Does the man born in this world really have a purpose?
இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?
பதில்:
இந்த உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகிற ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மனிதன் என்றால் ஆண் என்பதாக மட்டும் நினைக்கக்கூடாது. பெண்ணுக்கும் அத்தகைய நோக்கம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஆணைவிட பெண்ணுக்குத்தான் அந்த நோக்கம் இயற்கையாக அமைந்திருக்கிறது எனலாம். பெண் ஏற்கனவே இந்த இயற்கையோடு வாழ்பவளும், இயற்கையின் முழு இயல்பை தன்னகத்தே பெற்றவளும்கூட பெண் தான்.
ஒரு நோக்கம் என்பதை, பொதுவாக இக்காலத்தில் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? பேரும் புகழும் பெறவேண்டும், குறையாத வளமும், நிறைவான பணமும் வேண்டும் என்று சொல்லுவார்கள். ஒரு மனிதர் எந்தெந்த நிலையில் வாழ்ந்து பழகுகிறாரோ அந்ததந்த அளவில் நோக்கம் மாறும். அரசியலில் இருப்பவர் கட்சிக்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தலைவராக விரும்புவார். அலுவலத்தில் இருப்பவர், அந்த நிறுவனத்திற்கே தலைவராக விரும்புவார். நிறுவனம் வழி, தொழில், வியாபாரம் செய்பவர் உலகின் முன்னோடி நிறுவனமாக தன்னுடையது மட்டுமே இருக்கவேண்டும் என்று உயர விரும்புவார். இப்படி பலப்பல உண்டு.
ஆனால் இதெல்லாம் நிச்சயமானதுதானா? இதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது உண்மையிலேயே என்ன? பாராட்டும் புகழும் திருப்தியும் என்பது போதுமானதுதானா? ஒரு நொடியில், ஒரு நாளில் யாராவது வேறு ஒருவர், உங்கள்விட ஒரு படி முன்னேறினால் உங்கள் நிலை என்னவாகும்?! மேலும் தீடீரென்று உயர்த்தில் இருப்பவர், மறுநாள் இல்லை என்ற நிலை என்பதுதான் உலகில் நாம் பார்க்கிறோம். இதுநாள் வரை அவருடைய போராட்டம் என்னவாயிற்று? என்ன நிறைவான பலனை அடைந்தார்? நிஜமாகவே அவருக்கு என்ன கிடைத்தது? நிச்சயமாக அவர் நோக்கம், விருப்பம் நிறைவேற்றம் அடைந்ததா? குறையோடு போய்ச்சேர்ந்தாரா? திருப்தியாக இருந்தாரா? என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்?! யோசித்துப்பாருங்கள்!
ஆனால் இதெல்லாம் உலக வாழ்க்கை இயல்புதான், பொருள்முதல்வாத உலகில், நாம் உழைப்பதும் அதனால் பொருள்வளம் பெறுவதும் தேவையே. அதை விட்டு விலகமுடியாது. குரு மகான் வேதாத்திரியும் கூட இதையெல்லாம் விட்டுவிடு என்று சொன்னதே இல்லை. ஆனால் போதும் என்ற நிறைவான மன நிலைக்கு, வாழும் பொழுதே வந்துவிடு என்று சொல்லுகிறார். அந்த அளவிற்கு மேல், தேவைப்படும் பிறருக்கு பகிர்ந்தளித்து உதவுக என்று வலியுறுத்துகிறார்.
உண்மையில், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறப்பின் நோக்கம், தன்னை அறிவதுதான். இந்த இயற்கை அதைத்தான் நமக்கு உள்நோக்கமாக அமைத்திருக்கிறது. அதுதான் மனதில் இருக்கிறது, வெளியேவும் பிரகாசிக்கிறது. ஆனால் வளரும் காலத்தில் அது பலவகைகளில் சிக்கி மறந்துவிட்டது. உங்களுக்கு இது பிடிக்கும் என்ற ஒன்றை செய்தால், பிறகு உங்கள் மனமே ‘நான் கேட்டது இது இல்லையே’ என்று சொல்லிவிடும். இப்படி ஓவ்வொன்றாக எதை நீங்கள் விரும்பினாலும் அதில், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் திருப்தி ஏற்படுவதே இல்லை. உண்மைதானே? இல்லை நான் பொய்யாக சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?
நம்முடைய மனம் மிகப்பெரிய பேராற்றலின் ஒரு சிறுபகுதி. அதை வாழ்க்கையில் சிறிய சந்தோசங்களில் அடைப்பதில் முழுமை பெறுவதில்லை. மனதின் நோக்கம், தன்னையறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை. மனம்+இதன்=மனிதன் என்பதால், மனிதனாகிய நமக்கும் தன்னையறிவதுதான் நோக்கம். அதற்காகவேதான் பிறப்பும் நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது!
வாழ்க வளமுடன்
-