How the yogi can understand the simply human problems and life struggles?
மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?
பதில்:
இதே கேள்வியை, இப்போது மட்டுமல்ல, எக்காலத்திலும் வாழும் மக்கள், அவர்களை வாழ்விலும், தரத்திலும், பிறவியிலும் உயர்த்த வழிகள் சொல்லும் உயர்ந்த யோகிகளை, ஞானிகளை, மகான்களை பார்த்து அப்படித்தான் கேட்கிறார்கள். இனிவரும் காலங்களில் வெகு சிலர் மட்டும் கேட்பார்கள். ஏனென்றால், இப்போது உலக அளவில் நல்ல ஆன்மீக முன்னேற்றம் வளர்ந்து பரவியுள்ளது என்பதே உண்மை.
குரு மகான் வேதாத்திரி மகரிஷியிடமும், இதேபோலான கேள்வியை, வெளிநாடுகளிலும், நம் இந்தியநாட்டின் நகரங்களிலும் அவரின் ஆன்மிக சொற்பொழிவும், மனவளக்கலை பயிற்சியும் அளிக்கும் காலங்களில், அவரிடமே நேரடியாக கேட்டிருக்கிறார்கள். 1986 ம் ஆண்டுகள் வரையிலும், அவர் ஆறு மாதங்கள் உலகநாடுகளில் ஆங்கில மொழிவழியான பயிற்சிகளும், டெல்லி, மும்பை போன்ற இந்திய நகரங்களிலும் பயிற்சியை வழங்கிவந்தார். அதன்பிறகுதான் நிலையாக, ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் இருந்தே தன் பயிற்சிகளை வழங்கிவந்தார்.
‘ஒரு யோகியாக, எல்லாவற்றையும் விடுத்து, தனித்து வாழ்கின்ற ஒருவருக்கு, எங்களுடைய கஷ்டங்களெல்லாம் எப்படி தெரியும் என்றுதான் அன்பர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள். நான் ஒன்றும் நேரடியாகவே யோகியாக பிறக்கவில்லையே. உங்களைப்போலவே நானும் பிறந்து வாழ்ந்து, வாழும் பொழுதே குடும்ப கஷ்டங்களை அனுபவித்து, கல்வி படிக்க முயன்று முடியாமல், வேலை பழகி, இரவும் பகலும் உழைத்து, என்னளவில் பணம் சம்பாதித்து, இறை என்பது என்ன? ஏன் இந்த கஷ்டம்? என்ற கேள்விக்கு விடைதேடி அலைந்து, திரிந்து, யோகம் கற்றுக்கொண்டேன். ஒருவேலை பார்த்தால் போதாது என்று, கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வேலை பார்த்து சம்பாத்தியம் பெற்றேன். பார்க்கும் வேலையிலும் கிடைத்த மனம் ஒவ்வாத பிரச்சனைகளை சமாளித்தேன். சொந்தமாகவும், குழுவாகவும் தொழில் துவங்கி நடத்திய அனுபவமும் கண்டேன், அதில் நல்ல உயர்வும், தீடீர் நஷ்டமும் கூட உண்டுதான். இதற்கிடையில் திருமணமும் செய்துகொண்டேன். அதுவும் ஒன்றல்ல இரண்டு. அதில் கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப பிரச்சனைகள், வருத்தம், கவலை, மகிழ்ச்சி எல்லாம் உண்டு. வறுமையும், செழிப்பும், வேலையும், வேலையின்மையும், உழைப்பும், அதற்கேற்ற உயர்வும், உதவியும், ஏமாற்றமும், தாழ்வும், பழிவாங்கப்படுதலும் இப்படியாக எல்லாமும் நானும் அனுபவித்திருக்கிறேன்’ என்றுதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னுடைய பேச்சிலும், எழுத்திலும், கவிதைகளிலும் இத்தகைய குறிப்பை அவர் பதிவும் செய்திருக்கிறார்.
இதைவிட வேறென்ன வாழ்க்கை குறித்த அனுபவம் வேண்டும்? சொல்லப்போனால் நம்மையும் விட கொடுமையான வாழ்க்கை அனுபமாக அல்லவா இருக்கிறது? நாம் ஏதோ பராவாயில்லையே என்றுதான் நமக்குத் தோன்றும். பொதுவாக சொல்லுவார்கள் அல்லவா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்று, அதுபோல பார்ப்பதற்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அக்கரைக்குச் சென்றால்தான் அங்கேயும் இதேபோல வறட்சியும் உண்டுதான் என்று தெரியவரும். எப்போதும், யாரும், எவரும் எடுத்த எடுப்பிலேயே நீதி போதனை செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனமே அவர்களை தண்டித்துவிடும் என்பது இயற்கை நீதி. வாழ்ந்து கெட்ட மனிதர் என்றொரு சொற்றொடரும் நாம் அறிவோம். அப்படியான வாழ்க்கை அனுபவத்தை பெற்றவர்தான் நமக்கு வழிகாட்டவும் முடியும். இப்படிப்போகாதே, பாதையில் முட்கள் இருக்கிறது என்று யாராவது போதனை செய்தால், நீ உன் வேலையைப்பார், எல்லாம் எனக்குத் தெரியும் நீ சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த முட்பாதையில் கால்வைத்து நடப்பீர்களா? ஆனால் அப்படித்தான் இந்த உலகில் மனிதர்கள் பயணிக்கிறார்கள்.
ஆனால், உண்மையான ஞானியும், யோகியும், மகானும் ‘நான் சொல்லுவதை கடைபிடியுங்கள்’ என்று கட்டாயப்படுத்தவே மாட்டார்கள்.
வாழ்க வளமுடன்
-