Please explain the good, bad and problems on the trick of body to body transformation!
கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?
பதில்:
இன்னமும் உங்களுக்கு இந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கும் ஆசை தீரவில்லை போலிருக்கிறதே? நல்லவேளையாக எப்படிச் செய்வது என்று என்னிடம் கேட்காமலிருப்பது குறித்து மகிழ்கிறேன். அடுத்த கேள்வி அதுவாகவே இருந்தாலும் இருக்கலாம்தானே? யார் கண்டது? இப்பொழுது இந்த கேள்விக்கு வரலாம், முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.
என்னுடைய ஆரம்ப நாட்களில், வேதாத்திரிய யோகத்தில் இணைவதற்கு முன்பாகவே கூட, சித்தர்களின்பால் நான் ஆர்வமோடு இருந்தேன். இதற்கு காரணமாக என்வீட்டில், பரணில் மூட்டைகட்டி வைத்திருந்த, என் தந்தைவழி தாத்தாவின் நூல்கள் உதவின. என்வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறை, ஏனோ எனக்கு யோகத்தின்மேல் ஏற்பட்டது. மேலும், நகரில் இருந்த நூலகமும், உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைத்த நூல்களும் உதவியது. ஒரு சிறிய கிழிந்த துண்டு காகிதத்தைக்கூட படிக்கக்கூடிய ஆரவம் மிகுந்த காலம் அது. அப்படியாக, பதினென்கீழ்கணக்கு சித்தர்கள் முதலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி என்று பலரையும் தெரிந்துகொள்ள நூல்கள் பல கிடைத்தன.
கூடுவிட்டு கூடுபாயும் வித்தை குறித்தும் நான் அறிந்தேன். சித்தர் பெருமகான் திருமூலர், காட்டுவழியே செல்லும் பொழுது, மேய்ப்பனை இழந்த மாடுகள் வீடுதிரும்பாமல் இருந்தபொழுது, இறந்து போன அந்த மேய்ப்பனின் உடலில், தன்னுயிரைப் பாய்ச்சி, மேய்ப்பனாக மாறி, அம்மாடுகளை வீட்டிற்கு வழிநடத்தி உதவியதாக படித்திருக்கிறேன். சித்தர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காகவே இவ்வித்தையை செய்திருக்கிறார்கள். பேரதிசயமாக இருந்ததும் உண்மை. இது எப்படி என்பதுதான் அந்த 14 முதல் 17 வயதில் எனக்கு அறியமுடியவில்லை. 18 வயது நிறைவில்தான் ‘வேதாத்திரிய தீட்சை’ பெற்றேன். அந்த வயதிலே ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' மையமாகக் கொண்டு கதைகள் கூட எழுதினேன் என்றால் மிகையில்லை. ஏதேனும் சில நேரம், நானே வேறு யாராகவோ இருப்பதாகவும், என்முகத்தை நானே வேறு ஆளாக கண்ணாடியில் பார்ப்பது வரையிலான கனவுகள் கூட கண்டதுண்டு. ஆனால் அந்த கனவுகளின் உண்மை நான் மட்டுமே அறிவேன்.
கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில், இறந்த உடலில் புகுவது என்று சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உயிர் பிரிந்த உடலில் எல்லாமே இறந்து கொண்டே இருக்கையில், அதை மீண்டும் புதுப்பிப்பது இயற்கைக்கு முரணானது. (உடனே வாளை தூக்கி சண்டை போடவேண்டாம்). அப்படியானால், உயிரோடு இருக்கும் ஒரு மனிதனோடு கலக்கமுடியுமா? முடியும். அதிலும் சிக்கல் உள்ளது. அந்த உயிர் தனித்தன்மையாக இருந்தால், கூடுவிட்டு கூடுபாயும் நம்மை ஏற்றுக்கொள்ளாது. பிறருக்கும், சமூகத்திற்கும், உலகுக்கும் நன்மை தரதக்க வகையில் இதை செய்யலாம் என்பது ‘சித்தர்களின் கருத்து’. தனிமனித, சுயநல, பறித்தல் நோக்கோடு இதைச் செய்தால், உங்கள் உயிர் வீணாகிவிடும். கவனம்.
முக்கியமாக, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை செய்வதென்றால், நீங்கள் உங்கள் உயிரை தனியே பிரித்துப் பழகவேண்டும். உயிரில் குறிப்பிட்ட அளவு பிரிந்து சென்ற உங்கள் உடல், மிகச்சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சியும் இங்கே நேரக்கூடாது. கிட்டதட்ட நீங்கள் இறந்தபோன தன்மைபோலத்தான் இருப்பீர்கள். அது உண்மை ஆகிவிடாமல் இருக்க கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உயிர்த்துகள் என்பது மிகமிக நுண்ணியது, சக்தி வாய்ந்தது. அதற்குரிய மதிப்பளித்து செயல்படுவது முக்கியம். கொஞ்சம் பிசகினாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உடலுக்கே மீண்டும் திரும்புவதில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.
எனவே, என்னைப்பொறுத்தவரை, இனிமேல் யாரும் ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' செய்யவேண்டியதும் இல்லை, அதை பழகிட வேண்டியதும் இல்லை' என்றே நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரில் கேட்கவும்.
வாழ்க வளமுடன்
-