Is it true mind will be affected when break the meditation suddenly?
தியானம் செய்யும் பொழுது தடை உண்டானால், மனக்குழப்பம் வரும், புத்தி பேதலிக்கும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா? விளக்கம் தேவை!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்யும் பொழுது தடை உண்டானால், மனக்குழப்பம் வரும், புத்தி பேதலிக்கும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா? விளக்கம் தேவை!
பதில்:
யோகத்தில் தியானம் என்பது மிக உயர்ந்த சாதனை. மிக எளிதில் யாருக்கும் கிடைக்காத பேறு என்றுதான் சொல்லவேண்டும். பரபரப்பான இப்போதைய, பொருள்முதல்வாத உலகில், தியானம் மிகவும் கடினமானதுதான். ஏனென்றால், நம் மனதை அலைக்கழிக்க ஏகப்பட்ட விஷயங்கள் அருகியிருக்கின்றன. மிக முக்கியமாக நம்முடைய செல்ஃபோன். ஏதோ நம்மோடு பிறந்தது போலவே, ஒட்டிக்கொண்டது. அது இல்லாமல் நம்முடைய எந்த நடவடிக்கையும் இல்லை என்ற நிலைக்கு நாம் மாறிவிட்டோம், மாற்றப்பட்டுவிட்டோம் என்பது உண்மைதானே?
இதோடு, வேலை, வியாபாரம், தொழில், நிறுவனவேலைகள் என்றும் பலவழிகளில் சிக்கி, நேரமின்மையில் தவிக்கிறோம். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளக்கூட நேரமில்லை. இதனினும் மேலாக, குடும்ப கடமைகள். வீட்டில் இருக்கும் நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுதல், குழந்தைகளை கவனித்தல், வளர்த்தல், அவர்களுடைய கல்விக்கு உதவுதல் என்றும் வரிசையாக அடுக்கிவைத்தார்போல செய்யவேண்டிய கடமைகள். இவை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு, பெண்களுக்கும் உண்டு. கூடுதலாக பெண்களுக்கு, எல்லோருக்குமான உணவை சமைத்தல், பரிமாறுதல், வீட்டில் உள்ளவர்களை அக்கறையோடு கவனித்தல் என்ற பொறுப்பும் உண்டு. இதையெல்லாம் அன்றாடம் ஒழுங்கிபடுத்திக்கொண்டு, அதில் கிடைக்கும் சிறிய இடைவெளியில், நமக்கான சில நேரங்களை, வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த தியானத்தை செய்யவேண்டிய நிலைதான் இங்கே, இன்று இருக்கிறது.
மேற்கண்ட விஷயத்தை படிக்கும் பொழுதே, யோசித்துப் பார்க்கும் பொழுதே, ஏகப்பட்ட தடைகளுக்கான காரணங்கள் விளங்கிவிடும் என்பது உண்மைதான். என்றாலும் கூட, நாம் யோகத்திலும் கூட ஒரு முன்னேற்றமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்றால் மிகையில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ என்ற மிகச்சிறந்த யோகமுறையில் பயணிக்கிறோம். அதனால், நம்முடைய அன்றாட வாழ்வில், மிகச்சிறிய நேரத்தை ஒதுக்கிக்கூட தியானம் இயற்ற முடிகிறது. அதுகுறித்த சிந்தனையிலும் இருக்கமுடிகிறது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் அல்லவா?
என்றாலும் கூட, நாம் இயற்றுகின்ற தியானத்தில் தடை ஏற்பட்டால், அது பாதிப்பை தரும் என்பது உண்மைதான். மனக்குழப்பம், மன அழுத்தம் உருவாகிவிடும். தியானம் முடிக்காமல் தடையால் நிறுத்திவிட்டோமே? என்று சிந்திப்பது மனக்குழப்பம் ஆகும். ஏற்பட்ட தடையால் மனமும் எண்ணங்களும் சிதறுவது, பதட்டப்படுவது, என்ன ஆகிவிடுமோ? என்று பயப்படுவது மன அழுத்தம் ஆகும். இந்த இரண்டும் பொதுவாக, தியானத்தில் தடை ஏற்பட்டால், எல்லோருக்குமே உருவாகக்கூடியதுதான். என்றாலும் அடுத்த சில மணி நேரங்களில், தானாகவே சரியாகிவிட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், நாம் இணைந்திருக்கின்ற ‘மனவளக்கலையின்’ சிறப்பு அதுவே.
புத்தி பேதலிக்குமா? என்ற அடுத்த ஒரு கேள்வி உள்ளது. இப்பொழுது நாம் பயணிக்கும், எளியமுறை குண்டலினி யோகத்தில் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால், வாசியோகம், ஆசனமுறை, பூஜா முறை ஆகியவற்றில் குண்டலினி சக்தி தானாகவே எழுப்பிக்கொண்டு, தியானம் செய்துவரும் அன்பர்களுக்கு, அந்த தியானம் செய்யும் பொழுது தடை ஏற்பட்டால், புத்தி பேதலிக்க வாய்ப்பு உண்டு. எனினும் குருவின் அருகாமையும், மேற்பார்வையும் இருந்தால் சரிசெய்யப்படலாம். எனினும் கவனம் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வாழ்க வளமுடன்
-