Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?
இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம், புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம், புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?
பதில்:
வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.
யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.
வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.
குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!
வாழ்க வளமுடன்
-