Does a dead soul leave immediately? Where is it going?
இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?
பதில்:
கருவிலே தொடங்கிடும் நம்முடைய உயிரின் பயணம், பிறந்து வாழ்கின்ற காலமுழுவதும் கூடவே பயணித்து, குறிப்பிட்ட காலத்தில், வாழ்நாளின் முடிவில் உடலை விட்டு பிரிந்துவிடும். இது இயற்கையின் நியதியாகும். எந்த மாற்றத்திற்கும் உட்பட்டதல்ல. இது எல்லா ஜீவன்களுக்குமே உரித்தானதுமாகும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, ‘இது இயற்கையின் நீதி. இதில் தப்பித்தோர் யாருமில்லை. ஒரு நூறாண்டு என்று எடுத்துக்கொண்டால், அன்று வாழ்ந்தவர்கள் இன்று இல்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நூறாண்டுகளில் இருக்கப்போவதும் இல்லை’.
நம்முடைய உடல், உயிர், மனம் கூடவே இன்னொன்றான ஆன்மா (ஆத்மா) இதில் நாம் யார்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்த நாம் யார்? என்று நான் சொல்லுவதை விட, ‘நான் யார்?’ நீங்களே உங்களுக்குள்ளாக கேட்கும் பொழுதான் அங்கே உங்களுக்கான ஆராய்ச்சி தொடங்கும். எனவே அதில் நான் குறுக்கே நிற்கப்போவது இல்லை. ஆனால் நாம் உயிர் அல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.
‘ஆனால் நாம் உயிரால்தானே வாழ்கிறோம்’ என்று சொல்லுவீர்கள். ஆம் அது உண்மைதான். நாம் + உயிரால் = வாழ்கிறோம். இங்கே நாம் தனித்து நிற்பதை அறிவீர்களா? உயிரால் வாழ்கிறோம்,. உயிரில்லையேல் நாமும் இல்லை. அப்படியென்றால் நாம் யார்? அதுதான் ‘நான் யார்?’ என்ற கேள்வியில் கிடைப்பதாகும்.
உயிர், தினமும் நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் காலையில் இருக்கும் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சோர்ந்துபோய், களைத்து உறங்கிவிடுகிறோம். சிலர் மயக்கமே அடைந்துவிடுகிறார்கள். அதை சரிசெய்யவே, காற்று, தண்ணீர், உணவு, பூமியின் மையப்பகுதியில் இருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு உதவுகிறது. என்றாலும், ‘ஒரு நாள் என்பது உயிரை அறுத்தெறியும் வாள்’ என்றுதான் ஆசான் திருவள்ளுவர் தன் குறள் வழியாக சொல்லுகிறார். அதுவும் உண்மைதான்.
வாழ்நாளின் காலம் முடிந்துவிட்டால், காலன் வந்துவிட்டான் என்று சொல்லுவார்கள். வடநாட்டில் காளி என்றும் சொல்லுவார்கள். உயிர் உடனடியாக நம் உடலை விட்டு வெளியேறிவிடும். உயிரின் தன்மை எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது. உடனடியாக வெளியேறி, உடலுக்கு அப்பாலுள்ள, விண் துகள்கள் களத்தோடு இணைந்துவிடும். ஏன்? வெளியே விண்ணாக (ஆகாஷ்) இருப்பதுதான் உடலளவில் உயிராக இருக்கிற உண்மை அறிவீர்களா? மற்றபடி உயிர் எங்கேயும் போய்விடுவதில்லை.
என்ன? ஏதேனும் என்னோடு வாள் சுழற்ற தயாராக இருக்கிறீர்களோ? பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்
-