Can I foreknow or guess our death? Any Idea?
நம்முடைய இறப்பை, மரணத்தை நான் முன்கூட்டியே அறிவதற்கு முடியுமா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய இறப்பை, மரணத்தை நான் முன்கூட்டியே அறிவதற்கு முடியுமா?
பதில்:
நம்முடைய இறப்பை, மரணத்தை முன்கூட்டியே அறிவதற்கு முடிந்தால், அப்படி தெரிந்து கொண்டால், அது ஒருவகையில் நல்லதுதான். அந்த இறப்பு, மரணம் வருவதற்கு முன்பாக நன்றாக அனுபவித்து வாழ்ந்து விடலாம். அந்த வாழ்நாளுக்குள்ளாக என்னென்ன தேவையோ அதை பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். வாழ்நாளுக்குப் பிறகு நம் குடும்பத்திற்கு, வாழ்க்கத்துணை, குழந்தைகள் நலம் விரும்பி செய்ய வேண்டியதையும் முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.
மேலும் நமக்கு என்னென்ன விருப்பமோ அதை பெற்றுவிடலாம். என்னென்னெ ஊர், இடம் பார்க்கவேண்டுமோ அதையெல்லாம் பார்த்து திருப்தி அடையலாம். கொடுக்க வேண்டியதை கொடுத்துவிடலாம். பெறவேண்டியதை பெற்றும் கொள்ளலாம். வரிசையாக பட்டியலிட்டு, எல்லாவற்றையும் முடித்துவிட்ட திருப்தியில் இறப்பை, மரணத்தை ஏற்றுக்கொள்ளவும் தயாராகலாம் தானே?! சரியா?
இதனோடு, இதெல்லாம் அப்படியே விட்டுவிட்டு போகப்போகிறோமே? என்ற கவலை எழாமல் இருக்குமா? முதலில் நம்முடைய கைபேசி, வங்கி கடன் வரவு அட்டைகள், அதன் உட்கடவுட்சொல், வங்கியில் இருக்கும் பணம், பங்கு வர்த்தகத்தின் செயல்பாட்டில் பணம், கார், பைக், விருப்பமான பொருட்கள் எல்லாவற்றையுமே இழந்துவிடுவோம், இனி யாருக்கோ போய்விடுமே என்ற பயமும் வருத்தமும் எழாமல் இருக்குமா? இறப்பை மரணத்தை ஏற்றுக்கொள்ளதான் விருப்பம் எழுமா? இல்லைதானே! இன்று ஒருநாள் விட்டுவிடு, இன்னும் ஒருவாரம் விட்டுவிடு, ஒருமாதம் விட்டுவிடு, ஒருவருடம் மட்டும் விட்டுவிடு என்று நாம் கேட்பதற்கும் வழியில்லை.
உங்களுடைய சோதிடம் வழியாக, மாரகாதிபதி சனி பகவான், அதன் இருப்பிடம், சுழற்சி, மாரகஸ்தானம் என்ற வகையில் கூட யூகிக்கலாமே தவிர, உண்மையும் உறுதியும் சொல்ல முடிவதில்லை. நோய்தாக்கம் முற்றி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தாலும்கூட, மருத்துவார்களால் இருப்பு, இறப்பு உறுதி செய்ய முடிவதில்லை. ஒரு நாள் தாங்காது என்று சொன்னால், பலவருடம் நின்று வாழ்வார். நாளைக்கே வீடு திரும்பலாம் என்றால் அவர் உலகைவிட்டே திரும்பிவிடுவார். இதெல்லாம் நம் குடும்பத்திலும் நிகழ்கிறது. வாழ்கின்ற சமூகத்தில் சம்பவங்களாகவும் நாம் அறிகிறோம் அல்லவா?
நீடூழி வாழ்க என்று பிறரை, மனம் விரும்பி வாழ்த்திடும், தன்னையறிந்த ஞானிகள், மகான்கள், யோகியர்கள் கூட இந்த உண்மையை அறிந்து கொண்டது இல்லையே. ஆனால் உடனே நீங்கள் மறுதலிப்பீர்கள். ‘உங்களுக்கு தெரியாது, இப்படி இந்த நாளில், இந்த நட்சத்திரத்தில், இந்த நேரத்தில், இன்ன இடத்தில், இந்த நோயால் நான் மரணிப்பேன் என்று சொன்ன சித்தர்களும், ஞானியர்களும் உண்டுதான். இன்னமும் இருக்கிறார்கள், நேற்று கூட ஒருவர் அப்படி சொன்னார் தெரியுமா?’ என்று சொல்லுவீர்கள். அப்படியானால் அந்த வித்தையை நீங்களும் கற்றுக் கொள்ளலாமே? இங்கே மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, நேரத்தை வீண் செய்யாமல் அவர்களை தேடிப்போய், அந்த வித்தையை கற்றுக் கொள்ளுங்கள். எனக்கும்கூட சொல்லிக் கொடுங்களேன்.
ஒரு மனிதனின் பிறப்பையும், இறப்பையும் இயற்கையானது என்றுமே ரகசியமாக வைத்திருக்கிறது என்பதால், நாம் முன்கூட்டியே அறிவதற்கு முடியாது, அதற்கு வழியும் இல்லை. ஆனால் நிச்சயமாக, பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு உண்மையானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதுபோல, ‘ஓவ்வொருவரும் திருப்பிப் போகும் பயணச்சீட்டோடுதான் வந்திருக்கிறோம். என்ன? அதில் தேதி குறிப்பிடப்படவில்லை’
என்றாலும் நமக்கு தெரியும் தானே? ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், 120 ஆண்டுகள் மனிதன் வாழமுடியும் என்கிறார்கள். அவ்வளவு முடியாவிட்டாலும், உயிரோடு இருக்கும் ஆண்டுகளில், அதை மனதில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்வதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்கவேண்டும். நீங்கள் பக்தியில் இருந்தாலும் சரி, யோகத்தில் இருந்தாலும் சரி. அதில் நீங்கள் பிறப்பின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்து அறிவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது அவசியமானதும் கூட.
நிலையாமை என்ற தலைப்பில், ஆசான் திருவள்ளுவர் சொல்லும் குறள் ( எண்-339) கவனியுங்கள்.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
வாழ்க வளமுடன்.
-