What is the easy way to understand the Vethathiriyam, if we feel as difficult?
வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?
பதில்:
பொதுவாகவே கல்வி என்ற நிலையில் உள்ள எந்த உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். அவற்றை அனுபவமாக்கிக் கொள்ளும் பொழுது அவை முழுமையாக புரிந்துவிடும் என்பதே உண்மையாகும். எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும். அவரின் வயது, அனுபவம், கல்வி அறிவு, ஏற்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை அளவில் மாற்றம் பெற்றே இருக்கும். ஒருவருக்கு எளிமையாக இருப்பது, இன்னொருவருக்கு கடினமாக இருக்கும். இதனோடு ஆராய்ச்சிப் பார்வை, ஒத்துப்பார்த்தல், அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற தன்மைகளும் மாறுதலாகவே இருக்கும். எழும் சந்தேகங்களும், அதற்குறிய கேள்விகளும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.
இதற்கெல்லாம் காரணம், அவர்களின் வயதும், அவர்களின் வாழ்க்கை சூழலும், ஏற்புத்திறனும், வாழ்வில் அவர்கள் கண்ட குடும்ப, சமூக, உலக வழக்க பழக்கங்களுமே ஆகும். எந்த வகையிலும் யாரையும் இங்கே குறை சொல்லுவதற்கு வாய்ப்பில்லை. பொதுவாகவே, என்னுடைய எல்லாவகையான பதிவுகளிலும், ‘நான் சொல்லுவது உங்களுக்கு புரிகிறதா?’ என்று முட்டாள்தனமாக கேட்பதே இல்லை. அது கேட்போரை கீழாக நினைத்து கேட்கக்கூடிய மனோநிலை என்பதை சில ‘விற்பனர்கள்’ புரிந்து கொள்வதில்லை. தன்னைமட்டுமே மேலாக நினைத்து, தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு நிலையில் இருப்பதுண்டு. ஒருவேளை ‘எனக்கு சுத்தமாக புரியவில்லை ஐயா’ என்று ஒருவர் எழுந்து கேட்டால், அந்த விற்பனரின் நிலை என்ன? மறுபடி முதலில் இருந்து பாடம் நடத்துவாரா? தனியாக கவனம் வைத்து பாடம் தருவாரா?
வேதாத்திரியம் மிக எளிமையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேதாத்திரியத்தின் உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமானதும் அல்ல. வேதாத்திரியத்தை தந்த, வேதாத்திரி மகரிஷி ‘பாமர மக்களின் தத்துவஞானி’ என்றுதான் போற்றப்படுகிறார். அவரின் எழுத்துக்களும், கட்டுரைகளும், கவிகளும், பேச்சுக்களுமே சான்றாக இருக்கின்றது. அதை எடுத்துச் சொல்லுபவரும் அத்தகைய உண்மையை, தானாக புரிந்து கொண்ட பிறகு சொன்னால்தான், அது மற்றவர்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்கும். தனக்கே புரியாத ஒன்றை, பிறருக்கு பாடமாக, கல்வியாக தரமுடியுமா? எனவே இங்கே, ஒரு குறிப்பிட்ட உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புதிய ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றால், கற்றுக்கொடுப்பவர் நன்கு புரிந்து கொண்ட தன்மையில், அனுபவமானவராக இருக்கவேண்டியதும் அவசியம்.
உங்களைப்போல, ஒரு தனிமனிதராகவே ஒவ்வொருவரும் இருப்பார். அவரவர்களுக்கு ஏற்றவகையில், தனித்தனி கவனம் கொண்டு உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் தரமுடியும் என்பதும் உண்மையே. பொதுவெளியிலும், கல்வி, பாட மையங்களிலும் அதை தரும் பொழுது, ஒரு பொதுவான நிலையில்தான் வழங்கமுடியும். அது எல்லோருடைய அறிவிற்கும் போய்ச்சேரும்படி ‘எளிமையாக’ இருக்கவேண்டியதும் அவசியமாகும். அனுபவமிக்க ஆசிரியர்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்பதும் உண்மையே. படித்ததை பேசுவதற்கும், உணர்ந்ததை பேசுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே?
உங்களுக்கு இங்கே வழங்கப்படும் வழி, தீர்வு என்ன? என்றால் வேதாத்திரிய தத்துவத்தை மட்டுமல்ல, வேறு எந்த தத்துவமாக இருந்தாலும், அந்த வகுப்பில் உங்களுக்கு புரியவேண்டும் என்று நினைக்காதீர்கள். கல்வி பாடங்களை, விளக்கங்களை கேட்கும்பொழுது, குறிப்பு எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த வழி. உங்கள் சிறப்பான மூளையையும் காதுகளையும் மட்டுமே நம்புவது தவறு. சிந்தனைக் கவனம் சிதறிவிட்டால், அந்த விளக்கங்கள் உங்களின் இன்னொரு காதுவழியாக வெளியே ஓடுவிடும். அன்றைய பாடங்களை அன்றைக்கே, தனியாக அமர்ந்து, உங்கள் குறிப்புக்களோடு ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து பாருங்கள், எளிதாக புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.
கேள்வி நேரத்திலேயே, உங்கள் குறிப்பின் வழியாக, உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமானதை, சந்தேகத்தை கேள்வியாக கேட்டு பதில் பெற மறவாதீர்கள். ‘உங்களுக்கு புரிகிறதா?’ என்று ஆசிரியர் கேட்டால் ‘எனக்கு புரியவில்லை ஐயா’என்று உடனடியாக சொல்லிவிடுங்கள். பிறகு அந்த ஆசிரியரே உங்களுக்கு ஏற்றபடியாக தன்னை மாற்றுக்கொள்வார் என்பது உறுதி.
வாழ்க வளமுடன்
-