஒரே கேள்வியில் இத்தனை துணைக்கேள்வியை இணைத்துக் கேட்டால் எப்படி சுருக்கமாக பதில் சொல்லமுடியும்? எனினும் முயற்சிக்கிறேன். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தின் வழியாக தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் உணர்ந்தவர்கள் பெரும்பாலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வது இல்லை. ஏனென்றால், ‘பிரம்மஞானம்’ என்ற உண்மைநிலையை எங்குமே, எதிலுமே, எப்பொருளிலுமே, எந்த உயிர்களிடமுமே, எந்த மனிதர்களிடமுமே காணக்கூடிய தன்மைக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள். எந்தவகையிலும் ‘தான், தனது’ என்று பிரித்துப்பார்த்திடாவர்கள். மிக இயல்புக்கு வந்து, இயற்கைத் தன்மையோடு ஒன்றி வாழ்பவர்கள்.
இப்படியான தன்னிலை விளக்கம் பெற்றவர்களும், மெய்ப்பொருள் உண்மை பெற்றவர்களும், பிறருக்கு எடுத்துச்சொல்லி, அவர்களையும் தன்னைப்போல உண்மையும், விளக்கமும் அறியச்செய்வதில் வெகு சிலர்தான் ஆர்வமாக இருப்பார்கள். மற்றோர் எப்போதும் போலான, வாழ்க்கையை, தன்னளவில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களை எளிமையாக காட்டிக்கொள்வதும், உலகுக்கு, அந்த உலகில் இயல்புக்கு மாறாக காட்டிக்கொள்வதும் உண்டு. எந்த ஆடையுமின்றியும் இருக்கலாம், கோவணம் என்ற சிறு மறைப்பு துணி மட்டும் கட்டியிருக்கலாம். சட்டை இல்லாமல் வேட்டி, துண்டு மட்டும் கட்டியிருக்கலாம். ஏதேனும் போர்வையை தன்மேல் போர்த்தியபடி இருக்கலாம். தலைப்பாகை கட்டியிருக்கலாம். தாடி மீசை கலைந்த தலைமுடி என்றும் இருக்கலாம். சிலர் அழுக்கடைந்த நிலையில் கூட இருப்பார்கள். சிக்கல் நிறைந்த, ஜடாமுடி என்று சொல்லப்படும் தலைமுடியிலும் இருப்பார்கள்.
இவர்களை நாம் அடையாளம் காண்பது எளிது. ஆனால் இவர்கள் எதுவுமே பேசாமல், இறையுணர்வை பெறுவது உண்மை எப்படி அறிவது என்று சொல்லாமல், பயிற்சி அளிக்காமல் இருப்பதால் இவர்களை மக்களாகிய நாம் உதாசீனம் செய்துவிடுவோம். மாறுதலாக எதோ சக்தி வாய்ந்தவர் என்று வணங்கவும் செய்துவிடுவோம்.
இந்த வணக்கத்தையும், மரியாதையையும், செல்வாக்கையும், பார்த்துத்தான் ஏமாற்றுப் பேர்வழிகள், தாடி மீசை முடியலங்காரம், ஆடை அலங்காரம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றி, பொருள், பணம் பறிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பூஜையும், வழிபாடும், மந்திர உச்சாடனமும், மௌன விரதமும் இருந்து, பல மக்களின் சந்தேக பார்வையில் இருந்து தப்பிவிடுவார்கள்.
மக்களின் அறியாமை உணர்ந்து, அவர்களை வழிநடத்த, உண்மைப்பொருள் உண்மையும், விளக்கமும் அளித்து முன்னேற்ற அக்கறை கொண்டு, ஞானிகள், மகான்கள், யோகியர்கள் தன்னை தனியாக அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படுவார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை வழங்குவார்கள். இவர்களையும் மதிக்காது, உதாசீனம் செய்யும் மக்களும் உண்டுதான். இத்தகைய உண்மையானவர்கள் மீது, நம்மக்கள் அக்கறை கூட கொள்வதில்லை, ஏமாற்றுக்காரன் என்றும் சொல்லுவார்கள். ஆனால் எல்லாவற்றையும் சொல்லிக்கொடு என்றும் எதிர்பார்ப்பார்கள். என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்றும் மறுப்பார்கள்.
வாழ்கின்ற இந்த உலகில், நாட்டில் ஒரு மனிதன் எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்பது, அவரவர் உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. நீங்கள் சொல்வது போல, எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது, யோகத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, மிக சாதாரண மனிதர்களும் அப்படி இருப்பார்கள் என்பதுதான் உண்மை. இதில் மனிதர்களின் இயல்பும் இருக்கிறது. சோம்பேறித்தனம், இயல்பாக விட்டுவிடுதல், எனக்கு பிடிக்கும் என்று மிகைப்படுத்துதல், நான் இப்படித்தான் என்று தன்னை வெளிக்காட்டுதல், மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்துதல் என்று பலப்பல இருக்கின்றன. அடையாளம் காணத்துடிக்கும் நமக்குத்தான் பெரும் பிரச்சனை என்று சொல்லலாம்.
ஆசான் திருவள்ளுவர்,
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. (குறள் 828)
என்று குறள்வழியாக சொல்லுகிறார். இதன் பொருளாக, நம்மை வணங்கி தன்னை தாழ்த்தும் ஒரு மனிதனிடம், நம்மை ஏமாற்றி, படையெடுத்து தாக்கி அழிக்கும் தன்மை இருப்பதுபோலவே, ஒருவருடைய அழுகையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும் என்கிறார்.
இதன்படி தோற்றத்தை வைத்து, மயங்கிவிடும் தன்மையை, நாம் தான் மாற்றிக் கொள்ளவேண்டும். அவர் யார்? இதற்குமுன் என்ன செய்தார்? பின்புலம் என்ன? அணுகுமுறை என்ன? அனுபவம் என்ன? என்ன் சொல்லுகிறார்? அதில் உண்மை உள்ளதா? பயன்படுமா? உலகியலுக்கும், இயற்கைக்கும் முரண்படாது செயல்படுகிறாரா? வழிகாட்டுகிறாரா? என்று பலகேள்விகளை முன்வைத்து ஆராய்ந்து மதிப்பளிக்கவேண்டும். தோற்றம் கண்டு ஏமாறவேண்டியது இல்லை. அப்படி ஏமாந்தால் அது உங்கள்பாடு.
வாழ்க வளமுடன்
-