Why felt myself lost something inside after joining on Yoga? Can give up Yoga? | CJ

Why felt myself lost something inside after joining on Yoga? Can give up Yoga?

Why felt myself lost something inside after joining on Yoga? Can give up Yoga?


யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


பதில்:

உங்களுக்குத் தோன்றிய இக்கருத்து, யோகத்தில் தங்களை, இணைத்துக் கொண்ட எல்லோருக்குமே தோன்றும் என்பதே உண்மை. நீங்கள் வாய்திறந்து கேட்டுவிட்டீர்கள். பெரும்பாலோர் கேட்கமாட்டார்கள். தங்களுக்குள் சந்தேகத்தோடு இருப்பார்கள். யோகத்தில் ஆர்வம் வருவதும், அதில் தங்களை இணைத்துக்கொள்வதும், குருவின் வழியாக தீட்சை பெற்று, குண்டலினி சக்தியை உயர்த்திக்கொண்டு தியானம் பழகுவதும் மிக எளிதானதல்ல. பலப்பல பிறவிகளின் வழியாக நாம் இழந்த ஒன்றை, இந்தப்பிறவியில் பெரும்பேறாக அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அத்தகைய உண்மையை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.

காரணம் என்ன? இதற்கு முன்னதாக நாம் வாழ்ந்துவந்த நிலைகளிலும், அதில் கிடைத்த அனுபவங்களிலும் மனம் ஒன்றி அனுபவித்துவிட்டோம். அதனால் இந்த மாற்றத்தை நாம் மிக எளிதான ஒன்றாக கருதுகிறோம். அவசியமில்லாததோ? என்றும் சந்தேகப்பட்டு விடுகிறோம்.

வல்லூறு என்ற ஒரு பறவை இருக்கிறது. கழுகு என்ற பறவை இனத்தைச் சேர்ந்தாலும் அது கழுகைவிடவும் விட மிக பெரிதாக இருக்கும். கழுகு என்ற இனத்தில்  ‘கருடன்’ என்பது உண்டு, அதுவும் வேறுவகையானதே. இந்த வல்லூறுக்கு மிக நீண்ட இறக்கைகள் இருக்கும். எட்டுஅடி நீளம் கொண்டவை உண்டு என்கிறார்கள். மிக தீர்க்கமான பார்வை, வேகம், தன்னைவிட பெரும் எடையை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் பறக்கும் தன்மை கொண்டது. சரி, இதை ஏன் இங்கே சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா? வாருங்கள், மேலும் பார்க்கலாம்.

அத்தகைய வல்லூறுக் குஞ்சொன்று அடிபட்டு சாலையில் விழுந்துகிடந்தது. அதை பறவைகளின் ஆர்வலர், வனத்துறையிடம் கொடுத்துவிட்டார். அவர்கள், அந்த வல்லூறுக் குஞ்சை கவனமாக மருந்துகள் கொடுத்து, அதன் காயத்தை ஆற்றி, சிதைந்து போயிருந்த சிறகுகளை வெட்டி ஒழுங்கு படுத்தி, கூண்டுக்குள் வைத்து காத்துவந்தனர். வேட்டையாடும் பழக்கமுள்ள இனம் இந்த வல்லூறு, ஆனால் கூண்டுக்குள் உணவைக் கொடுத்து வளர்த்தனர். நாளடைவில் அது குணமடைந்துவிட்டது. வளர்ந்தும் விட்டது. அதன் இயல்பில் அவர்களை அலகால் கொத்தவும், தாக்கிடவும் செய்கிறது. இப்போது அதற்கு கூண்டு பொருந்தவில்லை. அவ்வளவு பெரிதாகவும் ஆகிவிட்டது. 

வனக்காவலர்கள் திட்டமிட்டு, அதை மலைக்காடுகளில் விட்டுவிட முடிவு செய்தனர். அடர்ந்த அந்த மலைக்காட்டின் உச்சியில் கொண்டு சென்று, முகத்திலும் கைகளிலும் உறை போட்டுக்கொண்டு கவனமாக, அக்கூண்டை திறந்துவிட்டனர். அந்த வல்லூறு, தன் கூண்டைவிட்டு கொஞ்சம் கூட நகரவே இல்லை. வனக்காவலர்கள் சிறிய மூங்கில் கம்புகளால் வல்லூறை கூண்டுக்கு வெளியே தள்ளுகிறார்கள். அப்படியும் நகரவில்லை. ஆனாலும் தொல்லை தாங்காதவாறு கூண்டுக்கு வெளியே வந்துவிட்டது. அது நடந்து நகர்கிறது. இறக்கைகளை விறிக்கவும் இல்லை, அது பறக்கவும் இல்லை. அதற்குப்பிறகு என்ன நடந்தது? அதை பிறகு சொல்லுகிறேன். இந்த வல்லூறின் நிலைதான் உங்களின் நிலைமை.

கூண்டில் இருந்து பழகியதால் அது கூண்டை விட்டும் நகரவில்லை, பறக்கவும் இல்லை. நீங்களும் இந்த உலக வாழ்க்கையில், மனதைக்கொண்டு வாழ்ந்து பழகிவிட்டு, உண்மையை நோக்கி யோகத்தின் வழியாக பயணிக்க தயங்குகிறீர்கள்.

மனிதனின் இயல்பும், பிறவியின் நோக்கமும் தன்னை அறிவதுதான். அதை விட்டு விலகிவிடலாமா? இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை. 

வாழ்க வளமுடன்

-