Why unable to complete and get the obstacles on action based on thought?
நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?
பதில்:
நினைத்த ஒன்றை செய்வது என்றால், தனி மனிதனாக இருக்கும் பொழுது, தனக்காக ஏதேனும் செய்து கொள்வது நிகழும், எனக்கு பிடிக்கும் அதனால் இப்படி செய்கிறேன் என்று சொல்லவும் முடியும். ஆனால் அது, உங்களுடைய அளவுக்குள் இருப்பதாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரையறை, வரம்பிற்குள் இருப்பதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதனாகிய நீங்கள், சமூகத்தின் அங்கம். உங்களுடைய எந்த ஒரு செயலும், நடவடிக்கையும் இந்த சமூகத்தின் வழியாக பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அதுதான் இயற்கையாகவும் உள்ளது.
உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள்ளே நீங்கள் எப்போதும், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். உங்கள் தாய், தந்தை, உடன்பிறந்தோர் அதை அனுமதிக்கலாம், சிலவேளை அவர்களும் கூட, உங்களிடம் ‘இப்படியெல்லாம் செய்யாதே, இது தவறு, திருத்திக்கொள்’ என்பார்கள். சில விருந்தினர்கள், சொந்தபந்தம் உங்கள் இல்லத்தில் வந்திருந்தால் கூட, உங்கள் நடவடிக்கைகள் பார்த்து, ‘இவன்(ள்) ஏன் இப்படி?’ என்று நினைத்துக் கொள்வார்கள். உங்கள் குடும்பத்தோடு உரிமை உள்ளவர்கள், உங்களைப்பற்றி மற்றவர்களிடம், திருத்தச் சொல்லி அக்கறை கொள்வார்கள். சிலர் நேரடியாக உங்களிடமே சொல்லவும் கூடும்.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும், சொல்வதும், செய்வதும் சிறப்பு’ என்று சொல்லுகிறார். உங்களுடைய எந்தஒரு சிந்தனை, செயல், வார்த்தை ஆகியன, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்துக் கொண்டால், எந்த தடையும் நேரப்போவதில்லை. நீங்கள் நினைத்ததை செய்வதற்கு சாதகமாக அமையும், மேலும் பிறரும்கூட இதில் துணையாக இருப்பார்கள்.
இதற்கு சரியான தீர்வு, முன்கூட்டியே விளைவு என்ன? என்று தீர்மானித்துக் கொள்வதுதான் நல்லது. இதை செய்தால் எனக்கு என்ன நிகழும்? இதனால் எனக்கோ, மற்ற யாருக்காவதோ தொந்தரவும், பிரச்சனைகளும் எழுமா? அது உடனடியாகவா? நீண்டநாள் கழித்து வருமா? இதில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா? இதன் தேவையும் அவசியமும் உண்மைதானா? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை தெளிவு செய்து கொள்ளலாம்.
ஒரு அலுவலகத்திலும், அரசு நிர்வாகங்களிலும் எந்த ஒரு முடிவும் உடனடியாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒருவேளை அப்படி செயல்படுத்துவதாக இருந்தால், ஏற்கனவே சில நிபுணர்கள் குழு அதை ஆராய்ந்து முடிவு செய்திருக்கும் என்பதே உண்மை. திடீரென்று ஒன்றை பிறர் நமக்கு சொன்னால் கூட, திணித்தால் கூட நாம் அதை ஏற்க மறுப்போம் தானே? அதுபோலவே நீங்கள் சொன்னதை நினைத்ததை சொல்லமுடியாமலும், செய்யமுடியாமலும் போகலாம்.
இன்னொரு முக்கியமான காரணம், நீங்கள் நினைத்ததை செய்வதற்கு தகுந்த காலமா? என்பதை முதலில் ஆராயவேண்டும். சூழ்நிலையும் பொருத்தமாக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். இப்படி எல்லாவற்றையும், திட்டமிட்டு அலசி, ஆராய்ந்து பிறகு செயலாக்கம் செய்தால், நினைத்த ஒன்றை செய்வதில் வெற்றி உண்டு.
வாழ்க வளமுடன்.
-