How we can identify the true Yogi, Mahan and Gnani? | CJ

How we can identify the true Yogi, Mahan and Gnani?

How we can identify the true Yogi, Mahan and Gnani?


ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?

பதில்:

வாழும் உலகில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை, தன்னையுணர்ந்த யோகிகள், மகான்கள், ஞானிகள் ஏராளம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்வியலில் ஏற்படும் மாற்றம், அவரவர்களுடைய தோற்றங்களையும் மாற்றிவிடும் என்பது உண்மை. கற்காலம் என்ற நிலையை எடுத்துக்கொண்டால், எல்லா மனிதனுமே ஆடையின்றி திரிந்தகாலம் உண்டுதானே? ஆனால் ஐந்தறிவு விலங்கினத்திற்கும், ஆறறிவான தனக்கும் உள்ள வித்தியாசத்தையும், உயர்வையும் அறிந்தபிறகு தன்னை, மனிதன் ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டான். அவரவர்களுக்கு அந்தந்த சூழ்நிலைகள் கொண்டும், செய்கின்ற வேலைகள் கொண்டும், ஆடைகளும் தோற்றங்களும் அமைந்துவிட்டன. காலங்காலமாக அவை மாற்றம் பெற்றுக்கொண்டே வருகின்றன.

எப்படிப்பார்த்தாலும், ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆனால் அவர்களுக்குள்ளாகவே இப்படி இருக்கவேண்டும் என்ற இயல்பான தன்மை உருவாகிவிடும். எந்தவகையிலும், அது உலகை, மக்களை பயமுறுத்துவதாகவே, தனிதன்மை வாய்ந்ததாகவோ, ஏமாற்றுவதாகவோ இருக்காது என்பதே உண்மையாகும்.

அந்தக்கால சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்கள் ஜடாமுடி என்ற, முடிச்சுமுடிச்சான முடிகள், என்றுமே வாறப்படாத, எண்ணை காணாத தலைமுடி, உயர்த்திக்கட்டிய முடி, அதில் உத்திராட்சம், விரிந்த தலைமுடி என்ற நிலையில் இருந்தார்கள். உடை என்று எடுத்துக்கொண்டால், கோமணம், சிறிய துண்டு, காவி உடை, எப்போதும் ஒரே ஆடை, அழுக்கடைந்த கிழிந்த ஆடை, தலைப்பாகை, உடலை போர்த்திய துணி என்றெல்லாம் உண்டு. இப்போதும் சிலர் அப்படி தோற்றமளிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அந்தக்காலத்தில், ஆடையில்லா நிர்வாணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போதும் சில சமணர்கள் அப்படி இருப்பதை காணமுடிகிறது.

அதுபோலவே, படர்ந்து நீண்ட தாடி, அழுக்கான தோற்றம், பாமரன், ஏழை, பிச்சைக்காரர போன்ற தோற்றத்திலும் இருப்பதுண்டு. ஆனால் இத்தகைய வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு, இவர் தன்னை அறிந்தவர்தான், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தவர்தான் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. பொதுவாகவே சராசரி மக்கள் மத்தியில், இப்படியான தோற்றங்களுக்கு மதிப்பு உண்டு. சிலவேளைகளில், மனநலம் குன்றிய மனிதர்களைக்கூட சித்தர், யோகி, மகான், ஞானி என்று நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். ஒரு பேசமுடியாதவர், தன்னிலை மறந்தவர், பித்துப்பிடித்த நிலையில் இருப்போரையும் போற்றுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்தான், இறைநிலை உணர்ந்தவர் என்றும் நம்புகிறார்கள். இந்த உலகை, பிரபஞ்சத்தை, இயற்கை, மெய்பொருளான உண்மையையும், தன்னையும் அறிந்த ஒருவர், பைத்தியக்காரனாக இருப்பாரா?

என்றைக்கு உலகில், தன் வயிற்றுப்பாட்டுக்கும், மக்களின் ஆதரவைப் பெறவும் ஏமாற்றலாம் என்று சிலர் நினைத்தார்களோ? அன்றைக்கே இதில் போலி உருவாகிவிட்டது. பெரும்பாலும் போலிச்சாமியார், பேசுவது புரியாது. ஏதேனும் பழைமையான நூலை வாசித்து அதில் உள்ளதை அப்படியே சொல்லுவார், அடிக்கடி தன்னை மறைப்பார், மௌன விரதம் என்று பேசா நோன்பு இருந்து, கேள்விகளை தவிர்ப்பார். பூஜை, யாகம் என்று அடிக்கடி மக்கள் சந்திப்பை தூரவைப்பார். அருகில் தன் நம்பிக்கையானவர்களை தவிர வேறு யாரையும் அண்டவிடமாட்டார். இன்னும் நிறைய சொல்லலாம் எனினும், அவர்களை குற்றம் காண்பதும், குறைகாண்பதும் நமது வேலையல்லவே?!

வெறுமையான தோற்றத்திலும், ஆடை அலங்காரத்திலும், தாடி மீசை முடி அமைப்புக்களிலும், சின்னங்களிலும், உருவங்களிலும் ஏமாறாதீர்கள். நேரடியாக, கேள்வி கேளுங்கள். அவராகவே எதையும் மேற்கோள் காட்டாமல், உணர்ந்ததை எளிமையாக, புரியும்படி சொல்லி விளக்குகிறாரா? என்று ஆராயுங்கள். வெறுமனே ஆலோசனை சொல்லுகிறாரா? என்பதையும் அறியுங்கள். பொதுவாகவே யாரையும் சந்தேகக்கண்கொண்டு பார்த்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பழகிக்கொள்வதே நல்லது. சராசரி மக்களில் சிலர், ‘வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்’ என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக சொல்லுவார்கள். நாம் அப்படியாக இருக்கவேண்டாமே!

வாழ்க வளமுடன்
-