Why have a depression? Any best solution for it? | CJ

Why have a depression? Any best solution for it?

Why have a depression? Any best solution for it?


மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?

பதில்:

நாம் இந்த உலகில், மனதின் வழியாகவே வாழ்கிறோம். உலக இன்ப துன்பம் அடங்கிய எல்லாவற்றிற்கும் வாசல், நம்முடைய மனமே. நாம் வெளியே போவதற்கும், நமக்குள் ஏதேனும் வருவதற்கும் மனமே வாசலாக இருக்கிறது. நாம் வாழ்கின்ற இந்தக்காலத்தில், ஒவ்வொரு நாளும், உலக முன்னேற்றமும் புதிதுபுதிதாக வந்துகொண்டே, வளர்ந்துகொண்டே இருந்தாலும்கூட, நாம் எப்போதும் ஒரே நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதும் உண்மை. 

ஒரு தலைமுறை என்று எடுத்துக்கொண்டாலும் அது தொடர்கிறது. சராசரியான பார்வைக்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானல், தாத்தாவுக்கு அப்பா திறமைசாலி, அப்பாவுக்கு மகன் திறமைசாலி, மகனுக்கு பேரன் திறமைசாலி, பேரனுக்கு அவனுடைய மகன் திறமைசாலி என்று தொடராக மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் மனிதனும், அவனுடைய மனமும் அப்படியேதான் இருக்கிறது. இது, இந்த நிலை மாறிட வேண்டும் என்றுதான், யோகம் உருவானது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தி துணையானது. இந்த இரண்டிலுமே பலப்பல பொய்கள் கலந்து, மனிதர்களுக்கு நீண்டகாலமாக, எளிதில் நெருங்க முடியாதபடி தூரமாகிவிட்டது.

எனினும் அவ்வப்பொழுது மகான்கள், ஞானிகள் தோன்றி, உருவாகி, மக்களுக்கான மாற்றத்தை, மனதிற்கான மாற்றத்தை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் நோக்கமும் அதுதான். உலக சமாதானம் என்ற திட்டத்தை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் ஓரே ஆட்சியில் அமைந்து, உலக மக்கள் நலவாழ்வுக்கு, திட்டத்தை தந்து அதை பலவாறாக தன் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி வந்தார். அவர் எடுத்துக்கொடுத்த பணி இன்னும், நம்மைப்போன்ற வேதாத்திரியர்களால் தொடர்கிறது.

என்றாலும், இப்போது உங்களுக்கும், உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும், மனம் பாரமாக இருக்கிறதே?! அதை எப்படி சரி செய்வது? தீர்ப்பது? அதையும் யோசிக்கலாம். இந்த மன பாரம் என்பதை, இக்காலத்தில் மன நல மருத்துவர்கள், மன அழுத்தம் என்று சொல்லுகிறார்கள். பல்வேறு சிக்கல்களில் சிக்கி, பல்வேறு நினைவுகளின் தாக்குதலும், அதை நினைத்து வருந்துவதும் இத்தகைய மன அழுத்தத்திற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தமும் இருக்கும் என்பதே உண்மை. இதை தீர்ப்பதற்கு, மன நல மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?

மனதை இயல்பாக வைத்திருங்கள். நேற்று நடந்ததை, எப்போதோ முடிந்த ஒன்றை நினைக்காதீர்கள். மனதில் எழும் எண்ணங்களை பின்பற்றாதீர்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். தனிமையில் இருக்காதீர்கள், பாடல், இசை, நாடகம், சினிமா என்று நேரத்தை திசை திருப்புங்கள், பிடித்ததை சாப்பிடுங்கள். நன்றாக தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு, சில சத்து மாத்திரைகளையும், தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளையும், தந்து அக்கறையோடு கவனிப்பார்கள். (பொதுவான கருத்தாக சொல்லப்படுகிறதே தவிர, மனநல மருத்துவர்களை குறை சொல்லுவதாக கருதவேண்டாம்)

வேதாத்திரியும், இப்படியான அறிவுரைகளும், மருந்துகளும் தருவதில்லை. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே, மனதை புரிந்து கொள்க என்று, தவம் இயற்றச் சொல்லுகிறது.  மனதையும், அதில் எழுகின்ற எண்ணங்களையும் அறிந்து, புரிந்து, ஆராய்ச்சி செய்து, ஒழுங்குசெய்து கொள்ள அகத்தாய்வு எனும் பயிற்சியை தருகிறது. இந்த தற்சோதனை வழியாக, மனம் தன்னைத்தானே விரிந்து நோக்கிட வழி பிறக்கிறது, தேவையில்லாததை தானே திருத்திக்கொள்ள பழகுகிறது.

மேலும் எண்ணம் ஆராய்தலை முடித்து, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற அடுத்த இரு நிலை பயிற்சிகளையும் தந்து, நான் யார்? என்று ஆராயவும் சொல்லுகிறது வேதாத்திரியம்.

உங்களுடைய மன பாரத்திற்கும், மன அழுத்தத்திற்கும் முழுமையான, தெளிவான, சிறப்பான மருந்து ‘வேதாத்திரிய அகத்தாய்வு எனும் தற்சோதனை’ எனும் பயிற்சிதான் என்பதில் ஐயமில்லை!
வாழ்க வளமுடன்.
-