How can newcomers approach elevated yoga in spiritual sadhana?
ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?
பதில்:
மிக நல்ல கேள்வியாக கருதுகிறேன். மிக நீண்ட விளக்கம் தரவேண்டிய நிலையிலும், சுருக்கமாக இங்கே காணலாம். இந்த உலகெங்கும் மக்கள் பரந்து நிறைந்து வாழ்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே, மதிப்பாக சொல்லவேண்டுமென்றால் நூற்று முப்பது கோடிக்கு மேலான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகமக்கள் தொகையை நீங்களே கணக்கிடலாம். இந்த கணக்கில் நாமும் இருக்கிறோம். சராசரியாக எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் நன்றாக, நிறைவாக, வளமாக உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் இல்லை என்றுதான் சொல்லமுடியும். ஏன்? என்று கேள்வி கேட்டால், ஏற்றத்தாழ்வுதான் வாழ்க்கையில் நிதர்சன உண்மை என்று பதில் தருவார்கள்.
ஏனய்யா, உலகில் எல்லோருமே மனிதர்கள் தானே? அப்படியானவர்கள் நன்றாக, நிறைவாக, வளமாக ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழமுடியாது? ஏன் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, குறைகளை உயர்த்தி வாழவைக்க முடியாது? இயற்கையோடு ஒன்றிணைந்த, முரண்பாடுகளற்ற வாழ்வை எல்லா வயதினரும் ஏன் கற்று, தனக்கும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் ஏற்ற நன்மையை பகிர்ந்து வாழமுடியாது? அந்த மாற்றத்தை ஏன் தரவும் முடியாது?
இந்த கேள்விகளுக்கு என்ன பதில் கிடைக்கும் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்தான். ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பலப்பல சிக்கல்கள் இருக்கின்றன. உலகில் மக்கள் மேல் அக்கறையுள்ள, பெரும்பாலான எல்லா தலைவர்களும் இந்த விளக்கங்களோடுதான், மக்களிடம் சொல்லி அவர்களின் ஆதரவில், ஆட்சிப்பணிக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த ஆட்சிக்காலத்தில் செயலிழந்து விடுவதுபோல ஒரு தோற்றம் வந்துவிடுகிறது. நிஜத்தில் ஒரு மாற்றமும் நடப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது.
இந்த நிலையில்தான், தன்னையுணர்ந்த ஞானிகள், மகான்கள், யோகியர்கள் உதவ வருகிறார்கள். தலைவர்களுக்கு அல்ல, எளிய சராசரி மக்களுக்காக. வேதாத்திரி மகரிஷி ‘உலக சமாதானம் வேண்டும் என்றால், முதலில் ஒவ்வொரு தனிமனிதனும், அவனுள்ளாக திருத்தம் பெற்று மன அமைதியும் நிறைவும் பெறவேண்டும்’ என்று சொல்லுகிறார். சமீபகாலமாக அந்த மாற்றம், மனவளக்கலை வழியாக மாற்றம் பெற்று வருகிறது. என்றாலும்கூட, உலகம்முழுதும் உள்ள மக்களுக்கு, எண்ணற்ற பயிற்சி மையங்கள் அவசியமாயிற்றே? அந்த அளவில் ஆசிரியர்களும் அவசியமாயிற்றே? அந்தவகையில்தான் பலப்பல யோக அமைப்புக்கள் உருவாகி மக்களுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில்தான் சில, ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளே புகுந்து, மக்களை யோகம் என்ற பெயரில், பணமும் பொருளும் பறித்து, பெயரும் புகழும் பெற நினைக்கிறார்கள்.
இத்தகைய ஏமாற்றுப்பேர்வழிகள் குறித்த உண்மைகள் உடனடியாக உலகெங்கும் பரவி, ‘ஆன்மீகத்தை பரப்பும் யோகிகள், மகான்கள், ஞானிகள் எல்லோருமே ஏமாற்றுக்கார்கள்’என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதையே மற்றவர்களுக்கும் சொல்லி, உண்மையான ஆர்வம் உள்ளவர்களையும் தடுத்துவிடுகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்களுக்கு பக்தியும், யோகமும் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அப்படியானால் அந்த வகையிலாவது இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்களா? என்றால், அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள். மனிதர்களுக்குள் பிணக்கு, சண்டை, சச்சரவு என்று நிம்மதி இழக்கிறார்கள். பணம், பொருள், செல்வாக்கு, புலன் இன்பம் என்ற நான்கில் சிக்கித்தவிக்கிறார்கள். தினந்தோறும் உடலையும், மனதையும் இழந்து வாழ்வின் நோக்கம் மறந்து துன்பத்தில் வருந்துகிறார்கள். ஒவ்வொரு தனி மனிதனின் பிரச்சனையும், சமூகத்தின் மொத்த வாழ்வியலில் பிரதிபலிக்கிறது. பிறகு அது உலகெங்கும் பரவிவிடுகிறது. நவீன தொழில்நுட்பங்களால் சுருங்கிய உலகம், இதற்கு நீண்ட நேரத்தை எடுத்துகொள்வதில்லை. இதற்கான உதாரணங்களை நீங்களே அறிவீர்கள்.
இத்தகைய தனிமனித போக்கிலிருந்து, உங்களை விடுவித்து, மனிதனின் தற்கால பிரச்சனைகள், துன்பங்கள் இவற்றிலிருந்து விலகி, உண்மை விளக்கம் பெறவும், உடலை வலுவாக்கி, நோய்களில் இருந்து தடுப்பு பெறவும், வருமுன் காக்கவும் யோகம் அவசியம். பிறப்பின் உண்மையையை, மனிதனாக பரிணமித்த காரணத்தை அறிவதற்கு, ‘நான் யார்?’ என்ற கேள்வி வழியாக விளக்கம் பெற, யோகம் மட்டுமே உதவும். இதை அறியாமல், புரியாமல், தெரிந்துகொள்ளாமல் இந்த உலகில் வாழ்ந்து மடிவதால், யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. ஏற்கனவே பலகோடி கோடி மனிதர்கள் அப்படித்தான் வாழ்ந்து மடிந்தார்கள், மறைந்தார்கள். அவர்களின் வரிசையில் நீங்களும் ஏன் இணையவேண்டும்? பரிசோதித்து பார்க்கலாமே?
இரண்டறிவு ஜீவனான மண்புழுவின் பாதையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்துங்கள். அது வந்த பாதையில் திரும்பிப்போவதில்லை. தடையை கண்டு விலகி வேறு பாதையில்தான் முன்னேறும். ஆறறிவு ஜீவனான மனிதர்கள், வழியில் தடை இருக்கிறது என்பதற்காக, வீட்டிற்கே திரும்பிவிட முடியுமா? அங்கேயே வருந்தி உட்கார்ந்து விடவும் முடியுமா? இனி என்னுடைய எல்லாபாதையிலும் தடைகள் இருக்கும், எனக்கெதற்கு பயணம்? என்று தனக்குள்ளாக கேள்வி கேட்டு, தன்னை முடக்கிக் கொள்வானா? உண்மையையும் பொய்யையும் அலசிப்பார்த்து, உண்மை விளக்கம் பெற முடியாதவனா? உணவு சமைக்கும் அரிசியில் கல் இருக்கிறது என்றால், அரிசியையே, வாழ்நாள் முழுவதும் துறந்துவிடுவானா? நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.
வாழ்க வளமுடன்
-