How long we need to learn yoga for completeness? and doing teaching service too?
யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!
பதில்:
எல்லோருக்கும் பயன் தரக்கூடிய நல்ல கேள்வி என்றே கருதுகிறேன். ஆனால் இந்தபதிலை எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற ஐயம் எனக்குண்டு. என்றாலும் விளக்கம் தருவதை என் கடமையாக கருதுகிறேன். இதை என் அனுபவங்களில் இருந்தே தருவதால், சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் அனுபவத்தைத் தவிர சிறந்த ஆசான் யாருளர்? என்றுதான் பொதுவாக சொல்லுவார்கள்.
ஒவ்வொரு யோகசாதனை அமைப்பிலும் குறிப்பிட்ட கால வகுப்பும், பயிற்சியும் உண்டு. வேதாத்திரியத்தில் கிட்டதட்ட ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்குள்ளாக, அடிப்படை பயிற்சி முதல் தொடங்கி நிறைவான பயிற்சி பெற்றுவிடலாம். தான் கற்ற அந்த மையத்தில் மட்டுமே, பிறருக்கு சொல்லித்தரும் ஆசிரியாராக தகுதி பெற்றுவிடலாம். எனினும் மற்ற மையங்களுக்கோ, பிற ஊர்களுக்கோ, நாடுகளுக்கோ நீங்கள் ஆசிரியராக செல்லவேண்டும் என்றால், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் சேவை அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இது கொஞ்சம் முன்னெ பின்னே என்று காலமாறுபாடு இருக்கலாம்.
வேறு சில யோக அமைப்பில், அடிப்படை பயிற்சி கற்றுத்தேர்வதற்கே, மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் ஆகிறது. அப்படியானால், பயிற்றுனர் ஆவதற்கும், ஆசிரியராவதற்கும் எத்தனை ஆண்டுகள் ஆகலாம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.
உங்களின் வளர்ச்சியில், நீங்கள் எந்த அளவுக்கு உயர்வு பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. வெறுமனே சான்றிதழையும், பட்டயத்தையும் பெற்று அடுக்கிக்கொண்டே வருவதில் பயனில்லை என்பதை நாம் அறிவோம்தானே?! அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை முதலில், பெற்று, கற்று உங்களை முழுமை செய்து கொள்ளுங்கள். யோகத்தின் வழியாக, தனி மனிதனாக, உங்களை நீங்கள் உணர்ந்து நிறைவு செய்வதுதான், முதலாவதான நோகம். மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பது, விருப்பத்தின் வழியாக வருவதுதானே தவிர, கட்டாயம் ஏதுமில்லை.
மிக முக்கியமாக, நீங்கள் உண்மையாக அறிந்து உணராத, முழுமைப்பெறாத ஒன்றை எப்படி பிறருக்கு சொல்லமுடியும்? நீங்கள் அறிந்த, கற்றுத்தேர்ந்த வார்த்தைகளால் மட்டுமே பிறருக்கு பகிர்வதில் என்ன விளக்கம் தரமுடியும்? உங்கள் அளவிற்கு, அதே அளவில் அவர்களும் கற்றுத்தேர்வார்கள் என்பது என்ன நிச்சயம்? இந்த கேள்விகளை நீங்களே கேட்டு அதற்கு பதிலை கண்டுகொள்ளுங்கள். இந்த விளக்கத்தை, ‘காணாத பழச்சுவை அறிக’ என்ற தலைப்பில் கவிதை விளக்க நூலாக எழுதியுள்ளேன். ஒரு பழம் இருக்கிறது. அதுகுறித்தான, வடிவம், தோற்றம், சுவை, மணம் எல்லாமே உங்களுக்கு தெரியும், இந்த விபரங்களை நீங்களே படித்தீர்கள், அந்த பழத்தை ருசித்து சாப்பிட்டவரும் சொன்னார், அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால், நீங்கள் அந்த பழத்தை பார்த்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை, ருசி பார்த்ததும் இல்லை. இந்த நிலையிலே நீங்கள் எப்படி, மற்றவர்களுக்கு அந்த பழம் குறித்து சொல்லுவீர்கள்?!
பொதுவாக உண்மை விளக்கம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் நாம் காலம் நிர்ணயிக்க முடியாது. அதை உங்களின், ஒவ்வொருவரின் கர்மா என்ற வினைப்பதிவும், அதன் களங்கள் தீர்ப்பதும், யோகத்தில் அவரவர்களுடைய முயற்சியும், பயிற்சியும், ஆராய்ச்சியும், தெளிவும் முடிவு செய்யும் என்பதுதான் உண்மையானது.
வேதாத்திரி மகரிஷியிடமே, இந்த சந்தேகம் குறித்து கேட்டிருக்கிறார்கள். ‘உண்மை விளக்கம் பெறாத நாங்கள், எப்படி பிறருக்கு தீட்சை தரமுடியும்?’ என்று அன்பர்கள் கேட்டதற்கு, மகரிஷி அவர்கள் ‘ஒரு கையில் இறைநிலையை பிடித்துக் கொள்ளுங்கள், மற்றொருகையால் என்னை பிடித்துக் கொள்ளுங்கள், போதுமே’ என்று பதில் தருகிறார். தீட்சை என்ற நிலைக்கு வேண்டுமானால் இது போதுமானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் மெய்ப்பொருளின் உண்மை விளக்கம் தருவதற்கு, நீங்கள் அதை உணர்ந்தறியாமல் தரமுடியாது என்பதும் என்னுடைய கருத்து. ஆனால் உங்களுக்கு, உங்களால் அது முடியுமானால், பிறருக்கு தருவதில் குறையில்லை. தாராளமாக நீங்கள், பயிற்றுனராக, ஆசிரியராக, அதனினும் மேலான நிலையிலும் தொடரலாம். அது உங்கள் விருப்பமே!
அப்படியானால், இதில் உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பீர்கள். இங்கே அதை எழுதினால் அது ‘சுயபுராணமாக, தற்பெருமையாக’ மற்றவர்கள் கருதிவிட வாய்ப்புள்ளது. என்னை நேரில் சந்தித்து கேளுங்கள். சொல்லுகிறேன்.
வாழ்க வளமுடன்
-