கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அமைதியாக இருக்கும் பலர் தீடீரென்று வெடிப்பதுபோல நடந்துகொள்வது ஏன்? அதனால் எழும் பிரச்சனை என்ன?
பதில்:
உங்களுடைய கேள்வியில், அமைதியாக இருக்கும் பலர் என்பதை விடவும், அமைதியாக இருப்பதுபோல நடிக்கும் பலர் என்பதுதான் சரியானது ஆகும். உலகவாழ்வில், நன்கு கல்வி கற்றவர், சிந்தனையாற்றல் மிக்கவர், தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர், சுய சிந்தனை உள்ளவர், தற்சார்பு தன்மையில் வாழநினைப்பவர், தத்துவத்தை கரைத்து குடித்தவர் இப்படி பலரும், வெளித்தோற்றத்திற்கு அமைதியாகவே இருப்பார்கள். ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமா?’ என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருவதை தடுக்கமுடியாது. அவரைப்பார்க்கின்ற நாம், அவரை மதித்து அவரோடு நட்பு பாராட்டவே விரும்புவோம்.
‘என்னைவிட இவ்வளவு அமைதியாக இருக்கிறாரே, இவரோடு நாம் பழகிக் கொண்டால், நமக்கும்கூட அந்த அமைதியான பண்பு வந்துவிடும் அல்லவா?’ என்றுதான் நினைப்போம். பழகும் காலங்களில் கூட உங்களோடு, ஒரு வார்த்தைகள் பேசி நிறுத்திக்கொள்வார். நீங்கள் சொல்லுவதை எல்லாம் அக்கறையாக கேட்டுக்கொள்வார். அதாவது உங்களுக்கு அவ்வளவு மதிப்பு அளிப்பார், அப்படியாக காட்டிக்கொள்வார் என்பதுதான் உண்மை. நீங்கள் பழகுகின்ற அந்த காலம் முழுவதும் உங்களை எடைபோடுவார். ‘இவர் எப்படிப்பட்டவர்? எந்தெந்த விசயத்தில் இவர் பலவீனம்? இவரின் நல்லது என்ன? கெட்டது என்ன? இவரிடமிருந்து நமக்கு கிடைப்பது என்ன? லாபம் என்ன?’ என்று பல வகைகளில் கணக்குப்போட்டு, எடைபோட்டுக் கொண்டிருப்பார். இதெல்லாம் முடிந்தவுடனே, உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலும், ‘ஆமாய்யா, ஆனா இப்படி, அப்படி’ என்றவாறாக மாற்றுக்கருத்தை தெரிவிப்பார். அதை நீங்கள் கவனமாக செவிமெடுக்கவில்லை என்றால் ‘யோவ், உனக்கு எத்தனை தடவை, என்ன சொன்னாலும் தெரியாதாய்யா?’ என்று சினம் கொள்ளுவார். நாமும் இவ்வளோ அன்பாக பழகியவர், ‘நம்ம நல்லதுக்குத்தானே சொல்லுகிறார்’ என்று ஏற்றுக்கொள்ளவும் தயாராவோம். சரிதானே?!
இந்த மாதிரி நபர்களை எல்லாம், ரஜனீஷ் ‘பழைய கில்லாடிகள்’ என்று அழைக்கிறார். இவர் ஒருபோதும் மாறுவதே இல்லை. மாற்றிக்கொள்வதும் இல்லை. உலகில் நடத்தப்படுகின்ற பெரும்பாலான (யோகமுறை அல்லாத) பயிற்சி மையங்கள், இப்படியான ‘அமைதியாக நடிக்கும் நபர்களைத்தான்’ உருவாக்குகின்றன. சில வணிக மேம்பாடு பாடங்களின் கல்வி கூட இப்படியான பயிற்சியைத்தான் தருவதாக சொல்லுகிறார்கள். காரியம் ஆகும்வரை கையப்பிடி, காலைப்பிடி என்று செயல்படுவார்கள். இத்தகைய குணநலன், நடவடிக்கைகள் வெறுமனே பயிற்சியால் மாறுவதில்லை. ஏனென்றால் அவர்களின் மனம் அந்த அளவிற்கு திசைமாறி போயிருக்கிறது. கூடவே அவர்களுக்கான மாற்றத்தை ‘இந்த அளவில் போதும்’ என்று நம்புகிறார்கள். அவர்களுடைய வாழ்வில், ஏதேனும் ஒருநாளில், இதனாலேயே ஒர் பிரச்சனையை சந்திக்கும்பொழுதான் ‘நாம் ஏதோ தவறு செய்கிறோம்’ என்று உள்ளுணர்வாக உணர்வார்கள். அதுவரை நாம் சொல்லுவதை கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள். ‘எல்லாம் எனக்குத் தெரியும்மய்யா’ என்று விலக்கியும் விடுவார்கள்.
நாம் என்ன செய்யலாம்? இப்படியான, அமைதியாக நடிக்கும் நபர்களை, அடையாளம் கண்டு பழகவேண்டும். எடுத்த எடுப்பிலேயே நம்முடைய நல்லதை, கெட்டதை எந்த அளவிலும் அவர்களோடு பகிரக்கூடாது, நம் வார்த்தைகளில் கவனம் வைத்து பேசி, சிக்கிக் கொள்ளாத விழிப்புணர்வு வேண்டும். அது போதுமானது.
வாழ்க வளமுடன்
-