Why the social norms is never changes based on rich, poor and middle classes?
பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?
பதில்:
ஏதோ பொருளாதார நிபுணருக்கு அனுப்பிவைக்க வேண்டிய கேள்வியை என்னிடம் அனுப்பிவிட்டீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அவர்கள் மிக தெளிவான, துல்லியமான, உலகியல் நிலைப்படியும், தற்கால சூழ்நிலைப்படியும் புள்ளிவிபரங்களோடு கூடிய விரிவான பதிலை அவர்கள்தான் தரமுடியும். என்னளவில் பார்வைகளும் அனுபவங்களும் மாறும் என்பதே உண்மை. மேலும் யோகத்தில் ஆழ்ந்து அதில் பயணிப்பவர் பார்வை ஆழ்ந்து செல்லக்கூடியதுதான் என்றாலும், அக்கருத்தை சொல்லும் பொழுது, எதிர்தரப்பு எதிர்பாராத பதிலாக அமையும், அதனால் இவரிடம் போய் ஏனடா இதைக்கேட்டோம் என்று வருந்துமளவுக்கு, முகத்தினை திருப்பிக்கொள்ளும் அளவுக்கு, வேறொடு பிரச்சனை எழுமளவுக்கு இருக்கும். ஏதோ முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.
பணக்காரன், ஏழை, நடுத்தரவர்க்கள் என்பதெல்லாம் விதி அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பணக்கார வீட்டில், பணக்காரனுக்கு மகனாக / மகளாக பிறந்ததால் மட்டுமே அவர் பணக்காரர் இல்லை. அவரின் வாழும் முறைதான் அந்த தகுதியை நிர்ணயிக்கிறது. ஒரு பணக்காரர் தீடீரென்று பணம், பொருள், சொத்து இழந்தும் விடுகிறார் அல்லவா? அதுபோலவே ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், அந்த சூழலை மாற்றிட உயர்ந்த படிப்பு படிக்க முயற்சிக்கலாம், அடிப்படை கல்வி போதுமென வேலைக்கு செல்லலாம். படிப்பே தேவையில்லை என்று திறமையை வைத்தும் உழைத்து முன்னேறலாம் அல்லவா? அடுத்ததாக, நடுத்தர வர்க்கமும் ஒரே வேலை, தொழில், பரம்பரை நிலை என்பதெல்லாம் மாற்றி, என்ன செய்தால், எப்படி செய்தால், உயரலாம், முன்னேறலாம், மேம்பாடு காணலாம் என்று சிந்தித்து, ஆராய்ந்து தகுந்த காலத்தில் நல்ல நிலையை அடையலாம் அல்லவா?
இப்படியான நிலை இருக்கும் பொழுது பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லுவது முறையாகாது. அவரவர் அளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், வெளியில் தெரியாது. நீங்கள் ஒரு பணக்காரனாக இருந்தால் இந்த கேள்வியே கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. ஏழையும், நடுத்தரவர்க்கமும் தான் இப்படியான புலம்பலிலும், சிக்கலிலும் இருக்கிறார்கள். பணக்கார்களை நீங்கள் நுணுகி பார்க்கவேண்டும். அவர்களிடம் பொதுவாகவே, அநாவசிய செலவு என்று இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அளவு வைத்துக்கொள்வார்கள். திட்டமிடுவார்கள். லாபமும், வருமானமும் வருமா? என்று சிந்தித்துத்தான் ஒன்றை தொடங்குவார்கள். இழப்பை சிறிதளவும் ஏற்க மாட்டார்கள். தானமாக கொடுத்தாலும் அதில் ஓர் அளவும் கணக்கும் இருக்கும். இத்தகைய குணங்கள் ஏழையிடமும், நடுத்தரவர்கத்திடமும் உண்டா?
இன்றைக்கு இருக்கு, நாளை என்பதை நாளைக்குப் பார்க்கலாம் என்றுதான் ஏழையும், நடுத்தரவர்க்கமும் இருக்கும். தன்னிடம் இருப்பதை வாறி இறைக்கும் மனநிலையோடுதான் இருப்பார்கள். அது நல்ல உயர்ந்த நிலைதான் ஆனால், நீங்கள் தன்னளவில் ஏன் கஷ்டத்தை ஏற்கவேண்டும்? அப்படியான அவசியம் என்ன? அவரெல்லாம் உழைக்காமலேயே சம்பாதிக்கிறான், நான் இப்படியாக அவதிப்பட வேண்டியுள்ளது என்று மற்றவரை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்? இது உதாரணங்களே! இதுபோல இன்னும் நிறை பேசிக்கொண்டே. எழுதிக்கொண்டே போகலாம்.
ஏழைகளும், நடுத்தரவர்க்கமும் உழைக்கத் தயாரானவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மற்றவர்களுக்கு உதவும் மனநிலையும், பிறருக்காக வருந்தும் மனநிலையும் பெற்றவர்கள். ஆனால் தன்னளவில் தன்னை உயர்த்திட ஏனோ தயங்குகிறார்கள். அதை மாற்றி வாழ்வில், தொழிலில், வேலையில், வியாபாரத்தில், உழைப்பில் வெற்றி பெற்று, பொருளும் செல்வமும் பெறவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஐயா, என்னளவில் எனக்குத் தெரிந்த கருத்தைத்தான் முன்வைத்திருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு. நான் தீர்வு தந்தாக என்னிடம் வாளை சுழற்றவேண்டாம். வாள் சண்டைக்கு நான் தயாரில்லை. கருத்துக்களில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விலகிக் கொள்ளுங்கள். தவறு இருக்குமானால் நானே திருத்திக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.
வாழ்க வளமுடன்
-