Why most people says as a secret in yoga, almost it is simplified?
யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?
பதில்:
பெரும்பாலன ஊடகவழியிலான தகவல்கள் இப்பொழுது இல்லை. உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கும் பத்திரிக்கை வழியிலான செய்திகளும், ஒரு கூட்டம் தனியாக உட்கார்ந்து திட்டமிட்டு பரப்பும் செய்திகளும், தலைப்புச் செய்திகளும், சுடச்சுட செய்திகளும் இப்போது இல்லை. இப்போது இல்லை என்றால், உங்களுக்கு படிக்கக் கிடைப்பதில்லை அவ்வளவுதான். ஆனால் காலம் மாறிவிட்டதால், கையடக்க மொபைல் ஃபோனில் காட்சியாக வருமளவிற்கு முன்னேறிவிட்டது. உலகில் விஞ்ஞானம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது ஆனால் மனிதன் இன்னமும் பழமையான மனநிலையில்தான் இருக்கிறான். மனவளம் இன்றி தவிக்கிறான். என்றாலும்கூட சாராசரி மனிதனைவிட சிலர் இன்னமும், ஓஷோ ரஜனீஸ் சொல்லுவது போல ‘பழைய கில்லாடிகளாக’ இருக்கிறார்கள். இந்த கில்லாடிகள், மனிதர்களின் மனங்களையும், மனிதர்களையும் பந்தாடுகிறார்கள். அந்த விளையாட்டில் யார்வேண்டுமானலும் சிக்கிவிடக்கூடும். நீங்களும் நானும் விதிவிலக்கல்ல.
ஒரு செய்தியை, விஷயத்தை, உண்மை சொல்லுவதற்கு, மிகையான அலங்காரம் தேவைப்படும் காலம் இது. ஏனென்றால், ஒரு செல்லும் வழியில் பல பொருட்கள், அவைகளை, உங்கள் காலை பற்றி இழுக்கும் பொறிகள் என்று கூட சொல்லலாம். அது தன்னுடைய பொறியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். தான் சொல்லும் விஷயத்தை, செய்தியை மட்டுமே மற்றவர்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். இது ஒருவகையான தன்முனைப்பின் நிலை என்றும் சொல்லமுடியும். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், ‘அப்படியெல்லாம் இல்லை, இந்த உண்மையை மக்கள் தவறவிடக்கூடாது’ என்றுதான் நாங்கள் விரும்புகிறேன் என்று பதில் தருவார்கள்.
நாம் வழங்குகின்ற வேதாத்திரிய சேனலில் கூட, ரகசியம் என்ற தலைப்பில் சில பதிவுகள் ‘மிக சமீபமாக’ தரப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த விருப்பமில்லை என்றாலும், ஒரு முயற்சியாக, சோதனையாக செய்யப்பட்டது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? உண்மையாகவே, ரகசியம் என்று தலைப்பிட்ட பதிவுகள் அதிக பார்வையை பெற்றன.
இதற்கு நாம் என்ன பதிலை தரமுடியும்? ரகசியம் என்ற வார்த்தையும், அதில் மறைந்திருக்கிற ஏதோ ஒன்றையும் மக்கள் விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகிவிடுகிறது அல்லவா? மக்களின் மனநிலை இப்படியாக மாறிவிட்டது. அதனால், யார்வேண்டுமானாலும், அவர்கள் யோகத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் ரகசியம் என்ற வார்த்தையை இணைத்து சொல்லுகிறார்கள். இவர்கள் மட்டுமா? அரைகுறையாக யோகம் குறித்து தெரிந்துகொண்டவரும், யாரோ சொல்லி புரிந்துகொண்டவரும், பழைமையான நூல்வழியாக படித்து அறிந்தவரும் கூட, யோகத்தில், ரகசியம், அப்படி, இப்படி என்று தலைப்பிட்டு, மக்களை கவர்வதை காணமுடிகிறது.
உதாரணமாக ஒன்றை சொல்லுவார்கள். மூடிய கைக்குள் என்ன இருக்கிறது? என்ற நிலைவரைதான் அது ரகசியம். அது உள்ளங்கை நெல்லிக்கனி என்று சொல்லிவிட்டால், ‘அவ்வளவுதானா?’என்று எல்லோரும் ஓடிப்போய் விடுவார்கள்.
எனவே, மாறவேண்டியது, மாற்றிக்கொள்ள வேண்டியது மக்களும், அவர்களின் மனநிலையும்தான். அதைவிடுத்து, ரகசியம், அப்படி, இப்படி என்று சொல்லி அழைப்பவர்களை குறைசொல்லி ஒரு பலனும் இல்லை. அவர்கள் போய்விட்டால், இன்னொரு கூட்டம் வந்து அழைக்கும். இது உலகில் பலகாலமாக இருந்துவருகின்றது. அழைப்பையும், செய்தியையும் ஆராய்ந்து பார்க்கின்ற பழக்கம், நமக்குத்தான் வரவேண்டும். அதுவரை இப்படி போலியான அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கும்.
நீங்கள் சொன்னதுபோலவே, யோகம் எளிமையாக்கப்பட்டு ‘வேதாத்திரியமாக’ வளர்ந்து நிற்கிறது. மிக எளிதாக பருவ வயதில் இருந்த கற்றுத்தேர்ந்தால், பிறவியின் நோக்கமும், நான் யார்? என்ற உண்மையும், தன்னையறிதலும், மெய்ப்பொருள் விளக்கமும் பெற்று, உலகில் நிறைவாக வாழலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, தனிமனித சுதந்திரமும், ஓர் உலக கூட்டாட்சியும், உலக சமாதானமும் கிடைக்க அதுவே சிறந்த வழியும் ஆகும். ஆனால் இத்தகைய தெளிவுக்குப் பிறகும், எண்ணற்ற கட்டுக்கதைகளை கோர்த்துவிட்டு, யோகத்தையும், அந்த யோகத்தில் இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவதும் வேதனைக்குறியதுதான்.
வாழ்க வளமுடன்
-