How we can manage who telling always all spiritual persons are fake?
ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு பதில் என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு பதில் என்ன?
பதில்:
இதேபோலான கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் தந்திருக்கிறேன் என்றாலும், அவர்கள் அடிக்கடி குறை சொல்லுவதுபோலவே, நாமும் நிறை சொல்லுவது நல்லதுதான். அப்போதாவது அவர்கள் உண்மையை புரிந்துகொள்வார்களா? என்ற ஒரு விருப்பம் தான். ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு, அடிப்படையாக ஒரு கருத்தும், நம்பிக்கையும் இருக்கும். அதிலிருந்து அவர்கள் விலகவே மாட்டார்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வெளிப்பாடை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நினைப்பு இருக்கும். தங்களைத்தவிர மற்ற எல்லோருமே அறிவிலும், செயலிலும், அனுபவத்திலும் குறையுள்ளவர்கள். அவர்களை திருத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். இத்தகைய மனிதர்கூட்டத்தை, சமுதாயத்தை, உலகை திருத்திட வேண்டும் என்று செயல்படுவார்கள்.
ஒருவகையில் இப்படி சொல்லுபவர்கள் பரிதாபமான நிலையில் வாழ்வார்கள் என்று கருதலாம். தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாத ஏழ்மையிலும், எதிலும் சார்பற்ற நிலையிலும் இருப்பார்கள். பொருள்முதல்வாத உலகுக்கு எதிராகவும் இருப்பார்கள். இதனால் பணம்படைத்தவன், பணம் சம்பாதிப்பவன், தொழிலதிபர்கள் ஆகிய எல்லோருமே ‘ஏமாற்றுக்கார்கள்’ என்று கருதுவார். அந்த வரிசையில் இந்த ‘ஆன்மீகவாதிகளையும்’ இணைத்துக்கொள்வார். இங்கே குறிப்பிடுவது எல்லாம் பொதுவான கருத்துக்கள்தானே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்ற விளக்கத்தையும் தந்துவிடுகிறேன். தவறாக கருதிக்கொண்டால், நான் பொறுப்பல்ல.
ஆன்மீகவாதிகள் என்ன செய்கிறார்கள்? மக்களின் அறியாமையை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுவது சரிதான். இந்த மனிதப்பிறவியின் உண்மையை விளக்குகிறார்கள், வாழ்வின் நோக்கத்தை அறியத்தருகிறார்கள். ‘வாழும் பொழுதே, இத்தகைய மாற்றங்களை செய்து, விளக்கம் பெறுக. ஏற்கனவே கோடானகோடி மக்கள் அறியாமல் இறந்துவிட்டார்கள். நீயும் அப்படி செய்துவிடாதே’ என்று அறிவுறுத்துகிறார்கள். இது தவறானதா? என்றாலும்கூட, ஆன்மீகவாதிகளுக்கு கிடைத்த, சமூகத்தின் உயர்ந்த மதிப்பையும், மரியாதையையும், அவர்களிடமிருந்து நன்மையும் பெற, ஏமாற்று ஆன்மீகவாதிகளும் முயன்றார்கள், முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. வெறுமனே அடையாளம் காட்டும் ஆடைகளும், மத ரீதியிலான சின்னங்களும் அணிந்துகொண்டு, நீண்ட தாடியும், முடியும் வளர்த்துக்கொண்டு, தனக்குப்பின்னால் சில நபர்களை சீடர்களாக வைத்துக்கொண்டு, யாருக்கும் புரியாமல் பேசுபவர்களையும், மௌனவிரதமாக ஆசீர்வாதம் மட்டுமே செய்பவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உண்மைத்தேடும் ‘சராசரி மக்கள்’ ஆராய்ந்து பார்த்து அல்லவா இவர்களை நாட வேண்டும்? தானாகவே போய் உண்மையறியாது சிக்கிக் கொண்டால், பொருள், பணத்தை இழந்தால், அது யாருடைய தவறு?
ஒரு உண்மையை சொல்லட்டுமா? சாரசரி மக்களை திருத்த வேண்டும் என்ற கட்டாயம், எந்த ஒரு ஆன்மீக ஞானிக்கும், மகானும், யோகிக்கும் கிடையாது. எண்ணற்றவர்கள் இந்த உலகை கண்டும் காணாமல், தன்னளவில் வாழ்ந்துவருவதை நாம் அறிவோம். ஆனால், இயற்கையும், இறையாற்றலும் அவர்களை சும்மா விடுவதில்லை. 'மக்களுக்கு உதவுக' என்று அவர்களை இயக்கிக் கொண்டே இருக்கும். அந்தநிலையில்தான் அவர்கள், தன்னுடைய கருத்துக்களை, போதனைகளை, பயிற்சிகளை தருகிறார்கள். நிச்சயமாக, உண்மையான ஞானிகளும், மகான்களும், யோகிகளும் யாரையும், எவரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்பது நிச்சயம்.
அப்படியிருக்கின்ற நிலையில், போலியான ஆன்மீகவாதிகளிடம் சிக்கிக்கொள்பவர்களை என்ன சொல்லுவது? யாரோ ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால், மொத்தமாக எல்லாருமே ‘ஏமாற்றுப்பேர்வழிகள்’என்று முடிவுகட்டிவிடுவது சோகம். இழப்பு ஏற்படுவது ஆன்மீகவாதிகளுக்கு அல்ல, சராசரி மக்களுக்கும், அப்படியாக உண்மையறியாது ஒதுக்கிவிடுபவர்களுக்கும்தான்.
முக்கியமாக, இப்படி ஆன்மீகவாதிகளை குறை சொல்லுபவர்கள், அவர்களவில் ஏமாந்திருப்பார்கள், மற்றவர்கள் சொன்னதை ஏற்று கருத்தாக சொல்லுவார்கள். ஆனால் உண்மை ஆன்மீகவாதிகளின் வழியாக, நன்மை பெற்றவர்களின் கருத்துக்களை அறிந்தார்களா? என்பது ஐயமே. அவை குறித்த உண்மைகளையும், விளக்கங்களையும் அறிந்திருந்தால், தங்களின் கருத்தை தானாகவே மாற்றிக்கொண்டிருப்பார்கள் தானே?
எப்போதுமே, உங்களுக்கு அருகில் இருக்கும், ஆன்மீகவாதி யாராக இருந்தாலும், அவரின் உண்மைத்தன்மையை பரிசோதனை செய்யுங்கள். அவரோடு கலந்துரையாடுங்கள். DEBATE என்று சொல்லக்கூடிய நேருக்கு நேரான கருத்துப்பரிமாற்றம் செய்து உண்மை அறிய முயற்சியுங்கள். அதில் அவர் தோல்வி கண்டால், ‘இவர் ஏமாற்று ஆன்மீகவாதி’ என்று உங்களைச்சுற்றி அல்ல, இந்த ஊரிலும், நாட்டிலும் மட்டுமல்ல, உலகெங்குமே பரப்புரை செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்
-