கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?
பதில்:
பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.
இப்போதும் கூட அஷ்டாங்க யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார்.
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.
ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு.
அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.
வாழ்க வளமுடன்
-