கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தியானத்தில் ஆழ்ந்து நின்று உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், மற்றவர்களுடைய மனதை நாம் அறிந்துகொள்ள முடியுமா?
பதில்:
மிகுந்த ஆராய்ச்சி மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாம் இந்த உலகில் பிறந்தபொழுது நமக்கு மனம் இல்லை. ஏன் இல்லை? என்றால், மனம் என்பது அப்பொழுதுமுதல் கட்டப்பட்டு வருகிறது என்று அர்த்தமாகிறது. ஏனென்றால் மனம் என்பது பொருள் வடிவம் கொண்டதல்ல. அது அலைவடிவானது. அந்த அலைகள் மனமாக ஒரு மாற்றத்தை அமைத்துக்கொள்வதற்கு, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் தெளிவுபடுத்துகிறார்.
ஒரு மனிதருடைய, குழந்தைப்பருவமான அந்த மூன்று வயது முதல், அவனுடைய / அவளுடைய வாழும் காலம்வரை மனம் என்பது இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒருபோதும் அது இல்லாமல் போவதில்லை. தூக்கத்தில் கொஞ்சம் அமைதி அடைகிறது. கண்விழித்த உடனே மறுபடி எப்போதும்போலவே இயங்கவும் ஆரம்பிக்கிறது. இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. மனம் என்பது தனியாக இல்லை. மனம்தான் மனிதன், மனிதன் தான் மனம் என்றும் சொல்லலாம். மனம்+இதன்=மனிதன் என்றுதான் நாம் அறிகிறோம்.
அப்படியான அந்த மனம், மூன்று வயதில் வளர்ச்சி அடைந்தபிறகு, புத்தம் புதிதாக இருக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுமானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வளர்ச்சி அடைந்த மனம், நமக்குள்ளாக கருமையத்தில் இருக்கிற பதிவுகளை எடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவுகள் நம்முடைய, பரம்பரை வழியாக, வித்து மூலமாக, எங்கும் தடையில்லாமல் வந்துகொண்டே இருக்கிறது. உங்கள் மூலமாக, உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துக்கொண்டு போகும் என்பது உறுதியானது. இவ்வளவு ரகசியங்கள், உங்களுக்குள்ளாகவே, உங்கள் மனதிற்குள்ளாகவே இருக்கும் பொழுது, அதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், அடுத்தவருடைய மனதை அறிந்து கொள்ள விரும்புவது நியாயமா? சிந்தித்துப்பாருங்கள்.
'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்’ (குறள் 706)
என்ற ஆசான் திருவள்ளுவரின் திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தக்குறள் சொல்லும் வழியாக, அடுத்தவருடைய முகத்தைப்பார்த்தாலே, அவருடைய மனம் எப்படிப்பட்டது? அவருடைய மனதிற்குள்ளாக என்ன இருக்கிறது? என்பதை நாம் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியும். அப்படியிருக்கும்பொழுது, தியானத்தில் ஆழ்ந்து, பலகாலம் முயன்று அதன் வழியாக பிறருடைய மனதை அறிய முயற்சிப்பது வேண்டாத வேலைதானே?!
தன்னையறிந்த, மெய்ப்பொருள் உணர்ந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், யோகிகளும் கூட பிறருடைய மனதை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டதில்லை. அது மிகப்பெரிய சுமையாகிவிடும். உங்களுடைய கர்மா என்ற வினைப்பதிவே கட்டுக்கடங்காமல் இருக்கும் பொழுது, மற்றவர்களுடை கர்மா என்ற வினைப்பதிவையும் நீங்களே பகிர்ந்துகொள்ள நினைக்கிறீர்களா? அது அவசியம்தானா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
-