கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?
பதில்:
மனிதன் என்றாலே மனம்+இதன் = மனிதன் என்பதுதான் கருத்து. மனிதனையும், மனதையும் பிரித்துப்பார்த்திடவும் முடியாது. மனதை உணர்ந்த மனிதனும் இல்லை, மனதை துறந்த மனிதனும் இல்லை. சில ஞான வகுப்பு நிகழ்த்துபவர்கள், மனதை தள்ளிவைத்து வாழ் என்று போதனை சொல்லுகிறார்கள். மனதை கண்டுகொள்ளாதே, அது உன்னை தடுக்கிறது, குழப்புகிறது, அதற்கு கவனம் செலுத்தாதே, உன் மனதிற்கு மதிப்பளிக்காதே என்று பல்வாறாக அறிவுரைகள் தந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படி வாழ்வதுதான் விடுதலை வாழ்க்கை, ஞானம் தேடுதல் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.
மனிதனே மனமாக இருக்கும் பொழுதும், மனமே மனிதனாக இருக்கும் பொழுதும் இது பொருந்தக்கூடியதா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உங்களை உங்கள் மனதிலிருந்து பிரித்தால், தடுத்தால், விலகினால் என்னவாகும்? பிரிக்கவே முடியாத ஒன்றை பிரித்ததாக எண்ணி குழப்பம் தான் மிஞ்சி நிற்கும்.
மனமற்ற நிலை சாத்தியமில்லை. ஆனால் அது, அந்த மனமற்ற நிலை, உங்களுக்கும் எனக்கும் எவருக்கும் தினமும் நடக்கிறது. நடந்துகொண்டே இருக்கிறது. எப்போது என்று தெரியுமா? நம்முடைய தூக்கத்தில் தான். தூக்கத்தில் மனமும் இல்லை, நாமும் இல்லை. அப்படியான தூக்கத்தில் கூட சிலருக்கு கனவுத்தொல்லையும் உண்டு. கனவில் கூட மனதை பிரிக்கமுடியவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறதா?
அப்படியானால் வேறு வழியே இல்லையா, மனமற்ற நிலை சாத்தியப்படுத்திட?
இல்லைதான். ஆனால் மனதில் எண்ணங்களற்ற நிலை சாத்தியமானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல, ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’ ஆம் அதுதான் சிறந்தவழி.
அது எப்படி என்று கேட்கிறீர்களா? இன்னொரு கேள்வி பதிலில் காணலாம்.
வாழ்க வளமுடன்.
-