Why no one give a solution for my problems? How I can get it?
எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?
பதில்:
இது பொதுவான நிலைமைதான். மனிதர்களுடைய சிந்தனையும், செயலும், எதிர்பார்ப்பும் கூட ஒன்றாக இருந்துவிட நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனால் எழுகின்ற விளைவுகளும், பிரச்சனைகளும் தனித்தனியானவை தான் என்பது பிரபஞ்ச இயற்கை விதி என்றுதான் சொல்லவேண்டும். கூடவே ஒவ்வொரு தனிமனிதனிடம் உள்ளமைந்த, சமீபகால மக்கள் ஏற்றுக்கொள்ளாத, கர்மா என்ற வினைப்பதிவும் காரணமாக அமைந்து விடுகிறது.
இரண்டு நபர்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட, ஒரே வயது, ஒரே ஊர், ஒரே படிப்பு என்று பல ஒற்றுமைகள் இருந்தாலும் கூட அவர்களுக்கான பிரச்சனை என்பது, ஒரே மாதிரி இருப்பதே இல்லை. சிலர் பேசிக்கொள்ளும் பொழுது, ‘நான் நினைச்சேன், நீ சொல்லிட்ட’ என்று மகிழ்வோடு பாராட்டுவார்கள். அப்படியாக ஒருவர் நினைப்பதைக்கூட, பிறரால் சொல்லிவிட முடிகிறபொழுது, பிரச்சனை என்றால் மட்டும், தனித்தனியாகத்தான் பிறக்கிறது/ இருக்கிறது. மனிதனின் சிறப்பும் இதுவேதான்.
ஆனால் இதற்காக, ‘எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது' என்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சனைகள் பல இருந்தாலும், அவற்றை முதலில் ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லா பிரச்சனைகளையும் ஒரே தொகுப்பில், அடுக்கில் வைத்துக்கொண்டு புலம்பக்கூடாது. தீர்க்கமுடியாதது, தீர்க்க முடிந்தது, தீர்க்கவேண்டியது, விட்டு விலக்கவேண்டியது என்று அதில் வகைகளை பிரிக்கவேண்டியதும் அவசியம். நீங்கள் அகத்தாய்வு எனும் தற்சோதனை பயிற்சி குறித்த விளக்கம் பெற்றிருந்தால், அதை செய்யமுடியும். ஒரு அரைநாள், இதற்காக ஒதுக்கிக்கொண்டு, துரிய தவம் இயற்றி, அதன் நிறைவில், ஒரு காகிதத்தில் வரிசையாக, ஒவ்வொரு பிரச்சனைகளாக எழுதிக் கொண்டு, அதை பட்டியலிட்டு, சீர்தூக்கிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான மனக்குறை, இந்த பயிற்சியின் வாயிலாகவே தீர்க்கமுடியும், பிரச்சனைகளின் தாக்கம் குறையும் என்பது உண்மை.
மேலும், ஒரு குருவோ, மகானோ, ஞானியரோ, இதை விளக்கிக் கொண்டிருக்கும் நானோ, தனியாக, ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஒன்றை சொல்லுவதற்கு வழியில்லை. நீங்கள் அவர்களை நேரடியாக பார்த்து கேட்டால்தான் உங்களுக்கான தனியான ஆலோசனையும், தீர்வும் அவர்களிடம் இருந்து கிடைக்கும். அது இல்லாமல், யாருமே எனக்கு தீர்வு தரவில்லை என்று வருந்துவதில் பயனில்லை. ஆனால், பொதுவாக கிடைக்கும் செய்திகளில், எழுத்துக் கட்டுரைகளில், கவிகளில், உண்மை விளக்கங்களில், பேச்சுக்களில் கூட உங்களுக்கான தீர்வு அங்கே பொதிந்து மறைந்து இருக்கும். இது உறுதியான உண்மையே. ஆனால் நாம்தான் எதையுமே ‘தனி கவனத்துடன்’கவனிப்பதே இல்லையே? பிறகு எப்படி நமக்கான தீர்வு கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்களை ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு காரணமாக, சந்திக்கும், பேசும், நபர்கள் வழியாகக்கூட உங்களுக்கான தீர்வு கிடைக்கலாம். நாம் தான் அதற்கு தயாராகாமல், விழிப்பாக இல்லாமல் இருப்போம். கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், பல வழிகளில் அந்த உண்மையை, வழியை, கருத்தை, ஆலோசனையை பெறாமல் இழந்திருப்போம்.
எனவே உங்களுக்கான தீர்வு கிடைக்க, தீர்வைப் பெற வழிகள் மூன்று உள்ளன. நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுங்கள், அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்யுங்கள், உங்களைச்சுற்றி நிகழ்வதை கவனியுங்கள். போதுமானது. நீங்கள் தெளிவு பெற, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்
-