Why It's as if you don't need the service of teaching yoga to others? | CJ

Why It's as if you don't need the service of teaching yoga to others?

Why It's as if you don't need the service of teaching yoga to others?


நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பிறருக்கு யோகம் கற்றுத்தரும் சேவை தேவையில்லை என்பதுபோல இருக்கிறதே? இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பிறருக்கு யோகம் கற்றுத்தரும் சேவை தேவையில்லை என்பதுபோல இருக்கிறதே? இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?

பதில்:

‘வாங்க, எத்தனைபேர் இப்படியாக கிளம்பியிருக்கிறீர்கள்?’ என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. இதுபோல இன்னும் எத்தனையோ வகையான கேள்விகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். நான் என்னுடைய கருத்தில், எழுத்தில் மேம்போக்காக எதையும் சொல்லுவதும் இல்லை. எழுதுவதும் இல்லை. அதை பொதுவெளியில் பகிர்வதும் இல்லை என்பதை இங்கே, உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தெளிவு செய்கிறேன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பாணியிலே, படித்தோம் கேள்வி கேட்கிறோம் என்று எதையுமே ஆழ்ந்து புரிந்து கொள்ளாமல் ‘ஓ, அவர் இதைத்தான் சொல்லுகிறாரா?’ என்று தானாகவே எதையோ அரைகுறையாக புரிந்துகொண்டு, தன்னறிவிலே என்ன புரிந்து கொண்டாரோ, எப்படி புரிந்து கொண்டாரோ அதே அளவில், இப்படியான கேள்விகளை எதிராளிடம் கேட்பது என்று உங்களைப்போலவே பலர் இருக்கிறார்கள்.

இதை தன்முனைப்பு என்று தெளிவுசெய்தாலும், உனக்கில்லாத தன்முனைப்பா எனக்கு இருக்கிறது என்று மறுபடியும் முரண்படுவார்கள் என்பதே உண்மை.

நீங்கள் இங்கே கேள்வியில் குறிப்பிட்டிருக்கும் உண்மையை சொல்லும் பொழுதே, மனவளக்கலையின் நோக்கம் என்ன? என்பதை விளக்கியுள்ளேன். அதை தெளிவாக சொன்ன பிறகுதான். பிறருக்கு யோகம் கற்றுத்தரும் ஆசிரியராக செயல்படுவது உங்களின் விருப்பம் என்றும் தந்துள்ளேன். அதில் என்னுடைய கருத்து என்ன என்பதையும் ஏன் அப்படியான முடிவை எடுத்துக்கொண்டேன் என்பதையும் தெளிவாக தந்துள்ளேன். நீங்கள் வேண்டுமானால் பொறுமையாக, மறுபடியும், நிறுத்தி, நிதானமாக, கவனமாக படித்துப்பார்க்கவும். அதற்கான சுட்டி இணைப்பையும் இங்கே தருகிறேன்.

கடந்த பதிவுக்கான சுட்டி - இதோ இங்கே படிக்கலாம் 

உங்கள் கேள்வியில் உள்ள முதல் கேள்விக்கு மறுபடி ஒரு விளக்கம் தருகிறேன். நீங்கள் யோகம் கற்றுக்கொண்டால் மட்டுமே பிறருக்கு கற்றுத்தரக்கூடிய தகுதி வந்துவிடுகிறது என்பது உண்மைதான். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அந்த அளவிற்கு நம்மை உயர்த்தி, மதிப்பளித்து அதற்கான சான்றும் தந்துவிடுகிறார். ஆனால், ‘கற்க கசடற என்பதும், கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும் உண்மையில் இருக்கிறீர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் யார்? என்ற தன்னை உணர்தலையும், மெய்ப்பொருள் உண்மையையும் அறிந்து கொண்டீர்கள். எப்படியாக என்று பார்த்தால், வார்த்தைகளாலும், கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கேட்டும், படித்தும், அதுகுறித்து கேட்டறிந்தும் அறிந்து கொண்டீர்கள். எந்தவகையிலும் சந்தேகமில்லை என்றே வைத்துக் கொள்ளலாமே! ஆனால், நீங்கள் அதை உணர்ந்தீர்களா? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனக்குள் உணர்ந்ததுபோல நீங்கள் உணர்ந்து உண்மை தெளிந்தீர்களா? இதற்கு உங்கள் பதில் என்ன? 

அடுத்தாக இரண்டாவது கேள்விக்கு வரலாம். நீங்கள் உள்ளுணர்வாக, விளக்கமாக, உண்மையாக, அறிந்து உணராத ஒன்றை, பிறருக்கு பாடமாக சொல்லித்தருவது முரண்பாடு இல்லையா? அதை நான் சுட்டிக்காட்டியதுதான் உங்களுக்கு முரண்பாடாக தெரிகிறதா?

யோகம் என்பதை பிறரிடம் இருந்து (ஒரு வருடம் / இரண்டு வருடம் காலத்தில்) பெற்று, இன்னொருவருக்கு அப்படியே திருப்பி வழங்கிவிடுவதுதான் சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுவே போதுமானது என்றும் முடிவு செய்கிறீர்களா? மற்றவர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்கும் முன்னால், உங்களை தகுதியாக்கிக் கொள்ளும் திட்டம் ஏதும் உங்களிடம் இருந்ததில்லையா? அது தேவையும் இல்லையா? அனுவபத்திற்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லையா? ஒருவேளை குருவுக்கு இணையாகவோ, அடுத்த நிலையிலேயோ அந்த நிலையிலேயே தானாக, அதிர்ஷ்டவசமாக உயர்ந்துவிட்டீட்களா? இதற்கும் உங்கள் பதில் என்ன?

உங்களுக்குத் தெரியுமா? குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் இத்தகைய கேள்விகளை எதிர்கொண்டும் இருந்திருக்கிறார். மேலும், தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே கூட, தன்னால் இருக்கையில் நீண்ட நேரம் உட்கார முடியாத நிலையிலும், பேராசியர்களுக்கு விளக்கம் வழங்கிக்கொண்டே இருந்தாரே? அது ஏன்? அவர்களை பயிற்றுவித்தார் தானே? அருள்நிதியர் என்று நிலையோடு விட்டுவிட்டாரா? அந்த பேராசியர்கள்தான் இன்னும் கற்றுக்கொள்வதை முரண்பாடு என்று விட்டுவிட்டார்களா?

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசர மனநிலையை தவிர்த்து, எதையுமே ஆழமாக புரிந்துகொள்ள உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்
-